மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டியுள்ள நிலையில், அங்கு அணையின் பாதுகாப்பு கருதி, பொதுமக்களுக்கு இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் அணைக்கு வரும் உபரிநீர் ஆற்றின் வழியாக வெளியேற்றப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி விநாடிக்கு 1,000 கன அடி வீதம் அணையின் 7 பெரிய மதகுகள் வழியாக வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்திற்கேற்ப உபரி நீர் வெளியேற்றத்தின் அளவும் அதிகரிக்கக்கூடும் என்பதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை கரையோரம் வசிக்கக்கூடிய பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நீர்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி அணையின் நீரிருப்பு 5,572 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 6,071 கன அடியாக இருக்கிறது. அதே போல வழக்கம்போல குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1,349 கன அடி நீர் கால்வாய் வழியாக சென்று கொண்டிருக்கிறது.