தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மாநகரில் தொடங்கி வைத்த உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி பெற்றுள்ளது என தமிழ்நாடு அரசு பெருமையுடன் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உலகப் புத்தொழில் மாநாடு 2025-ஐ கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வர்த்தக வளாகத்தில் 9.10.2025 அன்று தொடங்கி வைத்தார்கள். அந்த மாநாடு இரண்டு நாட்கள் மிக சிறப்பாக நடைபெற்று உலகில் தலை சிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாடு எழுச்சி பெறும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமான Startup TN இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்தது. தமிழ்நாட்டின் புத்தாக்க தொழில் சூழலை உலக அளவில் நிலை நிறுத்துவதே இதன் நோக்கம். இம்மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து புத்தாக்க தொழில் நிபுணர்கள், நிறுவனங்கள், புத்தாக்க சிந்தனையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் புத்தொழில் சூழல் செயல்பாட்டாளர்கள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
புத்தாக்க தொழில்களை வலுப்படுத்த திராவிட நாயகர் அவர்கள் அறிவித்த ரூ.100 கோடி நிதி:
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றும் பொழுது தமிழ்நாட்டில் முதலீட்டு சூழலை வலுப்படுத்தும் நோக்கில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீட்டில் இணை உருவாக்க நிதியத்தினை (Fund of Funds) அறிவித்தார்கள். இதன் மூலம் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் வழியாக தமிழ்நாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யும் துணிகர முதலீட்டு நிறுவனங்களில் அரசு முதலீடு செய்யும். இதன் மூலம் தமிழ்நாட்டில் துணிகர முதலீட்டு நிறுவனங்கள் அதிகமாகும் மேலும் உலகின் பிற இடங்களில் உள்ள துணிகர முதலீட்டு நிறுவனங்களை தமிழ்நாட்டினை நோக்கி ஈர்ப்பதற்கு வழிவகுக்கும்.
முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட "தமிழ்நாடு புத்தொழில் சூழல் தொலைநோக்கு அறிக்கை 2035"
முதலமைச்சர் அவர்கள் தொடக்க விழாவில் ஸ்டார்டப் ஜீனோம் அமைப்பு தயாரித்த “தமிழ்நாடு புத்தொழில் சூழல் தொலைநோக்கு அறிக்கை 2035” என்ற அறிக்கையின் முதல் நிலை பணித்திட்ட வரைவினை வெளியிட்டார்கள். அத்துடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் Inc 42 நிறுவனத்தின் The State of Tamil Nadu Startup Ecosystem” எனும் அறிக்கையையும் வெளியிட்டார்கள்.இது தமிழ்நாட்டின் புத்தொழில் சூழல் வளர்ச்சியினை தரவு மற்றும் ஆதாரங்களுடன் விளக்குகிறது.
அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் திட்டமான மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மானிய நிதிக்கான ஒப்புதல் ஆணைகளை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
தமிழ்நாட்டின் உலகளாவிய தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் பெல்ஜியம் நாட்டினைச் சேர்ந்த ஹப் பிரசல்ஸ் என்னும் அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு தமிழ்நாட்டினைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனங்களுக்கு அந்நாட்டில் நிறுவனங்களின் விரிவு செய்வதற்கு அனுமதி கடிதங்களை வழங்கியது.
இந்த மாநாடு தமிழ்நாடு அனைவரையும் உள்ளடக்கிய திறன்மிக்க உலகளாவிய தொடர்புகளை உடைய புத்தொழில் சூழமைவு கொண்ட நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்று என்பதனை நிறுவும் விதமாக நடந்தது.
மாநாட்டினால் ஏற்பட்ட நன்மைகள்
இரண்டு நாட்களில் 72,278 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர் இது நாட்டின் மிகப்பெரிய புத்தொழில் மாநாடாக அமைந்தது. நிறுவனங்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பன்னாட்டு தொழில் முனைவு ஆளுமைகள் பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் 609 ஆளுமைகள் உரை நிகழ்த்தியுள்ளனர். இதில் 328 பேச்சாளர்கள் உலகின் பிற நாடுகளில் இருந்து வருகை புரிந்தவர்கள், 283 பேச்சாளர்கள் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து பங்கேற்றவர்கள். தொழில் முனைவு ஆளுமைகள் பலரும் இணைந்து கொள்கை வடிவமைப்பு புத்தாக்க தொழில்கள், நிலைத்த வளர்ச்சி மற்றும் உலக நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர்.
