முரசொலி தலையங்கம் (03-09-2025)
மேற்கு மண்டலத்துக்கு மோடி என்ன செய்யப் போகிறார்?
அமெரிக்க நாட்டின் வரிவிதிப்பானது தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தை கொந்தளிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. “திருப்பூர், கோவையைக் காப்பாற்ற பா.ஜ.க. அரசே என்ன செய்யப் போகிறாய்?” என்ற கேள்வி எழுந்துள்ளது. “அதானி, அம்பானிக்காக அனைத்தையும் செய்யும் பிரதமர் மோடி, திருப்பூர் மற்றும் கோவையைக் காப்பாற்றச் செய்தது என்ன?” என்ற கேள்வி கிளம்பி இருக்கிறது.
அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி இனி செலுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது தமிழ்நாட்டின் மேற்கு மண்டலம்தான்.
உலகம் முழுக்க பயணம் செய்கிறார் பிரதமர் மோடி. ஆனால் இந்தியா இன்று தனிமைப்பட்டு நிற்கிறது. இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள அநியாய வரியைக் கண்டிக்க நாடுகள் இல்லை. அப்படியானால் இவரது பயணத்தால், இந்திய நாடு அடையும் பயன் என்ன?
அமெரிக்காவுக்கு பல தடவை சென்றுள்ளார். இன்னும் சொன்னால், அமெரிக்க அதிபராக டிரம்ப் வருவதற்கு பரப்புரையே செய்தார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து விழா நடத்தினார். ஆனால் இன்றைக்கு அதிக வரி இந்தியா மீதுதான் விழுந்துள்ளது. 50 விழுக்காடு வரி என்பது எந்த நாட்டுக்கும் இல்லை. அமெரிக்கா தன்னுடைய முக்கியமான எதிரி நாடாகச் சொல்லும் சீனாவுக்குக் கூட இவ்வளவு இல்லை. இதைத் தட்டிக் கேட்க தைரியம் இருக்கிறதா? இல்லை. 'ஏன் இவ்வளவு அதிக வரிகள்?' என்று கெஞ்சிக் கேட்கவாவது முடிந்ததா என்றால் அதுவும் இல்லை.
ஜவுளிகள், துணிகள், ஆயத்த ஆடைகள், மீன், இறால், ரத்தினம், தங்க நகைகள், தோல்கள், காலணிகள், எஃகு பொருட்கள், அலுமினியம், இயந்திரங்கள், இயந்திரப் பொருட்கள் ஆகியவை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகமாக ஏற்றுமதி ஆகிறது. இதில் தமிழ்நாட்டின் பங்கு அதிகம் ஆகும். அதிலும் குறிப்பாக கோவை, திருப்பூர்தான் அதிகமாக பாதிக்கப்படும்.
திருப்பூரில் ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி மதிப்பிலான ஜவுளிப் பொருட்கள் உற்பத்தி ஆகிறது என்றால் அதில் 12 ஆயிரம் கோடி மதிப்பிலான ஜவுளிப் பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆவதாக புள்ளிவிபரங்கள் சொல்கிறது. டிரம்பின் வரி விதிப்பால் 5 லட்சம் தொழிலாளர்கள் திருப்பூரில் மட்டும் வேலை இழப்பார்கள். 3 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடப்படலாம். இதன் ஒட்டுமொத்த இழப்பு 37 பில்லியன் டாலர்கள் என்று கணிக்கிறார்கள்.
அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் கூட்டம் திருப்பூரில் நடந்துள்ளது.“அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவின் ஏற்றுமதிக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பனியன் தொழில் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். இத்தகைய வரி விதிப்பின் காரணமாக ஆயிரக்கணக்கான பனியன் தொழிற் சாலைகள் மூடப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, உயர்ந்துள்ள வரிச் சுமைக்கேற்ப ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கார்ப்பரேட் வரியை உயர்த்துவதன் மூலமும்,ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வர்த்தக வருமானத்தின் ஒருபகுதியை எடுப்பதன் மூலமாகவும் ஊக்கத் தொகைக்கான நிதியை திரட்ட இயலும்.
ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி கடன் தேவையை பூர்த்தி செய்ய, அதிக வங்கி கடன்கள், அதற்கான உத்தரவாதம் அல்லது காப்பீடு மூலம் நிதி ஆதரவு வழங்க வேண்டும். வட்டியில் சலுகை, கடன் உதவி ஆகியவை அமெரிக்காவின் வரி தாக்கத்தினைக் கடந்து செல்லவும் சர்வதேச சந்தையில் போட்டியை சமாளிக்கவும் உதவும். பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தக வாய்ப்புகளை, கூடுதலாக ஏற்படுத்தி தர வேண்டும்.” என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருப்பூர் பனியன் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஜவுளி ஆடைகளுக்கு வரி விதித்து உள்நாட்டு ஜவுளி வர்த்தகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை இழப்பால் வருமானம் இழக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒன்றிய அரசு உடனடியாக தொழிலாளர்களையும், தொழில்களையும் பாதுகாக்கின்ற வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.
அமெரிக்க ஏற்றுமதிக்கான சரக்கு போக்குவரத்து, ஆறு நாட்களில், வெகுவாக சரிந்துவிட்டதாக, கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த வரி உயர்வால் ஏற்படும் இழப்பைத் தவிர்க்கும் நோக்கில், திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் தற்போது அமெரிக்காவிற்கு பின்னலாடைகளை தள்ளுபடி விலையில் ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவிற்கு மட்டுமே ஏற்றுமதி செய்யும் சில உற்பத்திப் பிரிவுகள் தங்களது உற்பத்தியையே நிறுத்திவிட்டன. இவற்றை உணர்ந்துதான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்னெச்சரிக்கை மணியை அடித்தார்.
மேற்கு மண்டலத்தைக் காக்க மோடி என்ன செய்யப் போகிறார்? பா.ஜ.க. மேற்கு மண்டலத்தை குறிவைத்து எப்போதும் செயல்படும் கட்சியாகும். மேற்கு மண்டலத்து மக்களது வாக்குகளைக் குறி வைக்கும் பா.ஜ.க., மேற்கு மண்டலத்துத் தொழில்களைக் காக்க என்ன செய்யப் போகிறது?
குஜராத் நகை ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் ட்ராபேக் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டுத் தொழில்கள் கண்டுகொள்ளப்படவில்லை. பின்னலாடை தொழிலைப் பாதுகாக்க சிறப்பு நிதி தொகுப்பை அறிவிக்க வேண்டும். அனைத்து மூலப்பொருள்களுக்கான இறக்குமதி வரியை நிறுத்தி வைக்க வேண்டும். பருத்திக்கு அறிவித்த தற்காலிக இறக்குமதி வரி விலக்கை நிரந்தரமாக்க வேண்டும். செய்வாரா பிரதமர்?
அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் பின்னலாடைத் தொழிலை காப்பாற்ற சிறப்பு நிதி தொகுப்பை உடனடியாக பிரதமர் அறிவிக்க வேண்டும். செய்வாரா பிரதமர்?