வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைத்திட அதிகபட்சமாக 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் வரை மானியம்! வேளாண் பொருட்களின் மதிப்புக்கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு அரியவாய்ப்பு! வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வேண்டுகோள்!.
2025-26ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் “2030 ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டினை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றவேண்டும் என்ற இலக்கினை நிர்ணயித்துள்ளார்கள். இதை அடைவதில் வேளாண் பொருட்களின் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் இன்றியமையாதது ஆகும். இதனைக் கருத்தில் கொண்டு, வேளாண் பொருட்களின் மதிப்புக்கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில் துவங்கும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்” என்று மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பினைச் செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 10 கோடி ரூபாய் வரையிலான புதிய மதிப்புக்கூட்டுதல் திட்டங்களுக்கு முதலீட்டு மானியமாக 25 சதவீதமும், பெண்கள், தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வட்டாரங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு (சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அட்டவணைப்படி), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குக் கூடுதலாக 10 சதவீதம் ஆக மொத்தம் 35 சதவீதம் என்ற வகையில் அதிகபட்சமாக ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இது தவிர அனைத்துப் பிரிவினருக்கும் 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இத்திட்டம், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் தொழில்கள் தக்காளி, மிளகாய், மஞ்சள், வாழை, முருங்கை, மா, மல்லிகை, சிறுதானியங்கள் போன்ற பல்வேறு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களின் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை பதப்படுத்தும் திட்டங்களாக இருக்கவேண்டும். அதாவது தக்காளி கூழ், தக்காளி கெச்சப், தக்காளி பவுடர், தக்காளி ஜாம், மாம்பழக்கூழ், மாம்பழ ஜாம், மா பவுடர், மஞ்சள் ஓலியோரெசின், மஞ்சள் இலை எண்ணெய், வாழைப்பழ ஸ்டார்ச் பவுடர், வாழை சிப்ஸ், முருங்கை இலைப் பொடி, முருங்கை விதை எண்ணெய், மிளகாய்ப் பொடி, மிளகாய் சாஸ், மிளகாய் எண்ணெய், மிளகாய் ஓலியோரெசின், மிளகாய் துகள்கள், மல்லிகை வாசனைத் திரவியங்கள், சிறுதானிய சத்துமாவு, சிறுதானிய தின்பண்டங்கள், சிறுதானிய கஞ்சிவகைகள், போன்ற பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களும் இதில் அடங்கும். திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பு குறைந்தபட்சம் ஐந்து சதவீதமாக இருக்க வேண்டும், மீதமுள்ள தொகை வங்கிக் கடனாகப் பெறப்படவேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள வேளாண் தொழில்முனைவோர்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, வங்கியில் கடன் ஒப்புதல் பெறப்பட்டபின், மானியம் பெறுவதற்கான அவர்களுடைய விண்ணப்பங்கள் மாவட்ட தொழில்நுட்பக்குழு மற்றும் மாநில அளவிலான திட்ட ஒப்புதல் குழுவால் மதிப்பாய்வு செய்யப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோருக்கு அவர்களின் தொழில் திட்டத்திற்கேற்ப மானியத்தொகை அதிகபட்சமாக ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் மற்றும் 5 ஆண்டுகளுக்கு 5 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். மானியத் தொகையானது, இரண்டு தவணைகளில், அதாவது முதல் தவணையாக 60 சதவீத மானியமும், இரண்டாம் தவணையாக 40 சதவீத மானியமும் வேளாண் தொழில் முனைவோர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக விடுவிக்கப்படும்.
ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்களின் கீழ் வேளாண் விளைபொருட்கள் மதிப்புக்கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில்களுக்கு ஏற்கனவே நிதி உதவி பெற்ற பயனாளிகளும் இத்திட்டத்தில் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இந்த பயனாளிகளுக்கு, இத்திட்டத்தின் அதிகபட்ச மானியத் தொகையிலிருந்து ஏற்கனவே வேறு ஏதாவது திட்டத்தில் பெற்றுவரும் மானியத்தொகை போக மீதத்தொகை மானியமாக வழங்கப்படும்.
எனவே, வேளாண் விளைபொருட்களை மதிபுக்கூட்டுதல், பதப்படுத்துதல் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை செயல்படுத்தி தரமான உற்பத்திப்பொருட்களை உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்து பொருளாதார ஏற்றம்பெற ஆர்வமுள்ள அனைத்து தொழில்முனைவோர்களும் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.