கரூரில் கடந்த செப்.27-ம் தேதி விஜய் நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த அன்றே பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்கியதோடு, இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த கூட்ட நெரிசலுக்கு விஜய் கட்சியினர் பலரும் அரசுக்கு எதிராக அவதூறு பரப்பிய நிலையில், அதற்கும் வீடியோ ஆதாரத்துடன் இதற்கு காரணம் விஜய் ரசிகர்கள் என்று அரசு அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர். மேலும் குறிப்பிட்ட நேரத்தில் விஜய் வராமல், நேரத்தை இழுத்தடித்ததும், அவரது முகத்தை காட்டாமல் ரோட் ஷோ மேற்கொண்டதும் இந்த கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக பொதுமக்கள், அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த சூழலில் சம்பவம் நடந்த அன்று பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு கூட பதிலளிக்காமல் பனையூருக்கு பறந்த விஜய், 3 நாட்கள் கழித்து வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவிலும் இந்த நிகழுவத்தில் அரசியல் செய்யும் வகையில் பேசியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து பெரிதாக பேசாமல், கடந்து செல்ல முயன்ற விஜய், இறுதியில் தமிழ்நாடு அரசு மீது வெறுப்பை விதைக்கும் வகையில் பேசியுள்ளதற்கும் கடும் கண்டனங்கள் எழுந்தது.
இந்த சூழலில் கரூர் துயரம் குறித்த வழக்கு கடந்த அக்.03-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய்க்கும், விஜய் கட்சியினருக்கும் நீதிபதி செந்தில் குமார் தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார்.மேலும் விஜய் கட்சி நடத்தும் விதத்தையும், அவர் ரசிகர்கள் நடந்துகொள்ளும் விதத்தையும் கடுமையாக விமர்சித்தார்.
அதோடு விஜய் பிரச்சார வாகனம், அருகே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியும், கண்டுகொள்ளாமல் விஜய் சென்றதற்கும் நீதிபதி தனது கண்டனத்தை தெரிவித்தார். அதோடு, பிரச்சார வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை என்றும், ஓட்டுநர் மீது ஏன் வழக்குபதியவில்லை என்றும் போலீசாருக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது நாமக்கல்லில் பிரச்சாரத்தை முடித்த விஜய், கரூருக்கு சென்றுகொண்டிருந்த நேரத்தில், நாமக்கல்லில் இருந்து இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த ரசிகர்களில், இரண்டு பேரின் இரு சக்கர வாகனம், விஜயின் பிரச்சார வாகனத்தில் மோதியது.
அப்போது அவர்கள் இடறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. அந்த நேரத்திலும் விஜய் பிரச்சார வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் கண்டனத்தை எழுப்பியதோடு, நீதிபதியும் கண்டனத்தை தெரிவித்தார். இந்த நிலையில், விஜய் பிரச்சார வாகன ஓட்டுனர் மீது BNS பிரிவு 281-ன் கீழ், (உயிருக்கு ஆபத்து விளைவித்தல், மற்றவர்களுக்கு காயம் ஏற்படுத்துதல்) கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதோடு அந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த அடையாளம் தெரியாத நபர் மற்றும் fz பைக் ஓட்டி வந்த சந்துரு ஆகியோர் மீதும் அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் வாகனத்தை ஓட்டி வந்ததாக வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.