மழைநீரைச் சேமித்திடும் வகையில் ரூ.159.08 கோடி மதிப்பீட்டில் 70 குளங்களில் புனரமைப்புப் பணிகள் மற்றும் 88 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை :
முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் பருவமழையினை முன்னிட்டு ஆறுகள், நீர்வழிக் கால்வாய்களில் தூர்வாரி அதன் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மழைநீர் வடிகால்வாய் அமைத்தல், அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய்களில் தூர் வாரும் பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் பெய்கின்ற மழையால் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுத்து, மழை நீரைச் சேமித்திடும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், ஜெர்மன் தொழில்நுட்பத்தில் விளையாட்டு மைதானங்கள் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கியமாக குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் கொள்ளளவை அதிகரிக்கும் பணிகளையும் மக்கள் பயன்படுத்தும் வகையில் குளத்தினைச் சுற்றி மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்ளுதல், பூங்காக்களில் மழைநீர் உறிஞ்சும் பூங்கா கட்டமைப்புகளை உருவாக்குதல், புதிதாக குளங்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 210 குளங்கள் இருந்த நிலையில் தற்போது, கடந்த நான்கு ஆண்டுகளில் மேலும் 41 குளங்கள் என மொத்தம் 251 குளங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் கடந்த நான்கு ஆண்டுகளில் 70 குளங்களில் ரூபாய் 144.34 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தவிர ரூபாய் 14.74 கோடி மதிப்பீட்டில் பூங்காக்களில் தேங்கும் மழைநீரை முழுமையாகச் சேகரித்து சேமித்திடும் வகையில் 88 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைத்திடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் தென் சென்னை பகுதியில் 22 குளங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைப்பெற்று வருகின்றன. தற்போது, மேலும் 44 குளங்களில் ரூபாய் 119.32 மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிண்டி ரேஸ் கிளப் வளாகத்தில் கடந்த ஆண்டில் நான்கு புதிய குளங்கள் அமைதக்கப்பட்டது. அதன், கொள்ளளவை இந்த ஆண்டில் இரட்டிப்பாக மேற்கொள்ளுவதற்கான பணிகள் நடைபெற்றன வருகின்றன. எம்.ஆர்.டி.எஸ். பகுதியில் சிக்ஸ்வென்ட் கல்வெர்ட் அருகில் கடந்த ஆண்டில் இரண்டு குளங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
குளங்கள் மேம்பாடு, மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைத்தல், புதிய குளங்கள் அமைத்தல் என கடந்த நான்காண்டுகளில் ரூபாய் 159.08 கோடி மதிப்பீட்டில் 70 குளங்களில் புனரமைப்புப் பணிகள் மற்றும் 88 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக பருவமழைக் காலங்களில் அதிக அளவில் மழைநீரைச் சேமித்து சாலையில் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர்த் தேக்கத்தை தவிர்ப்பதற்கும், மழைநீரை நிலத்தடியில் சேமிப்பதற்கும் மிகச் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் நலன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.