தமிழ்நாடு

ரூ.51.04 கோடி - புதிய கல்லூரி கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உயர்கல்வித் துறை சார்பில் ரூ.51.04 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ.51.04 கோடி  - புதிய கல்லூரி கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி, அழகப்பா பல்கலைக்கழகம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றில் 51 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்கள், வகுப்பறைக் கட்டடங்கள், தேர்வுக் கூடம், ஆய்வகக் கட்டடங்கள், புத்தாக்க வளர் மையம் போன்ற பல்வேறு கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில “புதுமைப் பெண்” திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயில “தமிழ்ப்புதல்வன்” ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்

உயர்கல்வித் துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடும் வகையில், மதுரை மாவட்டம், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 3 கோடியே 89 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள் மற்றும் 5 கழிவறைத் தொகுதிக் கட்டடங்கள்;

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தேர்வுக்கூடம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தில், 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புத்தாக்க வளர் மையம்;

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 5 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறைகள் மற்றும் 5 ஆய்வகக் கட்டடங்கள்;

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 12 கோடியே 58 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடம் மற்றும் திருநெல்வேலி, ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 98 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 14 வகுப்பறை கட்டடங்கள்;

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடம்; சென்னை வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியில் 5 கோடியே 28 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் இதர கட்டடங்கள்;

என மொத்தம் 51 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை சார்ந்த கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

banner

Related Stories

Related Stories