தமிழர்களின் தொன்மையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் தமிழ்நாட்டில் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கைகொண்ட சோழபுரம் என பல்வேறு பகுதிகளில் அகழாய்வுகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இதில் கீழடி ஆய்வில் 600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்தறிவு பெற்ற சமூகத்துடன் வாழ்ந்தது உறுதிப்படுத்துப்பட்டுள்ளது. மேலும் தமிழர்கள் எழுத்தறிவு பெற்ற சமூகத்தையும், கைவினைஞர்களின் சமூகத்தையும் கொண்ட ஒரு நகர்ப்புற குடியிருப்புகளுடன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் நமக்கு கிடைத்துள்ளது.
அதேபோல், தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு தொழில்நுட்பம் இருந்துள்ளது என்பதையும் நாம் ஆதாரங்களுடன் மெய்பித்து இருக்கிறோம். இப்படி தமிழர்களின் தொன்மையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு வெளிக்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஆழ்கடலிலும் தமிழர் வரலாறு தேடும் ஆய்வுப் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இது குறித்து சமூகவலைதளத்தில் அறிவிப்பு ஒன்றை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார்.
அதில், மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள "பூம்புகாரில்" , பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடலுக்கு அடியில் ஆய்வுகள் மேற்கொள்ளும் இப் பணியினை பேராசிரியர் கே. ராஜன் அவர்களின் தலைமையில், தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் அவர்களை உள்ளடக்கிய வல்லுநர் குழு தொடங்கியுள்ளது.
பழந்தமிழர்களின் தொன்மையை வெளிக்கொணர்வதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கும், நம் பாரம்பரியத்தை உலகரியச் செய்வதில் அவரது ஈடுபாட்டிற்கும், இந்த ஆய்வுகள் சிறந்த எடுத்துக்காட்டாகும்” என தெரிவித்துள்ளார்.