தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (1.10.2025) சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் 42.45 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மாடம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட தொல்காப்பியப் பூங்காவினை பார்வையிட்டார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2008-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம், 58 ஏக்கர் பரப்பினை கொண்ட அடையாறு உப்பங்கழியினை சீரமைத்து, 'தொல்காப்பியப் பூங்கா' உருவாக்கப்பட்டு 22.01.2011 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டு சிறப்பான முறையில் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றது.
கடந்த காலத்தில் முறையான பராமரிப்பின்றி இருந்த தொல்காப்பியப் பூங்காவினை பல்வேறு புதிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் மறுமேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஜூலை 2021-ஆம் ஆண்டு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையினால் 'தொல்காப்பியப் பூங்கா மறுமேம்பாட்டு' பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் தொல்காப்பியப் பூங்காவின் மறுமேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு 42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிருவாக அனுமதி வழங்கியுள்ளது.
தொல்காப்பியப் பூங்காவின் மறுமேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மையம், பார்வையாளர் மாடம், நடைபாதை, சிற்றுண்டியகம், புதிய கழிப்பறை, திறந்தவெளி அரங்கம், இணைப்புபாலம், கண்காணிப்பு கேமராக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் தொல்காப்பியப் பூங்கா பகுதி 1 மற்றும் பகுதி 2 இணைத்து சாந்தோம் சாலையில் உயர்மட்ட நடைமேம்பாலம் (Skywalk) அமைக்கப்பட்டுள்ளது மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலையின் குறுக்கே இருக்கும் குழாய் கால்வாய்க்கு மாற்றாக மூன்று வழி பெட்டகக் கால்வாய் (Triple Cell Box Culvert) அமைக்கும் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது.
குறிப்பாக, 'தொல்காப்பியப் பூங்கா', சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் கல்வியினை சமுதாயத்திற்கு, குறிப்பாக மாணவர்கள் பயன்பெற்றிடும் வகையில் சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை, 1,446 பள்ளிகளைச் சேர்ந்த, 1,12,826 மாணவர்கள் மற்றும் 6,070 ஆசிரியர்கள், இப்பூங்காவில் நடத்தப்பட்டு வரும் சுற்றுச்சூழல் கல்வி நிகழ்ச்சியில் பங்குபெற்று பயனடைந்ததுடன், நகர்ப்புர ஈரநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அவசியத்தினை உணர்ந்துள்ளனர். இதுவரை, இப்பூங்காவினை 32,973 பொதுமக்கள் பார்வையிட்டு பயனடைந்துள்ளனர்.
இயற்கை சூழ்நிலை நிறைந்துள்ள தொல்காப்பியப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள 3.20 கிலோ மீட்டர் தூர நடைப்பயிற்சி பாதையில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12.05.2022 அன்று அனுமதி வழங்கி, இதுவரை 24,528 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் தொல்காப்பியப் பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டு, கொன்றை மரக்கன்றினை நட்டு வைத்தார். மேலும், தொல்காப்பியப் பூங்காவினை மக்களின் முழு பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.