அரசியல்

“தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்க பழனிசாமி பயப்படுகிறார்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி அவர்களின் மகன் பிரகதீஸ்வரன் - மது பிரதிக்சா ஆகியோரது திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை.

“தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்க பழனிசாமி பயப்படுகிறார்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (03.11.2025) தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி அவர்களின் மகன் பிரகதீஸ்வரன் - மது பிரதிக்சா ஆகியோரது திருமண விழாவில் ஆற்றிய உரை.

ஆ. மணி அவர்களின் இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு, மணவிழா நிகழ்ச்சியை நடத்தி வைத்து, மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன்.

மணி அவர்களைப் பற்றி இங்கு இருக்கக்கூடிய எல்லோருக்கும் நன்றாக தெரியும். இன்றைக்குக்கூட எந்தச் சூழ்நிலையில் அவர் வந்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியும் என்று நான் கருதுகிறேன். அவர் சில நாட்களுக்கு முன்பு உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நாளைய தினம், ஏன், இன்றைய தினமே சென்னைக்கு சென்று மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கக்கூடிய நிலையில், அவர் இந்த நிகழ்ச்சிக்காக மருத்துவர்களின் அனுமதி பெற்று இங்கு வந்திருக்கிறார்.

அவர் உடல்நலத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தலைவர் வருகிறார்; அதுவும் நம்முடைய வீட்டில் நடைபெறக்கூடிய திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வருகிறார்; உடல்நலத்தைவிட எனக்கு அதுதான் முக்கியம் என்ற அந்த உணர்வோடு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதை எண்ணி நாமெல்லாம் நெகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறோம்.

  • மணி அவர்கள், 1987-ல் இருந்து கழக உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டு களப்பணியாற்றிக் கொண்டு வருகிறார். வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், இவருடைய ஆற்றலைப் பார்த்து, 2016-ல்  மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளராக பொறுப்பேற்றுப் பணியாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றார்.

  • அதனை தொடர்ந்து 2019-ல் நடைபெற்ற பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் கழகத்தின் வேட்பாளராகவும் போட்டியிட்டிருக்கிறார். 

  • அதன் பிறகு, 2020 முதல் 2022 வரை மாவட்டப் பொறுப்புக் குழுவின் உறுப்பினராக பணியாற்றி இருக்கிறார். 

  • 2023-ல் தருமபுரி மேற்கு மாவட்டத் துணைச் செயலாளராக தனது பணியை தொடர்ந்து நிறைவேற்றி இருக்கிறார்.

“தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்க பழனிசாமி பயப்படுகிறார்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இப்படி அடுத்தடுத்து பல பொறுப்புக்கள், அவரைத் தேடி வந்து, அதை அவர் ஏற்றுக்கொண்டு, அவர் பணியாற்றிய சிறப்பான நிகழ்ச்சிகளை எல்லாம் எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில்தான்,  அவர் இப்போது தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றைக்கு நாடாளுமன்றத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறார்.

அதேபோல, இன்றைக்கு தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்து தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். மக்கள் பணியும், கழகப் பணியும் இந்த இரண்டு பணிகளையும் அவர் சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். 

மணி என்கின்ற அவருக்கு முன்னால் அவருடைய இனிஷியல் ‘ஆ’என்ற அந்த “ஆ” தான் அவருடைய இனிஷியலாக அமைந்திருக்கிறது. அவரின் சிறப்பான செயல்களைப் பார்த்து எல்லோருக்கும் ஏற்படுகின்ற வியப்புதான் அது. அப்படி, 'ஆ' என்று எல்லோரும் சொல்லக்கூடிய வகையில் வளர்ந்திருக்கிறார் நம்முடைய ஆ.மணி அவர்கள்.

கழகத்தைப் பொறுத்தவரைக்கும், சிறப்பாக பணியாற்றக்கூடியவர்களுக்கு அதில் பதவிகளாக இருந்தாலும், பொறுப்புகளாக இருந்தாலும் தேடி வரும். அப்படி தேடி வந்த பொறுப்பை தான் இன்றைக்கு அவர் ஏற்றுக்கொண்டு நம்முடைய மணி, பேருக்கு ஏற்றார்போல் மணியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அது மிகையாகாது!

இப்படிப்பட்ட ஒரு செயல்வீரருடைய இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கின்ற நேரத்தில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன்.

நேற்றைய தினம், மிக முக்கியமான தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சென்னையில் நடத்தி முடித்துவிட்டு, நானும், நம்முடைய தொல் திருமாவளவன் அவர்களும், மற்றவர்களும் இன்றைக்கு வந்திருக்கிறோம். 

