
விருதுநகர் மாவட்டம், சேத்தூர் பகுதியை சேர்ந்தவர் பட்டுராஜன. இவர் சேத்தூர் பேரூராட்சி 8-வது வார்டு அதிமுக செயலாளராக உள்ளார். அதேபோல் அ.தி.மு.க மகளிரணி பொறுப்பாளர் ராணி நாச்சியார் மற்றும் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கந்தலீலா ஆகிய மூன்று பேரும் இணைந்து PSK என்ற அறக்கட்டளையை நடத்தி வந்துள்ளனர்.
இந்த அறக்கட்டளையை பயன்படுத்தி, பொதுமக்களிடம் ரூ.1 லட்சம் கொடுத்தால் மூன்றே மாதத்தில் ரூ.5 லட்சமாக கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி 100க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.1 கோடியே 30 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ராஜபாளையத்தை சேர்ந்த பழனிவேல் என்பவர் சி.பி.சி.ஐ.டி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து பட்டுராஜன், கந்தலீலா, ராணி நாச்சியார் ஆகிய 3 பேரையும் விருதுநகர் சிபிசிஐடி போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி அவர்களையும் கைது செய்ய சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் மோசடி வழக்கில் கைதாகி உள்ளது விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








