தமிழ்நாடு

“எதிர்காலத்தில் 2030க்குள் AIDS தொற்றில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

“எதிர்காலத்தில் 2030க்குள் AIDS தொற்றில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, HIV/AIDS மற்றும் பால்வினை நோய்த் தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் 2025 தொடக்கம்- மருத்துவமனை நோயாளர்கள் இனி “மருத்துவ பயனாளர்கள்” என்று அழைக்கப்படுவதற்கான அரசாணை ஓரிரு நாளில் வெளியிடப்படும்-மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை தொடங்கி வைத்து விழா பேருரையாற்றினார்கள்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (10.09.2025) சென்னை, கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பாக, எச்ஐவி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த் தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் - 2025 தொடங்கி வைத்து, உறுதிமொழி ஏற்று, விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டு, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் கூட்டு மருந்து சிகிச்சையினை தொடங்கி வைத்து, மாநில மற்றும் மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி, புதிய செஞ்சுருள் சங்கம், பள்ளி மாணவர்களிடையே வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி திட்டத்தினை தொடங்கி வைத்து விழா பேருரையாற்றினார்.

பிறகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- 

எச்ஐவி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த் தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் - 2025

எச்..வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் பாதிப்புகளால் சிகிச்சை பெற்று வருபவர்கள் தமிழ்நாட்டில் 1,39,350 பேர் இருக்கிறார்கள். அவர்களை பாதுகாக்கும் பொருட்டும், புதிய எச்..வி/எய்ட்ஸ் பால்வினை நோய்கள் பாதிப்புகள் வராமல் தடுக்கும் பொருட்டும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, கடந்த 4.5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தவகையில் இன்று எச்..வி/எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்த் தொற்றுகள் குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு மருத்துவத்துறையின் நிதிநிலை அறிக்கையில் எச்..வி/எய்ட்ஸ் பால்வினை தொற்றுகளுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு எண் 114ன்படி, தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் எச்..வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்கு சிகிச்சை வழங்கிட வேண்டும் என்கின்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தவகையில் முதற்கட்டமாக 4 தனியார் மருத்துவக்கல்லூரிகள் இந்த திட்டத்தில் இணைந்திருக்கிறார்கள். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கன்னியாகுமரி மெடிக்கல் மிஷன், ஈரோடு நந்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருவள்ளுர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய 4 தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் எச்..வி/எய்ட்ஸ், பால்வினை நோய்களுக்கு கட்டணமில்லாமல் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்க இன்று முதல் தொடங்கி வைக்கப்படுகிறது. அதற்கான ஆணைகள் சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது

“எதிர்காலத்தில் 2030க்குள் AIDS தொற்றில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழ்நாட்டில் 50  கல்லூரிகளில் செஞ்சுருள் சங்கம் உருவாக்கம்

அதோடுமட்டுமல்லாமல் அறிவிப்பு எண் 115ன்படி, தமிழ்நாட்டில் 50  கல்லூரிகளில் செஞ்சுருள் சங்கம் (Red Ribbon Club) உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் இந்த ஆண்டு ஜீன் திங்கள் 14 ஆம் தேதி உலக குருதி கொடையாளர் தினத்தில் 11 கல்லூரிகளில் செஞ்சுருள் சங்கங்கள் தொடங்கப்பட்டது. அதன்தொடர்ச்சியான இன்றைக்கு 20 புதிய கல்லூரிகளில்  செஞ்சுருள் சங்கம் (Red Ribbon Club)  முறையாக தொடங்கப்பட்டிருக்கிறது

100 பள்ளிகளில் வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி திட்டம் தொடக்கம் 

இதோடுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு எண் 116ன்படி, வளரிளம் பருவத்திலேயே 100 பள்ளிகளில் வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதன்படி இந்த ஆண்டு ஜீன் திங்கள் 14 ஆம் தேதி உலக குருதி கொடையாளர் தினத்தில் 11 பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 30 புதிய பள்ளிகளில் இந்த திட்டம் குறிப்பாக வளரிளம் பருவத்திலேயே பள்ளிகளில் வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி திட்டம் தொடங்குவதற்குரிய ஆணைகள் தரப்பட்டிருக்கிறது

ஏற்கெனவே  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, பல்வேறு திட்டங்கள் இந்த துறையில் நடைமுறையில் இருக்கின்றது. குறிப்பாகவும், சிறப்பாகவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2009 ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.5 கோடி வைப்பு நிதியுடன் அறக்கட்டளை ஒன்று தொடங்கினார். இந்திய அளவில் ஒரு சிறப்பான முயற்சியாகவும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒரு சீரிய திட்டமாகவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த திட்டத்தின் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்திய நேரத்தில் அதன் மூலம் ரூ.25 கோடி நிதி என்பது வளர்ச்சி அடைந்து உயர்ந்திருக்கிறது.