நேற்று நாம் அந்தக் கூட்டத்தைக் கூட்டி பல்வேறு கருத்துக்களை, ஆலோசனைகளை எல்லாம்  வழங்கி இருக்கிறோம். முக்கியமான தீர்மானத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம் – என்ன என்பதும் உங்களுக்குத் தெரியும்.

அடுத்த ஆண்டு நாம் எதிர்கொள்ள இருக்கக்கூடிய தமிழ்நாடு தேர்தலை அடிப்படையாக வைத்து வாக்காளர் பட்டியலில், ஏற்பட்டிருக்கக்கூடிய SIR என்ற ஒரு திட்டத்தை அவர்கள் மையப்படுத்தி, சீராய்வு என்ற பெயரில், சூழலில், ஒரு தீய செயலை, ஒரு சதிச் செயலைச் செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. அதை தடுப்பதற்கான முயற்சியில், நம்முடைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து பேசி தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். 

அங்கே உரையாற்றிருக்கின்ற அத்தனை பேரும், நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும்; உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்ற கருத்தை வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அதற்குரிய கால அவகாசம் கொடுக்க வேண்டும். பதற்றம் இல்லாத சூழலில்தான் அதை செய்ய வேண்டும்.

அப்படியில்லாமல், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், முழுமையான திருத்தப் பணிகள் செய்ய தேர்தல் ஆணையம் நினைக்கிறது. அதற்குக் காரணம், உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் அது! அதைத்தான் பீகார் மாநிலத்தில் செய்தார்கள்; இப்போது மற்ற மாநிலங்களிலும் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பீகாரில், இதை செய்ய நினைத்தபோது, தொடக்கத்திலேயே தமிழ்நாட்டில் இருந்து முதல் எதிர்ப்புக் குரலை நாம் தான் பதிவு செய்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய காங்கிரஸ் பேரியத்தின் இளந்தலைவராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய திரு. ராகுல் காந்தி அவர்களும், பீகாரின் இளம் சிங்கமாக இருக்கக்கூடிய திரு. தேஜஸ்வீ அவர்களும், அந்த S.I.R-க்கு எதிராக அந்த மாநிலத்தில் பெரிய புரட்சியையே  செய்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கும்  தாக்கல் செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், தேர்தல் ஆணையம் அதற்குரிய பதிலைச் சொல்லவில்லை; உரிய விளக்கத்தையும் சொல்லவில்லை.

பீகார் போலவே, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும், செய்ய நினைக்கிறார்கள். அதைத் தடுத்து நிறுத்தத்தான் நாம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நேற்றைக்குக் கூட்டி  தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். 

நாம் நடத்திய கூட்டத்திற்கு கூட இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக அதில் பங்கேற்கவில்லை. இன்னும் ஓரிரு கட்சிகள் அதில் பங்கேற்கவில்லை. தேர்தல் ஆணையத்தில், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதற்காக நான் உள்ளபடியே அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

“தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்க பழனிசாமி பயப்படுகிறார்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய திரு. பழனிசாமி அவர்கள், இதில்கூட தன்னுடைய இரட்டை வேடத்தைக் காட்டியிருக்கிறார். பா.ஜ.க.,வுக்கு பயந்து, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்கப் பழனிசாமி அவர்கள் பயப்படுகிறார்.

அதேநேரத்தில், அ.தி.மு.க. தொண்டர்களுக்காக ஒரு அறிக்கையையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இன்றைக்கு பத்திரிகைகளிலும் நீங்கள் பார்த்திருக்கலாம். 

இது எதை காட்டுகிறது? தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில், பழனிசாமி அவர்களுக்கு சந்தேகம் இருப்பதைத் தான் அது காட்டுகிறது! ஆனால், அவரால் வெளிப்படையாக இதை எதிர்க்க முடியவில்லை. தான், “பா.ஜ.க.,வின் பாதம்தாங்கி பழனிசாமி” என்பதை நொடிக்கு ஒருமுறை அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

நான் உறுதியாக சொல்கிறேன், பா.ஜ.க. எப்படிப்பட்ட சதிச்செயலைச் செய்தாலும், அவர்களால் தமிழ்நாட்டில் எதுவும் செய்ய முடியாது என்பதை அழுத்தந்திருத்தமாக நான் குறிப்பிட விரும்புகிறேன்.

அதனால் தான் தங்களுடைய திட்டங்கள் தமிழ்நாட்டில் எதுவும் எடுபடவில்லை என்ற ஆத்திரத்தில் தான் நம் மீது இருக்கின்ற வன்மத்தில், இப்போது என்ன பேசுகிறார்கள், அதிலும் குறிப்பாக, மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் சென்று பீகார் மாநிலத்திற்கு சென்று என்ன பேசியிருக்கிறார்? தான் எல்லோருக்குமான பிரதமராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர் மோடி அவர்கள், ஆனால் அங்கே என்ன பேசுகிறார் என்று சொன்னால், தமிழ்நாட்டைக் காட்டி பீகாரில் வெறுப்புப் பேச்சைப் பேசியிருக்கிறார்.

“வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டை” எல்லோரிடமும், சகோதரத்துவத்துடன் பழகும் நம்மைப் பற்றி, இந்த மண்ணில் வாழுகின்ற எல்லோருக்கும் நன்றாக தெரியும். கடந்த 1-ஆம் தேதி வெளியான தினத்தந்தி நாளிதழில் கூட, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் அளித்த பேட்டியை நீங்கள் எல்லாம் பார்த்திரருப்பீர்கள் – அதையெல்லாம் பார்க்கும்போது, எனக்கே பெருமையாக இருக்கிறது.

தமிழ்நாடு எப்படியெல்லாம் தங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது – தங்களுடைய வாழ்க்கைத்தரத்தை எப்படியெல்லாம் உயர்த்தியிருக்கிறது என்று மிகத் தெளிவாக பீகார் மக்கள் தமிழ்நாட்டில் வந்து பணிபுரியக்கூடிய, தொழில் செய்து கொண்டிருக்கக்கூடிய, வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அந்த பீகார் மக்கள் பேசியிருக்கிறார்கள். ஆனால், மாண்புமிகு பிரதமர் அவர்கள் பீகாரில், வாக்கு அரசியலுக்காக அங்கு சென்று நாடகத்தை நடத்தியிருக்கிறார். 

நான் கேட்கிறேன், மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் பீகாரில் பேசிய அதே கருத்தை, இங்கே தமிழ்நாட்டில் வந்து பேச முடியுமா? பேசுவாரா? பேசக்கூடிய தைரியம் இருக்கிறதா? என்ற கேள்வியை தான் நான் கேட்க விரும்புகிறேன்.

யார் என்ன சதி செய்தாலும், எத்தனை அவதூறுகளை பரப்பினாலும், எவ்வளவு போலிச் செய்திகளை எல்லாம் அவர்கள் உருவாக்கினாலும், நான் தெளிவோடு சொல்கிறேன் – இங்கே நம்முடைய தொல் திருமாவளவன் அவர்கள் குறிப்பிட்டது போல, 2026-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி நிச்சயம் அமையும் அமையும் என்று நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அன்றைக்கு அனைத்து சேனலிலும் “திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தது”! என்ற செய்திதான் வரப்போகிறது! அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

தமிழ்நாட்டு மக்கள் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையின் காரணமாக இதை நான் தெளிவோடு சொல்ல விரும்புகிறேன்.

ஏழாவது முறையாக கழகம் ஆட்சி அமைய நீங்கள் எல்லாம் உறுதுணையாக, உற்றத் துணையாக இருக்க வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொண்டு, 2021 தேர்தல், தமிழ்நாட்டை கொத்தடிமை அதிமுகவிடமிருந்து மீட்டிருக்கிறோம் - 2026 தேர்தலில், தமிழ்நாட்டை பா.ஜ.க. - அ.தி.மு.க. கும்பலிடம் இருந்து பாதுகாக்கக்கூடிய தேர்தலாக அமையப் போகிறது.

கலைஞரின் உடன்பிறப்புகளாக இருக்கக்கூடிய நீங்கள் நிரூபிக்கவேண்டும்; அதற்கான வெற்றிக்கு நீங்கள் உழைக்க வேண்டும்! 

இந்த மகிழ்ச்சியான நேரத்தில், மணமக்களிடம் நான் அன்போடு, உரிமையோடும், மணியின் மீது நான் வைத்திருக்கக்கூடிய பாசத்தின் காரணமாகவும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள்;

தமிழுணர்வை தமிழகத்தில் உருவாக்குங்கள்; அதற்கு நீங்கள் உறுதி தரவேண்டும் என்று நான் இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக் கொண்டு, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் எடுத்துச் சொல்லி இருக்கக்கூடிய, “வீட்டிற்கு விளக்காய் - நாட்டிற்குத் தொண்டர்களாய்”மணமக்கள் அனைத்து நன்மைகளும் பெற்று வாழுங்கள்!

banner

Related Stories

Related Stories