சென்னை கொளத்தூர் தொகுதியில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர் பாபு நேரில் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.
கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் ராஜா தோட்டம் புதிய குடியிருப்புகளின் இறுதி கட்டப் பணிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்து நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் திரு.வி.க. நகர் பேருந்து நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் பெரியார் நகர் பேருந்து நிலையத்தின் இறுதி கட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் சி.எம்.டி.ஏ. சார்பில் கட்டப்பட்டு வரும் பெரியார் நகர் முதல்வர் படைப்பகம் கட்டிடத்தின் இறுதி கட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது,
"வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் மற்றும் பெரியார் நகர் பேருந்து நிலையம் இறுதிக்கட்ட பணிகளை துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டேன். விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. அதேபோல் கொளத்தூர் பேப்பர் மில்ஸ் ராஜா தோட்டம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஆய்வு மேற்கொண்டோம்.
சிடிஎம்ஏ மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜி.கே.எம் காலனி கட்டப்பட்டு வரும் குத்துச்சண்டை மைதானத்தையும் ஆய்வு மேற்கொண்டோம். அனைத்தும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது." என தெரிவித்தார்.
மேலும் நிகழ்வில் சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் பிரகாஷ் ஐஏஎஸ், கொளத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் ஐசிஎப் முரளிதரன், மண்டலக்குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.