தமிழ்நாடு

”நெல் போக்குவரத்து ஒப்பந்த விதிகளின்படி முறையாகச் செய்யப்பட்டுள்ளது” : சக்கரபாணி அறிக்கை!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் போக்குவரத்து, ஒப்பந்த விதிகளின்படி முறையாகச் செய்யப்பட்டுள்ளது.

”நெல் போக்குவரத்து ஒப்பந்த விதிகளின்படி முறையாகச் செய்யப்பட்டுள்ளது” : சக்கரபாணி அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் போக்குவரத்து, ஒப்பந்த விதிகளின்படி முறையாகச் செய்யப்பட்டுள்ளது என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

ஆங்கில நாளேடு ஒன்றில் நேற்றும் இன்றும் (31.10.2025 & 1.11.2025) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் போக்குவரத்து தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களைக் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறேன்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் போக்குவரத்து ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு (2019-24) அதிமுக ஆட்சியில் இறுதி செய்யப்பட்டு, கழக ஆட்சி பொறுப்பேற்ற போது நடைமுறையில் இருந்தது. அந்த ஒப்பந்தப்படி போக்குவரத்துக் கட்டணம் மிகவும் அதிகமாக இருந்ததோடு ஒன்றிய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் திட்டத் துறையினால் 6.5.2019 அன்று வெளியிட்ட நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதலின்படி இல்லை. ஒன்றிய அரசு வழிமுறைகளின்படி இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மண்டல வாரியாகப் போக்குவரத்து ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக ஐந்தாண்டுகளுக்கு மாநில அளவில் ஒப்பந்தம் போடப்பட்டதால் போக்குவரத்துக்காக தரவேண்டிய தொகையை ஒன்றிய அரசு விடுவிக்காமலிருந்தது.

கழக ஆட்சி பொறுப்பேற்ற போது இருந்த இந்நிலையை மாற்றி, அதிமுக ஆட்சியில் ஒன்றிய அரசின் வழிகாட்டு முறைகளுக்கு மாறாகவும் விலை அதிகமாகவும் இருந்த ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பின் அந்தப் போக்குவரத்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

பின்பு, 39 மண்டலங்களுக்கும் (38 மாவட்டங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக வசதிக்காக 39 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன) தமிழ்நாடு திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000-படி மாநில அளவிலும் இந்திய அளவிலும் செய்தித் தாள்களில் விளம்பரம் செய்து மண்டல வாரியாக தனித்தனியாக ஒப்பந்தப்புள்ளிகள் 9.6.2023 அன்று கோரப்பட்டன. 15.7.2023 அன்று ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிப்பதற்கு முன்னதாக ஒப்பந்ததாரர்களுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் (Pre-Bid Meeting) தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் சில திருத்தங்கள் மேற்கொண்டு 10.8.2023 வரை ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பிக்கும் காலம் நீட்டிக்கப்பட்டு, அந்தந்த மண்டலங்களில் முதுநிலை மண்டல மேலாளர் / மண்டல மேலாளர் தலைமையிலான

ஐவர் குழுவால் ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு நிபந்தனைகளை நிறைவு செய்த ஒப்பந்தப்புள்ளிதாரர்களிடம் கட்டணக் குறைப்பிற்காகப் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தி சந்தை நிலவரத்தையொட்டி, கட்டணக் குறைப்பு செய்து மாநில அளவிலான குழுவிற்கு அனுப்பப்பட்டது.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளர், இந்திய உணவுக் கழகச் செயல் இயக்குனர் மற்றும் பொது மேலாளர், இரு மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள், போக்குவரத்து மற்றும் நிதித்துறைகளின் துணைச் செயலாளர்கள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் உள்ளிட்டவர்களைக் கொண்ட மாநில அளவிலான குழு ஆய்ந்து ஒப்புதல் அளித்தபின் மண்டல அளவில் போக்குவரத்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, 15.06.2024 முதல் மண்டல வாரியாகக் குறைந்த விலைப்புள்ளி அளித்த போக்குவரத்து நிறுவனங்களுக்குப் போக்குவரத்து செய்திட மண்டல அளவில் ஆணைகள் வழங்கப்பட்டன.

