தமிழ்நாடு

”மன்னிப்பு கேட்க மனமில்லாத விஜய்” : வீடியோ பேச்சுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க மனமின்றி விஜய், மீண்டும் ஒரு ஷூட்டிங் நடத்தி பம்மாத்து அரசியல் செய்வதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர்.

”மன்னிப்பு கேட்க மனமில்லாத விஜய்” : வீடியோ பேச்சுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

41 உயிர்களை காவுகொண்ட கரூர் பெரும்துயரம் நிகழ்ந்து 3 நாட்களாகியும் அங்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க மனமில்லாத விஜய் தற்போது சமாளிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜயின் இந்த அநாகரிக போக்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த ரசிகர்களின் வீட்டிற்கு 3 நாட்களாக செல்லாத விஜய் பனையூரில் பதுங்கிக் கொண்டு வீடியோ வெளியிட்டிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. உறவுகளை இழந்து கதறித்துடிக்கும் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு கூட தாமதத்தை கடைபிடித்த விஜய் மக்களை சந்திக்காமல் ஓடி ஒளிந்து விட்டு, நிலைமையை சமாளிக்க வீடியோ பதிவை வெளியிட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தவெக நிர்வாகிகள் கூட பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் ஒட்டுமொத்தமாக தலைமறைவாகி இருப்பதை குறிப்பிடும் அவர்கள், மரணத்திலும் அசிங்க அரசியல் செய்யும் விஜய், 6 மணி நேரம் தாமதமாக வந்தது ஏன் என்பதை வீடியோ பதிவில் சொல்லாமல் விட்டது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் சினிமா முகபாவனையுடன் வீடியோவில் விஜய் பேசியிருப்பதாகவும் 41 குடும்பங்களின் ஓலம் விஜயின் கல்நெஞ்சை கரைக்கவில்லை என்றும் கூறும் சமூக ஆர்வலர்கள், பனையூரில் இருந்தவாறு மீண்டும் ஒரு ஷூட்டிங்கை விஜய் நடத்தியிருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.

மற்றவர்கள் மீது பழிபோட்டே அரசியலை நடத்திவிடலாம் என விஜய் நினைத்தால், நீண்ட அரசியல் பாரம்பரியம் உள்ள தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல என்று கூறும் சமூக ஆர்வலர்கள், கரூரில் பேசிக் கொண்டிருக்கும்போதே மரணங்கள் நிகழ்ந்ததை அறிந்தபிறகும் அங்கிருந்து அவசர அவசரமாக திருச்சிக்கு ஓடிய விஜய் தற்போது பம்மாத்து வீடியோ வெளியிட்டிருப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுகின்றனர்.

கட்சி தொடங்கியதில் இருந்து இதுவரை ஒரேஒரு தடவை கூட செய்தியாளர்களைச் சந்திக்க திராணி இல்லாத விஜய், வீடியோ வெளியிட்டே அரசியல் வியாபாரத்தை நடத்திவிடலாம் என கனவு காண்கிறார் என்றும் அவர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories