தமிழ்நாடு

“மக்களின் அடிப்படை தேவைகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

“மக்களின் அடிப்படை தேவைகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (24.09.2025) மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மதுரை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் அவர்கள், அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 79,155 மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர். பெண்களுக்கான விடியல் பயணத்திட்டத்தின் கீழ் இதுவரை பெண்கள் மொத்தம் 1.01 கோடி நடைகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 1,17,116 மாணவ, மாணவிகள் பயன்பெற்று உள்ளனர்.

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 38,655 கல்லூரி மாணவிகளும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 27,511 கல்லூரி மாணவர்களும் மாதம் ரூ.1,000 பெற்று வருகின்றனர்.

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 8,16,149 நபர்களுக்கு தொடர் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் இன்னுயிர் காப்போம். நம்மைக்காக்கும் 48 திட்டத்தின்கீழ் 19,342 நபர்களுக்கு 22.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர்காக்கப்பட்டுள்ளனர்.

“மக்களின் அடிப்படை தேவைகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 3,04,387 நபர்களுக்கு 558.83 கோடி ரூபாய் செலவில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 6,005 பயனாளிகளுக்கு ரூ.186.15 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்ட பணியாணைகள் வழங்கப்பட்டு, இதுவரை 3,581 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது,

தமிழ்நாட்டினுடைய பண்பாட்டு கலாச்சார தலைநகரமாக உள்ள மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தை நடத்துவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நம்முடைய அரசு பொறுப்பேற்ற இந்த நான்கரை ஆண்டுகளில் அனைத்து தரப்பு மக்களும் பயனடைகின்ற வகையில், பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதுவும் குறிப்பாக, பெண்கள், மாணவர்கள், மாணவிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் என சமூகத்தில் பின்தங்கிய மக்கள் பொருளாதார சுதந்திரம் அடையவேண்டும். சமூக அந்தஸ்தை பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பல்வேறு முற்போக்குத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.

குறிப்பாக விடியல் பயணத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண்திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், கலைஞர் கனவு இல்லம், நான் முதல்வன் திட்டம், முதலமைச்சருடைய காலை உணவுத் திட்டம், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துகின்ற வகையில் புதிய ஸ்டேடியம் கட்டுமானங்கள்;

உயரிய ஊக்கத் தொகை வழங்குவது, நூலகங்கள், அன்புக்கரங்கள், அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், தாயுமானவர் திட்டம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் என இந்த நான்கரை வருடங்களில் திராவிட அரசு மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்களை நாம் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

“மக்களின் அடிப்படை தேவைகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!

இவை தவிர மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல திட்டங்களை இன்னும் பட்டியலிடலாம். குறிப்பாக, கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஏறுதழுவுதல் அரங்கம், கோரிப்பாளையம் ஆவின் மேம்பாலங்கள், பல்நோக்கு மருத்துவமனை, டைடல் பார்க், பல்வேறு குடிநீர் திட்டங்கள், விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒலிம்பிக் அகாடமி, விளையாட்டு வளாகத்தில் அமைக்கப்படுகின்ற நீச்சல் குளம், சிந்தடிக் ஹாக்கி டர்ஃப், புதிய விளையாட்டு விடுதி.

இப்படி முதலமைச்சர் அவர்கள் மதுரை மாவட்டத்திற்கென தனி கவனம் செலுத்தி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை தீட்டி வருகின்றார். இந்த திட்டங்களில் விடுபட்டவர்களும் பயனடையும் நோக்கில் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களை நடத்தி வருகின்றோம்.

இந்த முகாம்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு நாம் ஏற்படுத்தி, அவர்களை எப்படியாவது முகாம்களுக்கு வரவழைத்து, காலம் தாழ்த்தாமல் அவர்களுக்கான நலத்திட்டங்களை விரைவாக வழங்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

கடைக்கோடியிலுள்ள எளிய மனிதர்களுக்கும் அரசினுடைய திட்டங்கள் விடுபடாமல் சென்று சேர்ந்து அவர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகதான் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகின்றன. எனவே அரசு அலுவலர்களும் நம்முடைய மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து குறிப்பிட்ட இடைவேளையில் மக்களை சந்தித்து களஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

கலைஞர் விளையாட்டு உபகரணங்களை ஏற்கனவே ஊராட்சிகளுக்கும், கிராமங்களுக்கும் கொடுத்திருக்கின்றோம். இப்போது நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் கொடுக்க இருக்கின்றோம்.

கிராமப்புற ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட அந்த விளையாட்டு உபகரணங்களை அந்த ஊரில் உள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கி, அவற்றை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்றும், Zonal BDOக்களை பொறுப்பாளர்களாக நியமித்து, இந்த வேலைகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

குறிப்பாக கூடுதல் சிறப்பாக 2025 Woldcup Hockey Junior போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு இந்த வருடம் நம்முடைய தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கின்றது. இப்போட்டிகள் சென்னையிலும், மதுரையிலும் நடைபெற இருக்கின்றன. இந்த போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிகச்சிறப்பாக நாம் மேற்கொள்ள வேண்டும்.

நாம் எத்தனையோ முத்திரை திட்டங்களை தீட்டி செயல்படுத்தினாலும், குடிநீர் வசதி, சாலைகளை சீரமைப்பது, மின்சாரம் என மக்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படாமல் அவர்களுக்கு அரசின் மீது கூடுதல் நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும். எனவே அடிப்படை தேவைகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

அரசு அலுவலர்களாகிய நீங்கள் இந்த அரசுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து, அரசினுடைய திட்டங்கள் அனைத்தும் தாமதமின்றி மக்களுக்கு சென்று சேர பணியாற்றி, இந்த அரசுக்கும் நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கும் நல்ல பெயரை பெற்றுத் தருமாறு மீண்டும் உங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு, இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.

banner

Related Stories

Related Stories