’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்ட விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும், சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இவ்விழா 7 பகுதிகளாக நெகிழ்ச்சியுடன் நடைபெற்றது.
தமிழ்நாட்டு மக்களின் மனதுக்கு நெருங்கமான திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், விளையாட்டுச் சாதனையாளர்கள், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் மற்றும் அரசுப் பள்ளிகளிலிருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு சென்ற சாதனையாளர்கள் ஆகிய பகுதிகளாக நடைபெற்றது.
இதன் ஒவ்வொரு பகுதியிலும் அரசின் திட்டம் மூலம் பயனடைந்த மாணவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர், புதுமைப் பெண் திட்டத்தால் பயனடைந்த மாணவர்களின் குரல்களை கேட்டபோது அரங்கமே கண்ணீரில் நெகிழ்ந்தது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி! முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கிறது. அதனால் காலை உணவுத்திட்டத்தை அடுத்த ஆண்டு தெலங்கானாவில் செயல்படுத்த உள்ளோம்!
தமிழ்நாடு அரசு, மாணவர்களின் கல்விக்காக செயல்படுத்தி இருக்கும் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் ஆகிய திட்டங்கள் மாணவர்களின் கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் கல்வியாண்டில் தெலங்கானா மாநிலத்திலும் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இந்தியாவில் சிறந்த முதலமைச்சர்களில் ஒருவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். மாணவர்களாகிய நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். உங்களுக்கு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் கிடைத்திருக்கிறார்.
தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களும் ஒரே மாதிரியான சமூகநீதி கொள்கைகளை கொண்டது. முத்தமிழறிஞர் கலைஞரின் அரசியல், தெலங்கானாவை மிகவும் ஈர்த்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்த இடஒதுக்கீடு மூலம் உந்துதல் அடைந்து, தெலங்கானாவில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசி, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 27% ஒதுக்கீடு வழங்கி தேர்தலை நடத்த இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தைப் பார்த்துதான் தென்னிந்தியா மாநிலங்களிலும் அந்தத் திட்டத்தை கொண்டு வந்தனர். இந்தியாவிற்கே தமிழ்நாடு அரசின் திட்டங்கள் எப்போதும் வழிகாட்டி வருகிறது” என தெரிவித்துள்ளார்.