துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (23.9.2025) விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்புத் திட்டங்களான மகளிர் விடியல் பயணத்திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண், தமிழ்புதல்வன், முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் கனவு இல்லம், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்;
இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம், உங்களுடன் ஸ்டாலின் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், குடிநீர் திட்டப் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 72,335 மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் 3,27,830 மகளிர் மாதம் 1,000 ரூபாய் பெற்று வருகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 13,895 கல்லூரி மாணவிகளும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 12,813 கல்லூரி மாணவர்களும் மாதம் ரூ.1,000 பெற்று வருகின்றனர்.
மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 8,34,652 நபர்களுக்கு தொடர் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் இன்னுயிர் காப்போம் - நம்மைக்காக்கும் 48 திட்டத்தின்கீழ் 6,486 நபர்களுக்கு 5.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர்காக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 97,741 நபர்களுக்கு 153.43 கோடி ரூபாய் செலவில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3,193 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட பணியாணைகள் வழங்கப்பட்டு, இதுவரை 996 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது,
நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நம்முடைய திராவிட மாடல் அரசு இன்றைக்கு அனைத்து தரப்பு மக்களையும் மனதில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த திட்டங்களுடைய பயன் ஒவ்வொரு இல்லங்களுக்கும் சென்று சேர்ந்து மக்கள் பொருளாதார சமூக முன்னேற்றங்களை தொடர்ந்து அடைந்து வருகின்றார்கள்.
இந்த திட்டங்களில் விடுபட்டவர்களை கண்டறிந்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உங்களுடன் ஸ்டாலின் என்ற மக்களைத் தேடி மனுக்களைப் பெற்று, அதற்கான தீர்வு காணுகின்ற திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முகாம்களில் மனுக்களை அளித்த மக்களுக்கு விரைந்து தீர்வுகளை வழங்க வேண்டும்.
இந்த முகாம் குறித்த விழிப்புணர்வை அனைத்து மக்களுக்கும் ஏற்படுத்தி, மக்களை இந்த முகாம்களுக்கு வரவழைக்க வேண்டியது நம்முடைய கடமை. அதேபோல் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களை நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் குறித்த காலத்திற்குள் நடத்த அனைத்து முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை கேட்டுக் கொள்கின்றேன்.
அனைத்து ஊராட்சிகளிலும் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை கேட்பவர்களுக்கு வழங்கி அந்த பதிவேடுகளை பராமரித்து அந்த செயலியையும் சரியாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த திட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்து விளையாட்டு உபகரணங்களும் ஊராட்சியில் உள்ள மாணவ, மாணவிகள், இளைஞர்களுக்கு விநியோகிக்கப்பட்டு பயன்படுத்துவதை உறுதி செய்ய துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை பொறுப்பாளர்களாக நியமித்து கண்காணிக்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதை உறுதி செய்யவும், செயல்படாத குழுக்களை கண்டறிந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.
அதேபோல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை நடத்தி அவற்றிற்கு உடனுடக்குடன் தீர்வு காணப்படும்போது, சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சி அமைப்புகளுடைய பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களையெல்லாம் வைத்துக் கொண்டு, பயனாளிகளுக்கு அந்த நலத்திட்டங்களையெல்லாம் வழங்குமாறு உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்கின்றேன்.
முதலமைச்சர் அவர்கள் எத்தனையோ திட்டங்களை தீட்டினாலும், நீங்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டால் தான், அந்த திட்டங்கள் மக்களை சென்றடையும். அரசு அலுவலர்களாகிய நீங்கள் அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து செயல்பட்டு, அரசுக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் நல்ல பெயரை மக்களிடத்திலே பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டு, அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்து, விடைபெறுகின்றேன் என்று துணை முதலமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு இந்தியாவின் விளையாட்டு தலைநகராக திகழ்வது குறித்து அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.