தமிழ்நாடு

”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

இந்தியத் திறன் போட்டிகளில் தமிழ்நாடு 40 பதக்கங்களைப் பெற்று இந்திய அளவில் 3வது இடத்தைப் பிடித்தது.

”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (01.09.2025), சென்னை, நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக அலுவலக கூட்டரங்கில் “நான் முதல்வன்” மற்றும் “வெற்றி நிச்சயம்” திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இன்றைய ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் நான் முதல்வன் திட்டம் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டங்களின் முன்னேற்றம், எதிர்கால இலக்குகள், மற்றும் மாவட்ட அளவிலான செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மார்ச் 01, 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் முன்னெடுப்புகளான

1.பொறியியல்/ கலை மற்றும் அறிவியல் / பாலிடெக்னிக் / தொழிற்பயிற்சி நிலையங்களில் திறன் பயிற்சி வழங்குதல்

2.SCOUT திட்டம்

3.தமிழ்நாடு திறன் போட்டிகள்

4.நிரல் திருவிழா(Hackathon)

5.தமிழ்நாடு மாநில அளவிளான வேலைவாய்ப்பு திட்டம்(TNSLPP)

6.கல்லூரிக் கனவு திட்டம்

7.உயர்வுக்குப்படி திட்டம்

8.நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் (குடிமைப்பணித் தேர்வு ஊக்கத் தொகை திட்டம் மற்றும் SSC/RRB & Banking போட்டித் தேர்வுகளுக்கான உறைவிடப் பயிற்சி)

ஆகியவற்றின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தற்போதைய திறன் பயிற்சி பாடங்களையும் அதன் மூலம் கிடைக்கப்பெறும் வேலைவாய்ப்பு பற்றியும் கேட்டறிந்து இவற்றுள் திறம்பட செயல்படும் கல்லூரிகளை தேர்ந்தெடுத்து ஊக்குவிக்க ஆலோசனை வழங்கினார்கள்.

நான் முதல்வன் திட்டமானது ஆண்டுதோறும் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைத் திறன் சார்ந்த பயிற்சிகள் மூலம் தொழில்துறைக்கு தயாரான திறன் மிகு சமுதாயத்தை உருவாக்கும் இலட்சிய நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. முதலாம் ஆண்டிலேயே 13 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, தற்போது வரை சுமார் 41 லட்சம் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. திட்டம் துவங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை கல்லூரி பேராசிரியர்களுக்கு ஒரு லட்சம் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன் SCOUT திட்டத்தின் முதல் படியாக பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் தர்ஹம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தர்ஹம் பல்கலைக்கழகத்தில் நேரடி பயிற்சி 25 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சார்ந்த 10 மாணவிகள் ஜப்பான் நாட்டில் Internship பயிற்சி மேற்கொண்டு அதில் 4 மாணவிகள் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் Bio- Technology சார்ந்த ஆராய்ச்சி பயிற்சி பெற்றதன் மூலம் முதுகலை பயில வாய்ப்பு கிடைத்ததுடன் இந்தியாவில் உள்ள ஐஐடி ரூர்க்கியில் ஆராய்ச்சி பயிற்சியினை தொடரவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டில் 6 மாணவர்கள் தென்கொரியா நாட்டில் உள்ள Pusan Universityயிலும் Gachon Universityயிலும் Internship பயிற்சியினை நிறைவு செய்தனர். இதில், Gachon University இல் Internship முடித்த 3 மாணவர்களுக்கு அதே பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கப் பெற்ற விவரத்தையும் நடப்பாண்டில் SCOUT திட்டம் மூலம் சர்வதேச நாடுகளில் மாணவர்களுக்கு வழங்க உள்ள திறன் பயிற்சிகளை குறித்த விவரத்தையும் கேட்டறிந்தார்கள்.

நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக “Placement Readiness Training through Corporate Volunteering” பயிற்சி வகுப்புகள் தொழில் துறையின் நிபுணர்கள் மூலம் நேரடியாக மாணவர்களுக்கு வழிகாட்டுவதன் மூலம், வேலைவாய்ப்பிற்கு தேவையான அத்தியாவசிய திறன்களைப் பகிர்ந்து பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம் தற்போது Cognizant, Capgemini, Avantor, First Source, Kambaa, Milacron, Polkart, HCLTech, Kotak Bank, HDFC Bank உள்ளிட்ட 28 முன்னணி நிறுவனங்களின் 131 தன்னார்வலர்கள் மூலம் 22 அரசு கல்லூரிகளில் உள்ள 3,899 இறுதியாண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கியது குறித்து கேட்டறிந்தார்கள்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தியத் திறன் போட்டிகளில் தமிழ்நாடு 40 பதக்கங்களைப் பெற்று இந்திய அளவில் 3வது இடத்தைப் பிடித்தது. அதனைத் தொடர்ந்து 2026 இல் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற உள்ள சர்வதேச திறன் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையினை உயர்த்துவதற்கும் அவர்களுக்குத் தேவையான உயர்தர தொழில்நுட்ப பயிற்சியினை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்குவதற்கும் ஆலோசனை வழங்கினார்கள்.