முதலீட்டாளர் சந்திப்பு அமர்வுகள் மாநாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அமைந்தன. 115 முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். 453 புத்தொழில் நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் முன் தங்களது நிறுவனங்களை அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் முதலீட்டு வாய்ப்புகள் வழிகாட்டுதல் மற்றும் இணைப்பு முயற்சிகள் உருவாகின.
மாநாட்டுக்கு முன்பாக ரூபாய் 127.09 கோடி முதலீட்டு உறுதிப்பாடு கிடைத்தது. மேலும் பல ஒப்பந்தங்கள் அடுத்த மாதங்களில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1012 அரங்குகளுடன் மாபெரும் புத்தொழில் மற்றும் புத்தாக்க கண்காட்சி நடைபெற்றது. இதில் 21 நாடுகளில் இருந்து அரங்குகள் அமைத்திருந்தனர். 12 பெரு நிறுவனங்கள், இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த 8 புத்தொழில் இயக்கங்கள், புத்தொழில் மற்றும் புத்தாக்க தொழில் முனைவோர்களுக்கு ஆதரவு தரும் தமிழ்நாடு மற்றும் ஒன்றிய அரசின் துறைகள் அனைத்தும் பங்கேற்று இருந்தன. கோயம்புத்தூர் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர்களுக்கான பிரத்யேகமான அரங்கம் ஆகியவையும் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன.
கூகுள், மெட்டா, போன்பே போன்ற நிறுவனங்களின் தனித்துவமான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
பிரான்ஸ் நாட்டின் லிங்க் இன்னோவேஷன்ஸ், கனடா நாட்டின் RXN ஹப், ஜெர்மனி நாட்டின் ஆசியா பெர்லின் அமைப்பு உள்ளிட்ட பன்னாட்டு தொழில் அமைப்புகள் மற்றும் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு நாட்களில் மொத்தம் 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இதனால் தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு உலகளாவிய அளவில் புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும் மேலும் சிறப்பு வாய்ந்த தொழில் வளர் பயிற்சிகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும்.
முக்கியமாக கோவை மாநாடு தமிழ்நாட்டின் சமூக நீதி சார்ந்த அனைவரையும் இணைக்கும் தொழில் முனைவு உறுதிபாட்டை மீண்டும் வலியுறுத்தியது.
மாற்றுத்திறனாளிகள்,மூன்றாம் பாலினத்தவர் பெண்கள், ஊரகப் பகுதியினை சார்ந்த புத்தொழில் நிறுவனர்கள் ஆகியோரின் பங்களிப்பு மூலம் உண்மையான இணைப்பு மற்றும் சம வாய்ப்பு உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் புத்தொழில் சூழல் வலுப்பெற்று முதலீட்டாளர்களின் நம்பிக்கை உயர்ந்து வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். இது தமிழ்நாட்டை 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் இலக்கை நோக்கி நகர்த்தும் முக்கிய அடித்தளமாக அமைந்தது.
நிறைவு விழா
மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் டாக்டர் ஜெ ஜெயரஞ்சன் அவர்கள் 22 நிறுவனங்களில் தொடக்கநிலை தொழில் வளர் காப்பகங்களை (ஒன்றுக்கு ரோ.7.5 லட்சம்) அமைக்க ஆணைகளை வழங்கினார். மேலும் 15 தொழில் வளர் காப்பகங்களுக்கு தலா 5 லட்சம் வீதம் ரூபாய் 75 லட்சம் வளர்ச்சி நிதி வழங்கினார். மேலும் Startup TN Venture builder scheme திட்டத்தின் கீழ் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் புதிய புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கும் திட்டத்திற்கு 10 நிறுவனங்களுக்கு அனுமதி ஆணைகளை வழங்கினார்.
இந்த மாநாடு, ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற முதலமைச்சரின் கனவினை நனவாக்கும் பாதையில் புத்தொழில் நிறுவனங்களின் பங்களிப்பினை ஊக்குவிப்பதற்கு ஒரு அடித்தளமாக அமைந்தது என்று கூறலாம்.