தமிழ்நாடு அரசின் பவர் பைனான்ஸ்சில் தொகுப்பு நிதியாக இருக்கின்றது. நமது  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது எச்ஐவி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் பாதிப்புகளால் தமிழ்நாட்டில் உள்ள 7,618 குழந்தைகளுக்கு கல்வி வசதிக்காகவும், மருத்துவ தேவைகளுக்காகவும், ஊட்டச்சத்து தேவைகளுக்காகவும் மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கப்படும் என்று அறிவித்து, கடந்த 3 மாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரூ.2.83 கோடி வழங்கப்பட்டிருக்கிறது

இன்றைய நாளில் புதிய சூளுரை என்கின்ற வகையில் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் எச்ஐவி/எய்ட்ஸ் பாதிப்புகள், நோயினால் ஏற்படுகின்ற தாக்கங்கள்,  எய்ட்ஸ் வராமல் தடுக்கின்ற வழிமுறைகள் ஆகியவை குறித்து பள்ளிகள், கல்லூரிகளில்  பல்வேறு போட்டிகள் நடத்தி  இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு  தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பாக முதல் பரிசாக ரூ.30,000/- இரண்டாவது பரிசாக ரூ.20,000/- மூன்றாவது பரிசாக ரூ.10,000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக எச்ஐவி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,39,350 பேர். ஆகவே புதிய நோய் பாதிப்புகள் பூஜ்ஜியம் நிலைக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 2030ஆம் ஆண்டிற்குள் புதிய எச்ஐவி/எய்ட்ஸ் பாதிப்புகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு கொண்டு வருவதற்குரிய உறுதி ஏற்று, ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்கின்ற இலட்சியத்தோடு இந்த நிகழ்ச்சி தற்போது நடத்தப்பட்டிருக்கிறது

“எதிர்காலத்தில் 2030க்குள் AIDS தொற்றில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

அகில இந்திய அளவில் எச்ஐவி பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 0.23%. இது 2010ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் எச்ஐவி பாதிப்பு சதவிகிதம் என்பது 0.38% ஆக இருந்தது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் காரணமாக தற்போது தமிழ்நாட்டில் எச்ஐவி பாதிப்பு என்பது 0.16%. இதுவும்கூட எதிர்காலத்தில் 2030க்குள் எய்ட்ஸ் தொற்றில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்கின்ற உறுதிமொழியோடு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது

நோயாளர்கள் இனி “மருத்துவப் பயனாளர்கள்”  என்று அழைக்கப்படுவர் 

மருத்துவ பயனாளர்கள் என்று அரசின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள் அறிவிப்பை அரசாணையாக வெளியிடுவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து மிக விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலை பெற்று இனிமேல் நோயாளிகள் என்று சொல்லக்கூடாது “மருத்துவப் பயனாளர்கள்” என்று சொல்ல வேண்டும் என்கின்ற வகையில் அந்த வாக்கியம் மாற்றப்படுகிறது. பொதுவாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது மயானங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களை வெட்டியான் என்ற பெயரில் இருந்து மயான உதவியாளர்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டார்கள். துப்புரவு பணியாளர்கள் என்கின்ற வகையில் பெயர் இருந்தவர்களுக்கு தூய்மை பணியாளர்கள் என்கின்ற வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. உடல் பாதிப்புகள் உள்ளடக்கி இருந்த தோழர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் என்கின்ற வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டார்கள். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் இன்றைய முதலமைச்சர் அவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக காலை உணவு திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சியில் இனிமேல் தமிழ்நாட்டில் மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளர்கள் என்று சொல்வதைக் காட்டிலும் “மருத்துவப் பயனாளர்கள்” என்று சொல்வதே சாலச் சிறந்ததாக இருக்கும், எனவே இனி முதற்கொண்டு “மருத்துவப் பயனாளர்கள்” என்றே அழைக்க வேண்டும் என்று சொல்லி அது தற்போது அரசாணையாக இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படவிருக்கிறது. ஆக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவமனைக்கு வருபவர்களை “மருத்துவப் பயனாளர்கள் என்றே அழைக்க வேண்டும் என்கின்ற சுற்றறிக்கையினை சம்மந்தப்பட்ட இயக்குநர்கள் மூலம் அனுப்பபடவிருக்கிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார்கள்

banner

Related Stories

Related Stories