நான் முதல்வன் நிரல் திருவிழா திட்டமானது இளைஞர்களின் படைப்பாற்றல் மற்றும் புதுமை திறனை வளர்க்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. முதலாவது பதிப்பில் 8,486 குழுக்களும், இரண்டாவது பதிப்பில் 15,337 குழுக்களும் பங்கேற்றன. மேலும், நிரல் திருவிழா 2.0 மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் முன்னெடுப்பு விவரங்களையும் மேலும் அவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்குவதற்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க அறிவுரை வழங்கினார்கள்.

கடந்த 3 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு விருப்பம் தெரிவித்த 3,60,389 இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாக வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் நான் முதல்வன் மாவட்ட வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் பணி நியமனம் பெற்றுள்ளனர். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம்களை அதிகப்படுத்தவும் அதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்கள்.

நான் முதல்வன் திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் பயிற்சிகளின் விவரங்களை கேட்டறிந்து தேர்ச்சி எண்ணிக்கையை அதிகப்படுத்த இலக்கு நிர்ணயித்து செயல்படுமாறு ஆலோசனை வழங்கினார்கள்.

”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 01.07.2025 அன்று "வெற்றி நிச்சயம்" திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக, முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து, தொழில்துறை சான்றிதழுடன் கூடிய குறுகிய கால திறன் பயிற்சிகள் கட்டணமின்றி வழங்கப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் திறன் பயிற்சிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்கள்.

தமிழ்நாடு முழுவதும் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள படித்து வேலைதேடும் இளைஞர்களும், பள்ளி அல்லது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களும் தொழில்சார் திறனை மேம்படுத்திக் கொள்ள விரும்புவர்களும் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பயிற்சிக் கட்டணத்தை முழுமையாக அரசே ஏற்கிறது. மேலும், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், இலங்கைத் தமிழர்கள், மீனவ இளைஞர்கள், சிறுபான்மையினர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுப் பகுதியில் வாழும் இளைஞர்கள், தூய்மைப் பணியாளர்கள் குடும்ப உறுப்பினர்கள், திருநங்கைகள், ஆதரவற்ற விதவைகள் போன்ற சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு திறன் பயிற்சியில் முன்னுரிமை அளிக்கப்பட்டு, ரூ.12,000 வரை திறன் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

வெற்றி நிச்சயம் திட்டத்தில் சமுதாயத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள வகுப்பினர்களுக்காக தனிக்கவனம் செலுத்தி திறன் பயிற்சிகள் அளிக்கப்படுவது போலவே விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியவர்கள் அவர்கள் விரும்பும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் திறன் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள்.

தொலைதூர மாவட்டங்களில் இருந்து பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு உணவுடன் கூடிய இருப்பிட வசதியும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக வழங்கப்படுகிறது. மொத்தம் 38 தொழிற்பிரிவுகளில் 165 விதமான திறன் பயிற்சிகள், முன்னணி பயிற்சி நிறுவனங்களின் மூலம் திறன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மாவட்டந்தோறும் அந்தந்த பகுதியின் முதன்மையான தொழிற்துறைகளுக்கேற்ப, ZF Rane, TVS Supply Chain, Armoured Vehicle Nigam Limited, TI Murugappa Group, Brakes India, Tech Mahindra Foundation, Tata Electronics, VVDN, Groom India Salon & Spa, LG, Ashok Leyland, Apollo MedSkills, Kauvery Hospitals, Amazon Web Services, Tally, MacMillan, British Council, Adyar Ananda Bhavan, Welding Research Institute- Bharat Heavy Electricals Limited போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இதன் மூலம், பயிற்சி பெற்றவர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. பயிற்சியில் துறைத்தேர்ந்த பயிற்சியாளர்கள் வாயிலாக, ஜெர்மன் உள்ளிட்ட அயல்மொழிப் பயிற்சிகளும் இடம்பெறுகின்றன, இதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்புக்கான பாதைகள் உருவாக்கப்படுகின்றன.இத்திட்டத்தின் மூலம் தற்போது 29,855 நபர்கள் திறன் பயிற்சி பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் செயல்பாடுகளை தொடர் கண்காணிப்பின் மூலம் மேம்படுத்துவதற்கான உரிய ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து ”தமிழ்நாட்டில் திறன் மிகு இளைஞர்களை உருவாக்கிடவும் - அவர்களின் வெற்றியை உறுதி செய்திடவும் என்றும் அயராது உழைப்போம்” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories