தமிழ்நாடு

“ஆள் சேர்க்கும் அசைன்மென்டில் பழனிசாமி... இரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணி பாஜக” : முதலமைச்சர் விளாசல் !

மூன்றாவது முறை மக்களின் ஆதரவு குறைந்து ஒரு சிலரின் ஆதரவோடு ஆட்சி அமைத்த பிறகு, ஆர்எஸ்எஸ் பாதையில் வேகமாக நடைபோட ஆரம்பித்திருக்கிறது பாஜக.

“ஆள் சேர்க்கும் அசைன்மென்டில் பழனிசாமி... இரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணி பாஜக” : முதலமைச்சர் விளாசல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.9.2025) இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு:-

* நெஞ்சை அள்ளும் அழகிய கடற்கரை மாவட்டமான இராமநாதபுரத்துக்கு வந்திருக்கிறேன்.

* அனைத்து மதங்களையும், சமூகங்களையும் சேர்ந்த மக்கள் நல்லிணக்கத்துடன் வாழுகின்ற மண் இந்த மண்!

* பத்தாம் நூற்றாண்டில், சோழர்கள் பெரும் பேரரசாக நிலை கொள்வதற்கும், பதின்மூன்றாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் ஏற்றம் பெறவும், அரசப்படையில் நின்றவர்கள் இந்த இராமநாதபுரம் மண்ணைச் சேர்ந்தவர்கள். இப்படி எத்தனையோ பெருமைகளுக்கு சொந்தமான இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் இந்த அரசு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள். பெயரில் ராஜா என்று இருந்தாலும் அவர் எப்போதுமே மக்கள் தொண்டர்! செயலில் எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருப்பவர் கண்ணப்பன் அவர்கள்! இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற மிகுந்த ஒத்துழைப்பை வழங்கி உழைத்திருக்கக்கூடிய, இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் - கழகத்தின் மூத்த முன்னோடி காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமி அவர்களின் அருமை மகன்.

“ஆள் சேர்க்கும் அசைன்மென்டில் பழனிசாமி... இரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணி பாஜக” : முதலமைச்சர் விளாசல் !

தென்மண்டலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்ற செயல்வீரர்களில் முக்கியமானவர் என்னுடைய அன்புத்தம்பி முத்துராமலிங்கம் அவர்கள். அதேபோல், அருகில் இருக்கின்ற மாவட்டமாக இருந்தாலும், தன்னுடைய சொந்த மாவட்டத்துக்கு முக்கியத்துவம் தருவதுபோல, இராமநாதபுரத்தையும் கவனிக்கிறார் நம்முடைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்.

அவரும் இந்த விழாவுக்கு வந்திருக்கிறார். நம்முடைய மக்கள் பிரதிநிதிகளுக்கு துணையாக மட்டுமல்ல, இராமநாதபுரம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கின்ற மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்களுக்கும், மாவட்டத்தின் அரசு அலுவலர்கள் எல்லோருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்தவுடன் என்னுடைய நினைவுக்கு வந்தது ஆங்கிலேய அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, போர் நடத்தி, சிறையிலேயே மாண்டு போன வீரரான சேதுபதி மன்னரைப் பெருமைப்படுத்தும் வகையில், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்கு ‘சேதுபதி நகர்’ என்று பெயர் சூட்டியவர் முதலமைச்சராக இருந்த நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!

* 1974-ஆம் ஆண்டு தமிழ்நாடு உப்புக் கழகத்தை இராமநாதபுரத்தில் தான் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அன்றைக்கு தொடங்கினார்.

* ஒரு காலத்தில், இராமநாதபுரம் மாவட்டம் என்றால், ‘தண்ணீர் இல்லாத காடு’ என்று சொல்வார்கள். அந்த நிலைமையை மாற்றிக் காட்டிய அரசுதான் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு!

இந்த அடியேன் அன்றைக்கு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில்தான், இராமநாதபுரம் மாவட்டத்தில், குடிதண்ணீருக்காக தவித்த மக்களுக்கு 616 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த 3 ஆண்டுகள் தேவைப்படும் என்று அதிகாரிகள் சொன்னார்கள். குடிநீர்ப் பிரச்சினை என்கின்ற காரணத்தால், “எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்கவேண்டும்” என்று நான் சொன்னேன். அதன்படி, இரண்டே ஆண்டுகளுக்குள்ளாக மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றிய ஆட்சிதான் நம்முடைய தி.மு.க. ஆட்சி! இதற்காக, அந்த டைமில் மாதத்துக்கு 3 முறையாவது இராமநாதபுரத்துக்கு வந்து நான் ஆய்வு நடத்தினேன். அதையெல்லாம் இப்போது நினைவுக்கு வருகிறது.

“ஆள் சேர்க்கும் அசைன்மென்டில் பழனிசாமி... இரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணி பாஜக” : முதலமைச்சர் விளாசல் !

இப்போது நான் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், கூட்டுக் குடிநீர்த் திட்டம் விரிவுபடுத்தக்கூடிய வகையில் உத்தரவிட்டு, அந்தப் பணிகள் இப்போது விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பழைய திட்டத்தின் மூலம் 87 ஆயிரத்து 500 பேர் பயன் பெறுகிறார்கள். இப்போது விரிவுபடுத்தப்படுகின்ற காரணத்தால், 2 இலட்சத்து 95 ஆயிரம் பேர் பயனடையப் போகிறார்கள்.

இங்கே வருவதற்கு முன்பு தான் அந்த துறையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய அமைச்சர் நேரு அவர்களிடம் பேசினேன். டிசம்பர் மாதத்தில் விரிவுபடுத்தக்கூடிய அந்தத் திட்டத்தை துவங்கிவிடலாம் என்று உறுதியுடன் சொன்னார். அப்படி தொடங்கும்போது, இராமநாதபுர மாவட்டத்தின் 3 இலட்சத்து 82 ஆயிரத்து 500 நபர்களுடைய வீடுகளுக்கு தண்ணீர் வழங்கப் போகிறோம். இனிமேல், யாரும் எப்போதும், இராமநாதபுரம் மாவட்டத்தை தண்ணீர் இல்லாத காடு என்று சொல்ல முடியாது.

அதுமட்டுமல்ல,

  • * இராமநாதபுரம் மாவட்டத்தின் வேளாண் வளர்ச்சிக்காக பார்த்திபனூரில் மதகு அணை கட்டப்பட்டது கழக ஆட்சியில் தான்.

  •  கண்மாய், ஊரணிகளை முழுமையாக தூர்வாரி - வரத்துக் கால்வாய் அமைத்து, அதன் மூலமாக, விவசாயிகள் இப்போது பயனடைகிறார்கள்.

  •  கடலாடி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அண்ணன் சுப.தங்கவேலன் அவர்கள், சட்டமன்றத்தில் அன்றைக்கு ஒரு கோரிக்கையை வைத்தார். இராமநாதபுரம் மாவட்டத்தில், கிராம சாலைகள்தான் இருக்கிறது; நெடுஞ்சாலைகள் இல்லை என்று சொன்னார். உடனே, முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் 500 கிலோ மீட்டர் கிராம சாலையை நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கின்ற வகையில் மாபெரும் திட்டத்தை வகுத்துத் தந்து செயல்படுத்தினார்.

  •  இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை ஏற்றுக்கொண்டு, தேவிபட்டினம் செல்லும் பகுதியில், ‘அண்ணா அரசு பொறியியல் கல்லூரி’-யை முதலமைச்சர் கலைஞர் அமைத்தார்.

  •  மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்தது மட்டுமல்ல, ஆரம்ப சுகாதார நிலையங்களை மருத்துவமனையாக தரம் உயர்த்தியதால் இன்றளவும் பொதுமக்கள் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.

  •  சுனாமியால் பாதிக்கப்பட்ட ஏழை - எளிய மீனவர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் இராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், தொண்டி, சாயல்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 5 ஆயிரம் சுனாமி குடியிருப்புகள் கழக ஆட்சியில் கட்டி தரப்பட்டது. இதனால், கான்கிரீட் வீடுகளில் மீனவர்கள் குடியேறினார்கள்.

  •  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டது.

  •  இராமநாதபுரம் – கீழக்கரை இடையே, பாலைவனப் பூங்கா அமைக்கப்பட்டது. இப்படி, சொல்லிக்கொண்டே போகலாம்!

  • அதுமட்டுமல்ல, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியிலும், நிறைய திட்டங்கள் இராமநாதபுரம் மாவட்டத்துக்கு கடந்த நான்கரை ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

  •  தனுஷ்கோடி மேம்பாடு அரியமான் கடற்கரையில், சாகச சுற்றுலா மையம் அமைக்க ஏற்பாடு

  •  இராமநாதசாமி கோயிலில், 17 திருப்பணிகள் மாஸ்டர் பிளான் பணிகள்

  •  நெடுஞ்சாலைத் துறை சார்பில், 219 பணிகள்

  •  154 புதிய கட்டடங்கள்

  •  நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், 231 பணிகள்

  •  22 மினி பேருந்துகள்

  •  திருவாடானை அணைக்கட்டு

  •  90 கூட்டுறவு சங்கங்களுக்கு பால் தரப் பரிசோதனைக் கருவிகள் என்று மொத்தமாக 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பிலான 46 ஆயிரத்து 770 வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றிருக்கிறது.

  •  12 ஆயிரத்து 105 கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

  • இது மட்டுமல்ல, நம்முடைய அரசின் மாநில அளவிலான முத்திரைத் திட்டங்களில், இராமநாதபுரம் மாவட்டத்தில் எத்தனை பேர் பயனடைகிறார்கள் என்று விபரத்தை சொல்ல வேண்டும் என்று சொன்னால்,

  •  2 இலட்சத்து 36 ஆயிரம் சகோதரிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.

  •  8 இலட்சத்துக்கும் மேற்பட்ட உழவர்கள் பல்வேறு உதவித் தொகைகளை பெற்றிருக்கிறார்கள்.

  •  83 ஆயிரத்து 483 குழந்தைகளுக்கு தினந்தோறும் ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு அன்புடன் பரிமாறப்படுகிறது.

  •  ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 543 மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தரப்பட்டிருக்கிறது.

  •  55 ஆயிரம் மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

  •  24 ஆயிரத்து 722 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியிருக்கிறோம்.

  •  6 ஆயிரம் பேருக்கு கலைஞர் கனவு இல்லம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

  •  பட்டியலின மக்களுக்காக நாம் செயல்படுத்தி வருகின்ற பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாக 78 ஆயிரம் ஆதி திராவிட மக்கள் பயனடைந்திருக்கிறார்கள்.

“ஆள் சேர்க்கும் அசைன்மென்டில் பழனிசாமி... இரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணி பாஜக” : முதலமைச்சர் விளாசல் !

புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் என்று நம்முடைய திராவிட மாடல் அரசின் மாணவர்களுக்கான திட்டங்களை சேர்த்தால் இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும்! அதில் பயனடைந்த சில மாணவர்கள் தங்களுடைய சக்சஸ் ஸ்டோரியை சமீபத்தில் சென்னையில் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடத்திய ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில் அங்கு மாணவர்கள் விவரித்தார்களே, பேசினார்களே, நீங்கள் எல்லாம் கண்டிப்பாக செய்திகளிலும், சோஷியல் மீடியாவிலும் பாத்திருப்பீர்கள்.

- இப்படி ஒவ்வொருவருடைய தேவையையும் கனவையும் நிறைவேற்றுகின்ற அரசாக கழக அரசு செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகதான் இன்றைக்கு இந்த விழா நடைபெறுகிறது!

மொத்தம், 738 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கான விழாவாக இந்த விழா! மிக முக்கியமாக,

 இராமநாதபுரம் பேருந்து நிலையம்,

 தங்கச்சி மடம் அரசு மேல்நிலைப் பள்ளிக் கட்டடம்,

 கோவிலாங்குளத்தில் சமூகநீதி விடுதி,

 பரமக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி ஆகியவற்றை திறந்து வைத்திருக்கிறேன்.

இவ்வளவு சொன்னாலும், இங்கே வந்துவிட்டு புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் நான் போக முடியாது? நம்முடைய அமைச்சர், M.L.A., உள்ளிட்டோர் முன் வைத்திருக்கக்கூடிய கோரிக்கைகளின் அடிப்படையில்,

9 புதிய அறிவிப்புகளை நான் இப்போது வெளியிடப் போகிறேன்.

முதலாவது அறிவிப்பு –

இராமநாதபுரம் நகராட்சியில் தேசிய நெடுஞ்சாலைப் பகுதி நான்குவழித் தடத்திலிருந்து ஆறுவழித் தடமாக 30 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

இரண்டாவது அறிவிப்பு –

திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டங்களில் இருக்கின்ற 16 முக்கிய கண்மாய்கள் 18 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

மூன்றாவது அறிவிப்பு –

கீழக்கரை வட்டத்தில் இருக்கின்ற உத்திரகோசமங்கை, வித்தானூர் உள்ளிட்ட 6 கண்மாய்கள் 4 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்படும்.

நான்காவது அறிவிப்பு –

கடலாடி வட்டத்திலுள்ள செல்வானூர் கண்மாய் 2 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சிக்கல் கண்மாய்கள் 2 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மறுசீரமைக்கப்படும்.

ஐந்தாவது அறிவிப்பு –

பரமக்குடி நகராட்சிக்கு 4 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்படும்.

ஆறாவது அறிவிப்பு –

இராமநாதபுரம் நகராட்சியின் பழைய பேருந்து நிலையம் நவீன வணிக வளாகமாக மாற்றி அமைக்கப்படும்.

ஏழாவது அறிவிப்பு –

இராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் வசதிகளை மேம்படுத்தி, புதிய பாடப் பிரிவுகளை தொடங்கும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் புதிய - கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படும்.

எட்டாவது அறிவிப்பு –

கீழக்கரை நகராட்சிக்கு 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய அலுவலகக் கட்டடமும், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன மீன் அங்காடியும் கட்டப்படும்.

ஒன்பதாவது அறிவிப்பு –

கமுதி பகுதி விவசாயிகளின் நலன்கருதி, ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.

இந்த 9 அறிவிப்புகளும் விரைவில் செயல்பாட்டிற்கு வரும்!

“ஆள் சேர்க்கும் அசைன்மென்டில் பழனிசாமி... இரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணி பாஜக” : முதலமைச்சர் விளாசல் !

இராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்துவிட்டு, மீனவ நண்பர்கள் பற்றி பேசாமல் இருக்க முடியுமா! காரணம் அந்தளவுக்கு, மீனவர்கள் நிறைந்து வாழக்கூடிய மாவட்டம் இந்த மாவட்டம்.

கடலோர மாநிலமான தமிழ்நாட்டில், ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுகின்ற தொழிலாக மீன் வளத் தொழில் இருக்கிறது. அதில், 25 விழுக்காடு இந்த இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டுமே நடைபெறுகிறது.

கடந்த, 2023-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் மாநாட்டில் கலந்து கொண்டு நான் பேசினேன். அப்போது சொன்னேன். மீனவர்கள் நலனுக்காக மொத்தம் 10 அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தேன். அந்த பத்து அறிவிப்புகளுமே நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் நான் இங்கே பதிவு செய்கிறேன்.

இன்னும் சொல்லப் போனால், அறிவிப்பில் குறிப்பிட்டதை விடவும், அதிகமாகவே செயல்படுத்தி வருகிறோம் என்று பெருமையுடன் நான் இங்கு பதிவு செய்கிறேன். எடுத்துக்காட்டாக, 45 ஆயிரம் பேருக்கு மீன் பிடி தொழிலுக்கான கூட்டுறவுக் கடன் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தேன். ஆனால், இன்று வரை மொத்தம் 81 ஆயிரத்து 588 மீனவர்களுக்கு, 687 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. சொன்னதைச் செய்யும், சொன்னதைத் தாண்டியும் நன்மை செய்யும் ஆட்சி இது!

அதேபோல, கடுமையான உழைப்புக்கு புகழ்பெற்ற நம்முடைய இராமநாதபுரம் மீனவர்கள் கோரிக்கையை ஏற்று, நீங்கள் கேட்ட இடங்களில் எல்லாம்,

 மீன் இறங்கு தளங்கள்,

 கூடுதல் கட்டமைப்பு வசதிகள்,

 தூண்டில் வளைவு, போன்ற வசதிகளை ஏற்படுத்தி தந்திருக்கிறோம்.

 மேலும், மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை 8 ஆயிரமாக உயர்வு!

 மானிய டீசல் அளவு உயர்வு

 வீட்டுமனைப் பட்டா என்று அனைத்துமே செய்து கொடுத்திருக்கிறோம்!

நாம் இவ்வளவு செய்து கொடுத்தாலும், நம்முடைய மீனவர்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சினை, இலங்கைக் கடற்படையால் ஏற்படுகின்ற தாக்குதல். இதை நாம் தொடர்ந்து அதில் ஈடுபட்டு கண்டிக்கிறோம், போராட்டம் நடத்துறோம்! ஆனால், ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, நம்முடைய மீனவர்களைக் காக்க எதுவும் செய்யவில்லை.

கச்சத்தீவை மீட்பதுதான் சரியான தீர்வாக அமையும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி இருக்கிறோம். இதை வைத்து இலங்கை அரசுக்கு ஒன்றிய பாஜக அரசாங்கம் ஒரு கோரிக்கை வைத்திருக்க வேண்டும். அதை செய்ய கூட பாஜக அரசு மறுக்கின்றது. இலங்கை சென்ற இந்தியப் பிரதமரும் இதை வலியுறுத்த மறுக்கிறார். கச்சத்தீவை தர மாட்டோம் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் சொல்லுகிறார். இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஏதாவது மறுப்பு பேசியிருக்க வேண்டுமா? வேண்டாமா?

“ஆள் சேர்க்கும் அசைன்மென்டில் பழனிசாமி... இரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணி பாஜக” : முதலமைச்சர் விளாசல் !

தமிழ்நாட்டு மீனவர்கள் என்றால் மட்டும் அவர்களுக்கு இளக்காரமாக போய்விட்டது? நாம் இந்தியர்கள் இல்லையா? தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே ஒன்றிய பாஜக அரசுக்கு ஏன் கசக்கிறது? தமிழ்நாடு மீது அவர்களுக்கு இருக்கின்ற வன்மத்தை எப்படியெல்லாம் காட்டுகிறார்கள் என்று நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

 ஜி.எஸ்.டி.யால் நிதி உரிமை போய்விட்டது,

 நிதிப் பகிர்விலும் ஓரவஞ்சனை,

 சிறப்புத் திட்டம் எதையும் அறிவிக்க மாட்டார்கள்.

 பள்ளிக் கல்விக்கான நிதியை தரமாட்டார்கள்.

 பிரதமர் பெயரில் இருக்கின்ற ஒன்றிய அரசுத் திட்டங்களுக்கும் நாம் தான் படியளக்க வேண்டும்!

இதெல்லாம் போதாது என்று, நீட், தேசியக் கல்விக் கொள்கை என்று கல்வி வளர்ச்சிக்கும் தடை!

 கீழடி அறிக்கைக்கு தடை!

 எல்லாவற்றிற்கும் மேல் தொகுதி மறுவரையறை!

இப்படி, தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்வதையே ஒன்றிய பா.ஜ.க. அரசு வழக்கமாக செய்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டை மூன்று முறை மிகப்பெரிய பேரிடர் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் உடனே வராத, நிதி தராத ஒன்றிய நிதி அமைச்சர் கரூருக்கு மட்டும் உடனே வருகிறார். மணிப்பூர் கலவரம், குஜராத் விபத்துகள், கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனே விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறார்கள் என்றால், தமிழ்நாட்டு மக்கள் மீது இருக்கின்ற அக்கறையால் கிடையாது.

இங்கேதான் நீங்கள் கவனிக்க வேண்டும் - அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது! “இதில் ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்குமா? இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா? உருட்டலாமா?” என்று பார்க்கிறார்கள். யாருடைய ரத்தத்தையாவது உறிஞ்சி உயிர்வாழத் துடிக்கின்ற ஒட்டுண்ணியாக தான் பா.ஜ.க. இருக்கிறது. மாநில நலன்களை புறக்கணித்து, மாநில உரிமைகளை பறித்து, இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், மாநிலங்களே இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படுகின்ற ஒன்றிய பாஜக-வுடன் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக-வும் கூட்டணி வைத்துக் கொண்டு அடிமை சாசனம் எழுதி கொடுத்த தலையாட்டி பொம்மையாக இருக்கிறார்கள். பாஜக-வை அதிமுக ஆதரிப்பதற்கு ஏதாவது கொள்கை அடிப்படை இருக்கிறதா? பொது காரணம் இருக்கிறதா? மக்கள் நலன் அடிப்படை ஏதாவது இருக்கிறதா? குறைந்தபட்ச செயல் திட்டம் ஏதாவது இருக்கிறதா? எந்த கோரிகையாவது முன் வைத்து கூட்டணி சேர்ந்திருக்கிறார்களா? எதுவும் கிடையாது. தவறு செய்தவர்கள் அத்தனை பேரும் அடைக்கலமாகி தங்களுடைய தவறுகளிலிருந்து தப்பிப்பதற்காக வாஷிங் மிஷின் தான் பாஜக. அந்த வாஷிங் மிஷினில் உத்தமராகிவிடலாம் என்று குதித்திருக்கக்கூடிய மாண்புமிக எதிர்க் கட்சித் தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்களை எப்படி பயன்படுத்திருக்கிறார்கள் என்றால், கூட்டத்திற்கு கூட்டம் – மேடைக்கு மேடை – தெருவுக்கு தெரு சென்று நம்முடைய கூட்டணிக்கு யாராவது வருவார்களா? என்று ஆள் சேர்ப்பதற்கான அசைன்மென்ட்டை வழங்கி இருக்கிறார்கள்.

“ஆள் சேர்க்கும் அசைன்மென்டில் பழனிசாமி... இரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணி பாஜக” : முதலமைச்சர் விளாசல் !

அவரோ, மைக் கிடைத்தால் போதும் என்று தங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம் போல திட்டிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் நலன்களையும், தமிழ்நாட்டு மக்களின் மேலேயும் உண்மையாக அக்கறை கொண்ட யாரும் பாஜக-வுடன் கூட்டணிக்கு போகமாட்டார்கள். ஏனென்றால், நாட்டு மக்களை துண்டாடும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கொள்கைகளை முழுவீச்சில் செயல்படுத்திருக்கக்கூடிய அரசியல் முகம், அதிகார பலம் தான் பாஜக. அதிலும், மூன்றாவது முறை மக்களின் ஆதரவு குறைந்து ஒரு சிலரின் ஆதரவோடு ஆட்சி அமைத்த பிறகு, ஆர்எஸ்எஸ் பாதையில் வேகமாக நடைபோட ஆரம்பித்திருக்கிறது பாஜக.

பெருந்தலைவர் காமராசர் அவர்களை கொல்ல முயற்சித்த ஆர்எஸ்எஸ் அமைப்போடு நூற்றாண்டில் அவர்களுடைய செயல் திட்டத்தை வேகப்படுத்தியிருக்கிறார்கள். வரலாறு முழுவதும் இவர்களுடைய கொள்கை சதித் திட்டங்களுக்கு எதிராக நின்று தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களை காக்கின்ற நம்முடைய பணி – அடுத்து அமையவிருக்கும் திராவிட மாடல் 2.0-விலும் தொடரும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் போராடி, மக்களின் தேவைகளை உணர்ந்து, உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், தாயுமானவர், அன்புக்கரங்கள் என்று உங்களுக்கு வேண்டியதை செய்து கொண்டிருக்கிறோம்.

இந்தப் பணிகளை நாங்கள்தான் தொடர்ந்து, தொய்வில்லாமல் செய்வோம்!

என்னைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக வளர்த்தெடுக்கின்ற கடமையை இன்னும் இன்னும் சிறப்பாக செய்து காட்டுவேன்!

உங்கள் எதிர்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்றுவேன்!

திராவிட மாடல் ஆட்சிதான் அடுத்து வரக்கூடிய தேர்தலிலும் வென்று, தொடரும்! அப்போது, இன்னும் பல்வேறு திட்டங்களோடு உங்களை எல்லாம் சந்திப்பதற்கு வருவேன்! வருவேன்! வருவேன்! என்று உறுதி அளித்து விடைபெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

Related Stories