தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற, ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ மாபெரும் கல்வித் திருவிழா நிகழ்ச்சியில் ஆற்றிய உரை,
“நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி சொல்வது ஒன்றே ஒன்றுதான் “கல்வி ஒன்றே அழிக்க முடியாத சொத்து” என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சொல்வார்கள்.
கல்வி மாணவர்களுக்கான சொத்து என்றால், இங்கு அமர்ந்திருக்கக்கூடிய மாணவர்கள் தான் நம்முடைய தமிழ்நாட்டினுடைய சொத்து.
நம்முடைய திராவிட மாடல் அரசு, பள்ளிக்கல்வி முதல், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வரை மாணவர்களுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
இந்தியாவிலேயே முதன் முதலில் 1920ஆம் ஆண்டு மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தது தமிழ்நாடுதான். இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையை நீதிக்கட்சி முன்னெடுத்து சுமார் 100 ஆண்டுகள் கடந்துவிட்டன.
அதேமாதிரி, இந்தியாவிலேயே முதன்முதலாக பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு கொடுத்த முதல் மாநிலமும் நம்முடைய தமிழ்நாடு தான்.
வேலைக்கு காலையில் சீக்கிரம் எழுந்து செல்லும் பெற்றோர்கள் காலையில் சமைப்பதற்கு நேரம் இல்லாமல், குழந்தைகளுக்கு காலை உணவு செய்து கொடுக்க முடியாத ஒரு சூழ்நிலை இருந்தது. சாப்பிடாமல் வகுப்பிற்கு செல்கின்ற குழந்தைக்கு காது பசியில் அடைக்கும், வயிறு கிள்ளும்.
அவர்களால் எப்படி அந்த சமயத்தில் பாடத்தை கவனிக்க முடியும் பெற்றோர்கள் வருதப்பட்டது உண்டு. இன்றைக்கு அந்த பிரச்சனைகள் எல்லாத்தையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தீர்த்து வைத்திருக்கிறார்கள்.
பள்ளி படிப்பை முடித்த பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக மாணவர்கள் உயர்கல்விக்கு வராமல் இருந்துவிடக் கூடாது என்று, தமிழ்நாடு அரசே கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்கள் மூலமாக மாதம் 1000 ரூபாய் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கி வருகின்றது.
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்ற மாணவர்கள் இனிமேல் யாரும், நோட்புக் வாங்க வேண்டும். புராஜெக்ட் மெட்டிரியல்ஸ் வாங்கவேண்டும். கால்குலேட்டர் வாங்க வேண்டும் என்று அவர்கள் பெற்றோர்களிடம் சென்று கேட்க தேவையில்லை. இது மாதிரியான பொருட்களையெல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுக்கக்கூடிய 1,000 ரூபாயில் தாராளமாக வாங்கி கொள்ளலாம்.
இந்த திட்டங்கள் வந்தபிறகு பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, உயர்கல்வி செல்லுகின்ற வாய்ப்பு இருந்தும், பொருளாதார சூழல் காரணமாக உயர்கல்வியை தொடர இயலாத கிட்டத்தட்ட 15 ஆயிரம் மாணவர்கள் இன்றைக்கு உயர்கல்வியில் இந்த திட்டத்தின் மூலம் சேர்ந்திருக்கிறார்கள்.
அதுமட்டும் இல்லை, மாணவர்களை வேலைவாய்ப்பிற்கு தயார்படுத்துகின்ற வகையில் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. படிப்புடன் வேலைகளுக்கான அந்த திறனையும் நான் முதல்வன் திட்டம் வழங்கி கொண்டு வருகின்றது.
குறிப்பாக, வேலை தேடுகின்ற நிலையைதாண்டி மற்றவர்களுக்கும் வேலை கொடுக்கலாம் என்ற தன்னம்பிக்கையை நம்முடைய நான் முதல்வன் திட்டம் தொடர்ந்து வழங்கி வருகின்றது. கல்விக்கு மட்டுமின்றி, இன்றைக்கு உடற்கல்விக்கும், விளையாட்டுக்கும் நம்முடைய அரசு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்தி வருகின்றார்கள்.
இந்த நிகழ்ச்சியினுடைய பெயரே கல்வியில் சிறந்த தமிழ்நாடு, கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், எங்களுடைய விளையாட்டு வீரர்களுக்கும் இந்த மேடையில் இடம் கொடுத்த முதலமைச்சர் அவர்களுக்கு இந்த நேரத்தில் விளையாட்டு வீரர்களின் சார்பாக என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எப்படி பள்ளிக் கல்வி முக்கியமோ, எப்படி உயர்கல்வி முக்கியமோ, அதேபோல் உடற்கல்வியும் முக்கியம் என்று இந்த நிகழ்ச்சியின் மூலமாக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தெரிய வைத்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமாக இன்றைக்கு ஆயிரக்கணக்கான வீரர்களுக்கு சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி உதவியையும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி இருக்கின்றோம்.
விளையாட்டில் சிறந்து விளங்கும் இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக, வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு வழங்கி, இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறைகளில் வேலைவாய்ப்பு அளித்துள்ளார். இதே முக்கியத்துவம் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்/வீராங்கனைகளுக்கும் வழங்கப்படுகிறது.
விளையாட்டுக்கு நம்முடைய அரசு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று விளையாட்டு வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை எல்லாம் இங்கே பகிர்ந்து கொண்டார்கள்.
குறிப்பாக, இங்கே நான் சொல்லவேண்டும் என்றால், மாற்றுத்திறனாளி தம்பி மனோஜ் அவர்கள் கூறிய கருத்துக்கள் மிகுந்த நெகிழ்ச்சியாகவும், எனக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. தம்பி மனோஜ்
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, TANSI-யில் ஒரு contract worker-ஆக வேலை செய்து கொண்டு இருந்தார். அவருடைய திறமையை கண்டுபிடித்து, சில ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க நிதி உதவி அளித்தோம். அவர் வெளிநாடுகளில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களோடு நம்முடைய தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருந்தார்.
அதுமட்டுமல்ல, அவருக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ், அரசு வேலையையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
கடந்த இரண்டு நாட்களாக விருதுநகர், மதுரையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு நேற்று நள்ளிரவு மதுரையிலிருந்து விமானம் மூலமாக சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்போது தான் நான் கவனித்தேன். என்னோடு இரண்டு சீட்டு தள்ளி தான் தம்பி மனோஜ் அவர்களும் உட்காந்து இருந்தார்.
அப்போது கேட்டேன், எங்கே சென்னைக்கா என்று, ஆமாம் அண்ணே நானும் சென்னைக்குதான் வருகிறேன். நாளைக்கு நேரு ஸ்டேடியத்தில் நடக்கப்போகின்ற நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்ள போகின்றேன், பேச போகின்றேன் என்று சொன்னார். எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. திறமை இருந்தால் போதும், திறமையானவர்களின் வாழ்க்கையை மாற்றிக் காட்ட நம்முடைய அரசு எப்போதும் தயாராக இருக்கிறது என்பதற்கு தம்பி மனோஜ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இந்த விழாவுக்கு நிறைய ஆசிரியர்களும், மாணவர்களும் வந்து இருக்கிறீர்கள். நான் அடிக்கடி ஆசிரியர்களிடம் வைக்கக்கூடிய ஒரே கோரிக்கை ஒரே கோரிக்கை இது மட்டும் தான். Maths, Science Teachers, எங்களுடைய P.E.T பீரியடை கடன் வாங்கி பாடம் நடத்துவதை அறவே தவிர்த்திட வேண்டும் என்று ஒரு விளையாட்டுத் துறை அமைச்சராக, விளையாட்டு வீரர்கள் சார்பாக, மாணவர்கள் சார்பாக மீண்டும் என்னுடைய கோரிக்கை நான் வைக்கின்றேன்.
இந்த நேரத்தில் ஒன்றே ஒன்றை மட்டும் நான் சொல்லி நிறைவு செய்ய விரும்புகின்றேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு முறை சொன்னார்கள், அண்ணா சொன்ன வார்த்தை, நான் முதலமைச்சர் ஆகிய பிறகு மூன்று காரியங்களை தமிழ்நாட்டுக்காக, தமிழ் மக்களுக்காக செய்திருக்கின்றேன்.
தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியிருக்கின்றேன். தமிழ்நாட்டில் இந்திக்கு இடம் இல்லை, இரு மொழிக்கொள்கை மட்டும் தான் என்று சட்டம் இயற்றி இருக்கின்றேன். சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கி இருக்கின்றேன். இந்த மூன்று விஷயத்தை நான் தமிழ்நாட்டிற்காக செய்திருக்கிறேன்.
எனக்கு பிறகு ஆட்சிக்கு வரக்கூடியவர்கள் இந்த மூன்றையும் மாற்ற நினைத்தால், அவர்களுடைய மனதில் ஒரு பயம் வரும் ஒரு அச்சம் வரும். அந்த அச்சம் வரும்போதெல்லாம், இதையெல்லாம் மாற்றிவிட்டால் மக்கள் நம்மை என்ன செய்வார்கள் அந்த பயம் வரும். அந்த அச்சம் எதிரிகளை எவ்வளவு நாளைக்கு ஆட்டுகிறதோ அதுவரைக்கும் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் இந்த அண்ணாதுரைதான் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள்.
அதையே நான் இப்போது கொஞ்சம் மாற்றி சொல்ல விரும்புகின்றேன். காலை உணவுத்திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை எல்லாம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், நம்முடைய திராவிட மாடல் அரசு இன்றைக்கு வழங்கி இருக்கின்றது.
இந்த திட்டங்களை எல்லாம் யாராவது ஒரு நாள் என்றைக்காவது மாற்றிவிடலாம் என்று நினைத்தால் கூட அவர்களுடைய மனதிலும் நிச்சயம் பயம் வரும். அந்த பயம் இருக்கின்றவரைக்கும் இந்த தமிழ்நாட்டை ஆளுகிற போறவர் நம்முடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் என்று பொருள்.
இன்றைக்கு தமிழ்ப்புதல்வன், புதுமைப் பெண் திட்டங்கள் மூலம் இந்த கல்வி ஆண்டிற்கான ஊக்கத் தொகை பெற்றுள்ள அத்தனை மாணவச் செல்வங்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.