டெல்லியில் தயாரான அறிக்கையின் வாசனை இரண்டு நாள்கள் முன்னமே தமிழ்நாட்டு ராஜ்பவனில் வீசுவதற்கு அதென்ன பக்கத்துவீட்டுக் கறிக்குழம்பா? ஆக, ஏசர் அறிக்கை என்பது யாருடைய பிரசாரம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!” என எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கார்த்திக் புகழேந்தி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கார்த்திக் புகழேந்தி வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் முன்வைக்கும் கருத்து விவாதத்துக்கு உரியது. தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வியின் நிலை சுமாராக இருப்பதாக அவர் கூறும் கருத்துக்கு ASER -2024 அறிக்கையை அடிப்படை ஆதாரமாகவும் அதனடிப்படையிலேயே இந்த ‘கல்வியில் சுமாரான தமிழ்நாடு’ என்ற பிழை மதிப்பீட்டை முன்வைக்கிறார் எனவும் புரிந்துகொள்கிறேன்.
எனில், ASER அறிக்கை என்றால் என்ன? அதை வெளியிடுபவர்கள் யார்? அந்த அறிக்கைக்கான தரவுகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்று அறிந்த கருத்துக்களை முன்வைப்பதை கடமையாகக் கருதுகிறேன்.
Annual Status of Education Report (Rural) - சுருக்கமாக ‘ASER’ Centre! இந்த என்.ஜி.ஓ அமைப்புதான் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனைக் குறித்து 358 பக்க அறிக்கையை வெளியிட்டது.
2005-ம் ஆண்டு முதல் ‘இந்திய கிராமப்புற குழந்தைகளின் ‘கற்றல் நிலை’ குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நோக்கத்துடன் இந்த அமைப்பு செயல்படத் தொடங்கியது. பின்னாளில் பிரதாம் கல்வி அறக்கட்டளை என்ற என்.ஜி.ஓ அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டது.
இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள அரசுப் பள்ளிக் குழந்தைகளின் கற்றல் திறனை ‘பரிசோதித்து’ ஆண்டு அறிக்கையாக வெளியிடுவது இந்தத் தனியார் என்.ஜி.ஓ கையாளும் பாணி. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு கார்பரேட் நிறுவனப் பங்களிப்புடன் நாடு முழுவதும் செயல்பாடுகளை விரிவுபடுத்தியது.
29 இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்பட 605 மாவட்டங்களில் உள்ள 15ஆயிரம்+ பள்ளிகளில் படித்துவரும் 6.5 லட்சம் குழந்தைகளின் கற்றல் திறனைச் சோதித்து 2024ம் ஆண்டுக்கான ASER அறிக்கை தயாரிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்கள்!
தமிழ்நாட்டில், 30 மாவட்டங்களில் 876 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, லட்சக் கணக்கான மாணவர்களிடம் ஆய்வு நடத்தினோம் என்றும் ‘ASER’ Centre-ன் வாக்குமூலம் கொடுத்துள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் யார்?
ஆசிரியர்களா… கல்வியாளர்களா… ஆய்வாளர்களா அல்லது மாநில, மத்திய கல்வித் துறையைச் சேர்ந்தவர்களா? குறைந்தபட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளின் உளவியல் அறிந்தவர்களா? இவை எதுவும் இல்லை.
ASER அறிக்கை, ஐந்து விதமான பார்ட்னர்களின் பங்களிப்புகளுடன் தங்களின் ஆய்வு நடத்தப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. அவை, மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்கள், என்.ஜி.ஓ அமைப்புகள், Others மற்றும் பலவிதமான பார்ட்னர்கள் (!) என்பது அந்தப் பட்டியல். அதாவது கடைசி இரண்டு தரப்பும் அடையாளமற்றவை. முக்கியமாக தமிழ்நாட்டில், திருச்சி மாவட்டம் தவிர்த்து சுமார் 30 மாவட்டங்களில் 28 என்.ஜி.ஓ நிறுவனங்களே தரவுகளைச் சேகரித்திருக்கிறது.
சரி ஆய்வில் ஈடுபட்ட, அதாவது ASER அறிக்கையில் குறிப்பிடப்படும் என்.ஜி.ஓ நிறுவனங்களின் பிரதான செயல்பாடுகள் என்ன?
1) கிராமப்புற மக்களுக்கு ஆடு வளர்ப்பு பயிற்சி அளிப்பது.
2) பெண்களுக்கு சுயமுன்னேற்ற வகுப்பெடுப்பது…
3) தையல், எம்ப்ராய்டரி, நாப்கின், மெழுகுவர்த்தி தயாரிக்கக் கற்றுக்கொடுப்பது.
4) கேன்சர் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பராமரிப்பது
இப்படி அந்தப் பட்டியல் நீள்கிறது.
வெகுசில என்.ஜி.ஓ-க்கள் தன்னார்வலர்கள் மூலமாக கிராமப்புறக் குழந்தைகளுக்கு மாலை நேர வகுப்புகள் எடுப்பதாகக் குறிப்பிடுகின்றன. இந்தத் தன்னார்வ அமைப்பு மற்றும் அதன் பணியாளர்களின் அடிப்படைச் செயல்பாடுகளைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை.
ஆனால், தமிழ்நாட்டின் கல்வித் தரம் சரிந்திருப்பதாகக்கூறி, தமிழ்நாட்டின் மாணவர்கள், ஆசிரியர்களின் திறனைக் கேள்விக்கு உட்படுத்தும் அளவுக்குப் பயிற்சி பெற்றவர்களா இவர்கள் என்றால் அதற்கு எவ்விதத்திலும் தொடர்பற்ற நபர்கள்தான் தரவுகளைச் சேகரித்திருக்கிறார்கள். அதுவும் அரசுப் பள்ளி வளாகங்களில் கண்காணிப்புகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்ட முழுமையான ஆய்வும் அல்ல. சுருக்கமாகச் சொன்னால், தமிழ்நாட்டில் இயங்கும் சிறு, குறு என்.ஜி.ஓ அமைப்புகளை அரசியல் உள்நோக்கத்துக்காகப் பயன்படுத்தியிருக்கிறது பிரதான் கல்வி அறக்கட்டளை.
இங்கே முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது. ASER அமைப்பின் கடந்த கால வரலாறு. அவர்களுடைய செயல்பாடுகள்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களில் எழுந்திருக்கின்றன. ‘குழந்தைகளின் கற்றல் திறன்களை மேலோட்டமாக மதிப்பிடுகிறார்கள்’ எனக் கல்வியாளர்களே இந்த தனியார் என்.ஜி.ஓ அமைப்பைக் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்.
‘குழந்தைகளிடம் இயல்பாக இருக்கும் உயர்மட்டத் திறன்களை இவர்களால் அடையாளம் காண முடிவதில்லை என்பது தொடங்கி, சேகரித்த புள்ளி விபரங்களின் முடிவை அரசியல் உள்நோக்கள் காரணமாகத் திரித்து, ஆதாயத்துடன் வெளியிடுகிறார்கள்’ என்பது வரை பலவிதமான புகார்களுக்கு ஆளாகியிருக்கிறது ASER Centre!
சரி, இந்த ASER Centre-க்குப் படியளக்கும் PRATHAM EDUCATION FOUNDATION எப்படிப்பட்டது?
இந்தியாவிலுள்ள சுமார் 32 மொழிகளில் குழந்தைகள் புத்தகங்களைத் தயாரித்து லாப நோக்கமின்றி விற்கிறோம் என்று சொல்லி, பள்ளிக்கூடங்களில் கடைவிரிப்பது. ‘ஃபீஸ் கட்ட முடியாத குழந்தைகளுக்கு உதவுங்கள்’ என்று கார்பரேட்டுகள் தொடங்கி ஏமாந்தவர்கள் வரை பலரிடம் திரள்நிதி வசூலிப்பது. வேறோரு தொண்டு நிறுவனத்தின் இணையதள விபரங்களைத் திருடி, தங்களுடைய பயனாளர்கள் என்று புகைப்படங்களைப் பதிவேற்றி ஏமாற்றுவது, டெலிகாலர்ஸ் மூலம் போலி நிதி வசூல் செயல்பாடுகளில் ஈடுபட்டது என்று பிரதாம் மீதான குற்றச்சாட்டுகள், ஏமாந்தவர்களின் வாக்குமூலங்கள் இணையமெங்கும் விரவிக்கிடக்கின்றன.
இவையெல்லாம் சில்லறை வழக்குகள் என்றாலும் பெரியளவில் அவர்களுடைய ‘டார்க்’ செயல்பாடுகள் இருக்கின்றன. உதாரணமாக மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களுக்குத் தேவைப்படும்படியான டேட்டாக்களை வழங்கி, மத்திய கல்வித் துறையில் லாபி செய்வது, பொதுமக்களிடையே அரசுப் பள்ளிகளில் கற்றல்- கற்பித்தல் தரம் மோசமாக இருக்கிறது என்று கருத்துப் பரப்புவது நல்ல ‘தரமான’ பணிகளைச் செய்து கொடுத்திருக்கிறது PRATHAM FOUNDATION!
இந்தக் குற்றச்சாட்டுகளைத் தனிப்பட்ட கருத்தாகச் சொல்லவில்லை. 2021-ம் ஆண்டு வெளியான UNESCO-வின் கல்விக்கான Global Education Monitoring Report, இவர்களைக் கழுவி ஊற்றியிருக்கிறது. ‘இந்தியாவிலுள்ள தனியார் செல்வந்தர்களுக்கு ஆதரவாகக் கல்வித் துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதற்காகவும், மாநில அரசின் கல்வி முறையைச் சிதைக்கும் கருத்துகளைத் திட்டமிட்டுப் பரப்பவும் பிரதான், செண்டர் ஸ்கொயர் போன்ற என்.ஜி.ஓ அமைப்புகள் செய்த கீழ்த்தரமான லாபிகளை உலகளவில் அம்பலமாக்கப்பட்டிருக்கிறது.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், மிகச் சாதாரண தமிழ்நாட்டுப் பொதுஜனத்திடம் போய், உ.பி., பீகார் மாநிலங்களைவிட தமிழ்நாட்டின் கல்வித் தரம் சரிந்துவிட்டது என்று நாம் யாராவது சொன்னால் சட்டன்று ‘என்ன கேனத்தனமா பேசுற...’ என்று பாய்ந்துவிடுவார்கள் தானே… அது தமிழ்நாட்டின் கல்வி வரலாறு மீதான பார்வை மட்டுமல்ல. கள எதார்த்தம் தெரிந்தவர்களால் எது உண்மை என்பதை எளிதில் அணுக முடியும். ஆனாலும் குருட்டுத் துணிச்சலுடன் இந்த அறிக்கையை ஏசர் வெளியிட்டிருக்கிறது என்ன காரணம்?
காரணத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக நடைபெற்ற காரியங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்வது கூடுதல் உதவியாக இருக்கும்.
முதலாவதாக, தமிழ்நாட்டின் கல்விநிலை குறித்த ‘போலியான’ தரவுகளுடன் ASER அறிக்கை வெளியான தேதி : ஜனவரி 28’ 2025.
தமிழ்நாட்டின் கல்வி சரிவைச் சந்தித்துவிட்டது. அரசுப் பள்ளி மாணவர்களால் 2ஆம் வகுப்பு பாடத் திட்டங்களைக்கூட சரிவரப் படிக்க இயலவில்லை. உயர் கல்வியிலும் மாணவர்களின் நிலை இப்படிதான் இருக்கிறது’ என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டது : ஜனவரி 26’ 2025
அதாவது, ஏசர் அறிக்கை வெளியாவதற்கு 2 நாள்கள் முன்பே அதிலுள்ள தரவுகளைக்கொண்டு தமிழ்நாடு ஆளுநர் தனது குடியரசு தின உரையை வெளியிட்டார். மறுநாள் தினமலர் நாளிதழில் அந்தச் செய்தி வெளியானது. டெல்லியில் தயாரான அறிக்கையின் வாசனை இரண்டு நாள்கள் முன்னமே தமிழ்நாட்டு ராஜ்பவனில் வீசுவதற்கு அதென்ன பக்கத்துவீட்டுக் கறிக்குழம்பா? ஆக, ஏசர் அறிக்கை என்பது யாருடைய பிரசாரம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!
அதை அவர்கள் உருட்டிவிட்டதற்கான காரணம் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்கச் செய்வது. ஏற்றால்தான், சமக்ர சிக்ஷா திட்ட நிதி 2152 கோடியை ஒதுக்குவோம் என மிரட்டுவது, தமிழ்நாட்டின் சிறந்த அரசுப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அதற்கு ‘பி.எம்.ஸ்ரீ பள்ளி’ என்று மத்திய அரசின் ஸ்டிக்கரை ஒட்டுவது. அந்தப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையைத் திணித்து, இந்தி- சமஸ்கிருதம், குலக்கல்வியை மீண்டும் தமிழ்நாட்டுக்குள் நுழைக்க முயற்சிப்பது. ஒருங்கிணைந்த பள்ளி வளாகம் என்ற பெயரில் அங்கன்வாடிகளை மூடிவிட்டு, தனியார்மயத்தை ஊக்குவித்து அரசுப் பள்ளிகளைக் காவு கேட்பது. இதற்கெல்லாம் அடிப்படையை உருவாக்க தமிழ்நாட்டின் கல்வித் தரம் பற்றி போலியான தரவுகளைப் பரப்புவது. அதன்வழியே பொதுப்புத்தியில் அரசுப் பள்ளிகள் பற்றி அவதூறு பரப்புவது!
ஏசர் அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு கல்வியில் சுமாரான தமிழ்நாடு என்று எழுதும் முன்பு, அந்த அறிக்கை ஏன் அரசுப் பள்ளிகளை மட்டும் குறிவைத்துத் தாக்குகிறது என்பதையும் தேசிய கல்விக் கொள்கையின் வழியாக மத்திய அரசு செய்யத் துடிக்கும் மதவாத அரசியலையும் ஒருமுறை படித்துப் பார்த்தால் போதும்!
கார்த்திக் புகழேந்தி
26-09-2025