தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 173.86 கோடி ரூபாய் செலவில், 19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், பெரும்பாக்கம், ஒட்டன்சத்திரம் மற்றும் கடலாடி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்கள், சென்னையில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் ஆணையரகம், திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டடம் மற்றும் வால்பாறையில் கட்டப்பட்டுள்ள சிங்காரவேலர் ஓய்வு இல்லம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றி வரும் தமிழ்நாட்டில், நவீன தொழில்நுட்ப திறன் தேவைகளைக் கருத்திற் கொண்டு, தொழிற்சாலைகளுக்கேற்ற திறமையான மனித வளத்தை உருவாக்குவதற்காக ரூ.2877 கோடி செலவில் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொழில்நுட்ப மையங்களாக மேம்படுத்தப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டன. இதன் முத்தாய்ப்பாக, தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே, தொழில் 4.0 தொழிற்பிரிவுகளில் பயின்றவர்கள் உட்பட 29 மாணவர்கள் 2024-ஆம் ஆண்டில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று நமது மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் ஆங்கில மொழியில் பேசும் திறன் மற்றும் மென்திறன் வளர்ப்புப் பயிற்சியும், தொழிற்நுட்ப மையங்கள் வழியாக மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களில் குறுகிய கால பயிற்சிகளும் வழங்கப்பட்டதன் பலனாக மாணவர்களின் திறன் மேம்படுத்தப்பட்டு நடப்பாண்டில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள், பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
திறன் பெற்ற தொழிலாளர்களின் தேவையைக் கருத்திற்கொண்டு, “எல்லார்க்கும் எல்லாம்” என்ற கொள்கையின் அடிப்படையில் பின் தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்களும் பயன்பெறும் வகையில், ஒரே நாளில் வரலாற்று சாதனையாக, 128 கோடியே 55 இலட்சம் ரூபாய் செலவில், செஞ்சி, மரக்காணம், திசையன்விளை, ஏம்பல், சாலவாக்கம், செம்பனார்கோவில், தா.பழூர், திருஉத்திரகோசமங்கை, மணப்பாறை, காங்கேயம், குருக்கள்பட்டி, திருச்செங்கோடு, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பரங்குன்றம், மண்ணச்சநல்லூர், பேரூர் மற்றும் காரிமங்கலம் ஆகிய 19 இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் பெரும்பாக்கம், ஒட்டன்சத்திரம் மற்றும் கடலாடி ஆகிய இடங்களில் 17 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.
தொழிலாளர் துறையின் வாயிலாக, பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்கள் அமலாக்கப்படுவதோடு, சமரசப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில், 31.39 இலட்சம் பதிவு பெற்ற அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், ஈமச்சடங்கு, விபத்து ஊனம், முடக்க ஓய்வூதியம் மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் ரூ.2811.52 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டு, தொழிலாளர் நலனுக்காக தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, தொழிலாளர் துறை சார்பில் 27 கோடியே 67 இலட்சம் ரூபாய் செலவில் சென்னை அண்ணா நகரில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் ஆணையரக அலுவலகக் கட்டடம், திருப்பூர் மாவட்டம், தொட்டிப்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டடம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில் கட்டப்பட்டுள்ள சிங்காரவேலர் ஓய்வு இல்லம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.