
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (3.11.2025) ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் 43.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 115 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியவற்றின் சார்பில் மொத்தம் 24.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 72,880 பயனாளிகளுக்கு 296.46 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்றைய தினம் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஆற்காடு, திமிரி, வாலாஜா, அரக்கோணம், காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலகம், தானிய சேமிப்பு கிடங்கு, பால் கொள்முதல் நிலையம், பொது நூலகம், இருப்பிட கட்டடம், பள்ளி வகுப்பறை கட்டடம், உடற்பயிற்சி கூடம், பேருந்து நிழற்கூடம் என மொத்தம் 22.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 92 முடிவுற்ற திட்டப் பணிகளையும், பொதுப்பணித் துறை சார்பில் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் புலிவலம், காவேரிப்பாக்கம், நெமிலி ஊராட்சி ஒன்றியம் மேல்களத்தூர், அம்மூர் மற்றும் கலவை ஆகிய இடங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 9.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 39 வகுப்பறை கட்டடங்களையும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ஆற்காடு, இராணிப்பேட்டை, வாலாஜாப்பேட்டை, மேல்விஷாரம், அரக்கோணம் ஆகிய நகராட்சிகளில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு குழாய் மற்றும் பம்பு அமைக்கும் பணிகள், சமுதாய கழிப்பிடம், பசுமை பூங்கா, பள்ளி வகுப்பறை, பல்நோக்கு கட்டடம், அங்கன்வாடி மையம், பெருந்தலைவர் காமராஜர் நினைவகம் புனரமைப்பு பணிகள் என 11.19 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 18 திட்டப் பணிகள் என மொத்தம் 43.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 115 திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் செக்கடிகுப்பம், வாலாஜா ஊராட்சி ஒன்றியம் திருமலைச்சேரி, திமிரி ஊராட்சி ஒன்றியம் அகரம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள நீர்வரத்துக் கால்வாய்களின் குறுக்கே கட்டப்பட உள்ள 3 உயர்மட்ட மேம்பாலங்கள் மற்றும் திமிரி ஊராட்சி ஒன்றியம் குப்பிடிச்சாத்தம் ஊராட்சியில் துணை சுகாதாரம் நிலையம் கட்டும் பணி என 17.71 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 4 திட்டப் பணிகளுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நெமிலி வட்டம், மேலபுலம் ஊராட்சி தர்மநீதி கிராமம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு வளாகத்தில் 6.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1500 மெட்ரிக் டன் கொள்ள்ளவு கொண்ட 2 கூடுதல் கிடங்குகள் மற்றும் வளாக சுற்றுச்சுவர் அமைக்கும் திட்டப் பணிகளுக்கும் என மொத்தம் 24.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 12,075 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் இயற்கை மரண உதவித் தொகை என 135.29 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு, சமுதாய முதலீட்டு நிதி, வாழ்வாதார நிதி, நுண் நிறுவன நிதிக்கடன், சுய உதவிக் குழு தனிநபர் கடன், ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பு, வட்டார வணிக வள மையம், சுழல் நிதி, இயற்கை பண்ணை தொகுப்பு, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் அடையாள அட்டை என 50,160 குழு உறுப்பினர்களுக்கு 85.58 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளையும், உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை சார்பில் 5,177 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும், தொழிலாளர் நலத் துறை சார்பில் 3,417 பயனாளிகளுக்கு கல்வி, திருமண உதவித் தொகை, விபத்து மரணம் நிவாரணம் என 1.16 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 1,263 பயனாளிகளுக்கு 7.58 கோடி ரூபாய்க்கான பயிர் கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடனுதவிகளையும், தாட்கோ சார்பில் 257 பயனாளிகளுக்கு 1.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சரின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான நலவாரிய அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும்,
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் 180 பயனாளிகளுக்கு தார்பாலின், தெளிப்பு நீர்ப்பாசனம், பவர் டில்லர், நுண்ணூட்ட கலவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு 13.67 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிழல் கூடாரம், நிரந்தர கல்தூண் பந்தல், பண்ணைக் குட்டை, மண்புழு உர கூடாரம், சிப்பம் கட்டும் அறை, நுண்ணீர் பாசனம் அமைத்தல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு பவர் டில்லர்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 150 பயனாளிகளுக்கு 3.35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 45 பயனாளிகளுக்கு 30.29 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சக்கர நாற்காலி, பெட்ரோல் ஸ்கூட்டர், காதொலிக் கருவிகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் 43 பயனாளிகளுக்கு 2.97 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முஸ்லீம் மகளிர் உதவித் தொகை, கிருத்துவ மகளிர் உதவித் தொகை, சலவை பெட்டி, சீர்மரபினர் அடையாள அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு தொழில் வணிக துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் 33 பயனாளிகளுக்கு 110.52 இலட்சம் ரூபாய்க்கான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவிகளையும், மாவட்ட சமூக நலத் துறை சார்பில் 30 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 15 இலட்சம் ரூபாய்க்கான வைப்பு நிதி பத்திரங்களையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்கு 162.24 இலட்சம் ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளயும் என மொத்தம் 72,880 பயனாளிகளுக்கு, 296.46 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.








