தமிழ்நாடு

“உங்களுடைய வாழ்விட உரிமையை பாதுகாப்பதும், ‘சுயமரியாதைதான்!’” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டையில் ரூ.77.76 கோடியில் கட்டப்பட்ட 504 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

“உங்களுடைய வாழ்விட உரிமையை பாதுகாப்பதும், ‘சுயமரியாதைதான்!’” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (22.9.2025) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டை வாழைத் தோப்பு திட்டப்பகுதியில் 77.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 504 புதிய அடுக்குமாடி

குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒரு பயனாளியின் வீட்டினை திறந்து வைத்து, அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை

அனைவருக்கும் வணக்கம், நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 2 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிதான், இந்த சைதாப்பேட்டை தொகுதி. அப்படிப்பட்ட புகழ்பெற்ற, பெருமைபெற்ற இந்த சைதாப்பேட்டை தொகுதிக்கு வருகைதந்து, இந்த புதிய வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணையை கொடுக்கின்ற வாய்ப்பை எனக்கு அளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களுக்கும், அமைச்சர் மா.சு அவர்களுக்கும் முதலில் என்னுடைய பாராட்டுக்களையும், நன்றியையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டில் குடிசை பகுதிகளே இருக்கக்கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையோடு அனைத்தையும் திட்டமிட்டு செய்தார். இங்கே குறிப்பிட்டதுபோல, 1970-களில் இந்தியாவிலேயே முதன் முறையாக குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

அந்த வாரியத்தை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய குடிசை வீடுகளை எல்லாம் அகற்றிவிட்டு, அங்கே கான்கிரீட் வீடுகள் அமையவேண்டும் என்று அந்த திட்டத்தை தீட்டியவரும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான்.

குறிப்பாக, தன்னுடைய சைதாப்பேட்டை தொகுதியில் 1970 ஆம் ஆண்டில், இதே இடத்தில் அவர்தான் 448 குடியிருப்புகளைக் கட்டித்தந்தார். அந்தக் குடியிருப்புகள் பழசான காரணத்தால், இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுமார் 78 கோடி ரூபாய் செலவில் 504 புதிய குடியிருப்புகளை உங்களுக்கு கட்டிக் கொடுத்திருக்கிறார்.

அன்றைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், உங்களுடைய அப்பா, அம்மா, தாத்தா, பாட்டிகளுக்கு இந்த வீடுகளை கொடுத்திருப்பார். இன்றைக்கு அவருடைய மகன் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், உங்களுக்கு அந்த வீடுகளை மீண்டும் உங்களிடம் கொடுத்து இருக்கிறார்.

புதிய வீடு வேண்டும் என்பது உங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை மட்டுமல்ல, அது உங்களுடைய உரிமை, உங்களுடைய பல நாள் கனவு, அந்த கனவை நம்முடைய முதலமைச்சர் அவர்கள், நம்முடைய அரசு இன்று உண்மையாக்கியிருக்கிறார்கள்.

இப்படி அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் நம்முடைய கழக அரசு மக்களுக்காக, உங்களுக்காக உழைத்துக் கொண்டு இருக்கும். ஆட்சிக்கு வந்த இந்த நான்கரை ஆண்டுகளில் கிட்டத்தட்ட 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 52 ஆயிரம் வீடுகளை, இந்த வாரியம் மூலமாக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கட்டிக் கொடுத்து இருக்கிறார். அதுமட்டுமில்ல, 18 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கி இருக்கின்றார்கள்.

இந்த வீடுகள் எல்லாம் கட்டி முடிக்கப்படும் வரை, நீங்கள் எல்லோரும் வெளியில் தங்கி இருந்தீர்கள். அதற்க்கான, உதவித்தொகையாக 8 ஆயிரம் ரூபாயை அரசு கொடுத்து வந்தது. நம்முடைய அமைச்சர், உங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் சென்று 8 ஆயிரம் ரூபாயை என்பது பத்தவே, பத்தாது என்று குறிப்பிட்டு வலியுறுத்தியதால், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அந்த 8 ஆயிரம் ரூபாயை 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுத்தார்கள்.

இன்றைக்கு கொடுக்கப்படுகின்ற இந்த ஒவ்வொரு வீடும், கிட்டத்தட்ட 300 சதுர அடி இருந்த வீடு, தற்போது 410 சதுர அடியாக உயர்த்தப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.

“உங்களுடைய வாழ்விட உரிமையை பாதுகாப்பதும், ‘சுயமரியாதைதான்!’” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

குறிப்பாக, நிறைய மகளிர் வந்து இருக்கின்றீர்கள், அதனால், ஒரு முக்கியமான விஷயத்தை இங்கே நான் குறிப்பிட்டு ஆக வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சமத்துவபுரம் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, அங்கு இருக்கக்கூடிய வீடுகளை, அந்த வீடுகளில் தங்கி இருக்கக்கூடிய அந்த மகளிருடைய பெயர்களிலேயே பதிவு செய்து கொடுத்தார்கள்.

இன்றைக்கு கலைஞர் அவர்கள் வழியில் வந்திருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், இங்கே ஒதுக்கப்படுகின்ற அத்தனை வீடுகளையும் அங்கு வசிக்கக்கூடிய மகளிருடைய பெயரிலேயே பதிவு செய்து கொடுத்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, ஆட்சிக்கு வந்தவுடன் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் போட்ட முதல் கையெழுத்து என்னவென்று உங்களுக்கு தெரியும். அதுதான் மகளிருக்கான அந்த விடியல் பயணத் திட்டம். இந்த விடியல் பயணத்திட்டத்தின் மூலமாக இந்த நான்கரை வருடங்களில் மட்டும் 780 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கின்றார்கள்.

அடுத்து இன்னொரு முக்கியமான திட்டம், அதுதான் முதலமைச்சருடைய காலை உணவுத்திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 21 இலட்சம் குழந்தைகள் இன்றைக்கு தரமான காலை உணவை ருசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து, அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்க வேண்டும். பள்ளிக்கூட படிப்பு மட்டும் பத்தாது, உயர்கல்வி படிக்க வேண்டும் காலேஜ் சென்று படிக்க வேண்டும் என்று நம்முடைய தலைவர் அவர்கள், அரசுப்பள்ளியில் படித்து எந்த கல்லூரியில் படித்தாலும், அது தனியார் கல்லூரியாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக மாதம் 1,000 ரூபாய். மாணவி என்றால் புதுமைப்பெண், மாணவன் என்றால் தமிழ்புதல்வன் திட்டம் என்று வழங்கி கொண்டிருக்கின்றார். இதன் மூலம் 8 இலட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

அடுத்து மிக, மிக முக்கியமான திட்டம், ஒட்டுமொத்த இந்தியாவையே நம்முடைய முதலமைச்சர் அவர்கள் திரும்பி பார்க்க வைத்த திட்டம். அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.

கிட்டத்தட்ட இந்த திட்டம் ஆரம்பித்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கிட்டத்தட்ட 24 ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாயாக, கிட்டத்தட்ட ஒரு கோடியே 20 இலட்சம் மகளிருக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கி இருக்கின்றார். சமீபத்தில் நடந்த முகாம்களில் நிறைய மகளிர் அதற்காகதான் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே கொடுக்கப்பட்ட அந்த Conditions எல்லாம் தளர்த்தி இருக்கின்றார்கள். இன்னும் அதிகமான தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் விரைவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரைவில் வந்தடையும் என்ற உறுதிமொழியை நான் இங்கே கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

இன்றைக்கு வீடு வாங்கிவிட்டோம், சொந்த வீடு கிடைத்துவிட்டது என்று நீங்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். அதோடு இருந்துவிடக்கூடாது. அரசு இந்த வீடுகளை உங்களுக்கு ஒதுக்கி கொடுத்தாலும், உங்களுடைய பங்களிப்பாக சிலருக்கு ஒரு இலட்சத்தில் இருந்து 4 இலட்சம் வரை உங்களுடைய பங்களிப்புத் தொகையும் இருக்கிறது.

உங்களுடைய நகைகளை நீங்கள் அடமானம் வைத்திருக்கலாம், உங்களுடைய சேமிப்பை நீங்கள் பயன்படுத்தி இருக்கலாம், உங்களுக்கு தெரிந்தவர்களிடமிருந்து நீங்கள் அதை கடனாககூட வாங்கி இருக்கலாம். ஆகவே, இந்த குடியிருப்புகளை நீங்கள் இனிமேல் பொறுப்புடன் பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

குறிப்பாக, தனியார் குடியிருப்புகள் மாதிரி, உங்களுக்குள்ளேயே ஒரு Residents Association-ஐ உருவாக்கி அதை முறையாக பராமரிக்குமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று நம்முடைய தமிழ்நாட்டு மக்களை எல்லாம் ஓரணியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திரட்டுகின்றார். அதுதான் சுயமரியாதைக்கான ஒரு முழக்கம்.

அதேபோல, ஏழை, எளிய மக்களுக்கு தரமான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக்கொடுத்து, உங்களுடைய வாழ்விட உரிமையை பாதுகாப்பதும், 'சுயமரியாதைதான்' அந்த நடவடிக்கைதான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார். விளிம்பு நிலை மக்களை தலைகுனிய விடமாட்டேன் என்ற மாண்புமிகு முதலமைச்சருடைய உறுதிதான் இந்த குடியிருப்புகள்.

உங்களுக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு அனைத்து வகையிலும் துணை நிற்கும். நீங்கள் அத்தனைபேரும் நம்முடைய அரசுக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

உங்களுக்காக நம்முடைய முதலமைச்சர் அவர்களும், அரசும் தயாராக இருக்கின்றது. ஆகவே நீங்களும் நம்முடைய அரசுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இன்றைக்கு புதிய வீடுகளில் குடியேற இருக்கக்கூடிய, உங்கள் அத்தனைபேருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையட்டும் என்று சொல்லி, இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகின்றேன்.

banner

Related Stories

Related Stories