இதன்படி 2024-25 ஆம் ஆண்டில் நெல் உட்பட இதர பொருட்கள் 1.18 கோடி மெட்ரிக் டன்கள் போக்குவரத்து செய்ததில் ரூ.863.06 கோடி செலவானது. அதாவது ஒரு டன்னிற்கான போக்குவரத்துச் செலவினம் ரூ. 731.40 ஆகும்.

ஆனால் அதிமுக ஆட்சியில் 2020 – 21 ஆம் ஆண்டில் நெல் உட்பட இதர பொருட்கள் 1.20 கோடி மெட்ரிக் டன்கள் அளவிற்குப் போக்குவரத்து செய்ததில் ரூ.1947.14 கோடி செலவாகியுள்ளது. அதாவது ஒரு டன்னுக்கான போக்குவரத்துச் செலவினம் ரூ.1622.24 ஆகும்.

2020 – 21 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியுடன் ஒப்பிடுகையில் பரவலாக்கப்பட்ட போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி முறையில் 2024 – 25 ஆம் ஆண்டில் டன் ஒன்றிற்கான செலவினம் ரூ.890.84 அளவிற்கு குறைந்துள்ளது. இதனால் ஓராண்டிற்கு மட்டும் ரூ.1084.08 கோடி ஒன்றிய மாநில அரசுகளுக்கு மீதமாகியுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டுப் போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில் ஆங்கில நாளேட்டில் தெரிவிக்கப்பட்டது போன்று மாநில அளவிலான மையப்படுத்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளி முறையில் செயல்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறேன்.

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் என் அலுவலகத்தில் கொடுத்த நெல் நகர்வு தொடர்பான மனுவினை உரிய அலுவலர்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். அதே போன்று ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்கக் கோரியுள்ளேன்.

1.9.2025 முதல் 31.10.2025 வரை 12.01 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு மழை மற்றும் பண்டிகை காரணங்களால் ஏற்பட்ட தடங்கல்களையும் மீறி 10.75 இலட்சம் டன் நெல் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்வு செய்யப்பட்டது. இயற்கைச் சீற்றங்களை மீறி லாரிகள் மூலமாகவும் இரயில்கள் மூலமாகவும் நெல் நகர்வு நடைபெற்று வருகிறது. ஆகவே நெல் நகர்வில் தொய்வு என்பது சரியானதல்ல.

போக்குவரத்து ஒப்பந்த விதிகளில் தூரம் ஐந்து பிரிவுகளாகப் (Slab) பிரிக்கப்பட்டுள்ளது. அந்த நாளேட்டில் 5 பிரிவுகளில் 0-8 கிமீ வரை என்ற பிரிவை (Slab) மட்டும் எடுத்துக் கொண்டு செய்தி வெளியிட்டுள்ளார்கள். மற்ற பிரிவுகளை(Slab)க் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஒரு பிரிவை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு நேர்வை மட்டும் வைத்து அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் கணக்கிட்டு, செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

அதேபோன்று மூன்று ஒப்பந்ததாரர்கள் 19 பேர்களுடன் இணைந்து பங்குதாரர்கள் (Partnership) ஆகத் தான் உள்ளனர் என்றும் அது துணை ஒப்பந்தம் (Sublet) அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான கழக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக நெல் போக்குவரத்துக் கட்டணம் வெகுவாகக் குறைந்துள்ளது. விவசாயிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட முதலமைச்சர் அவர்கள் இரண்டு முறை ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி நெல் கொள்முதல் மற்றும் நகர்வினைத் துரிதப்படுத்தியுள்ளார்கள். தெற்கு இரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் மூலம் 11-க்கும் மேற்பட்ட வேகன்களில் 24.10.2025 அன்று ஒரே நாளில் மட்டும் 21000 மெட்ரிக் டன் நெல் தமிழ்நாடு முழுதும் பாதுகாப்பாக இயக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆதலால், நெல் கொள்முதலும் நகர்வும் துரிதமாக நடைபெற்று வருகிறது .

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories