தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (15.8.2025) முகாம் அலுவலகத்தில், தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்க அரசு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக அனைத்து சங்க கூட்டமைப்பின் நிர்வாகி திருமதி பியூலா ஜான் செல்வராஜ், சென்னை மாநகராட்சி மலேரியா மற்றும் சுகாதார தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகி பி.ஜெயசங்கர், பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து துறை தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி எஸ். புருசோத்தமன், தொழிலாளர் காங்கிரஸ் டிரேட் யூனியன் நிர்வாகி ஐ.ஜெயகுமார்,
பெருநகர சென்னை மாநகராட்சி டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பணியாளர் சங்கத்தின் நிர்வாகி திரு. செங்குட்டுவன், உள்ளாட்சித் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி பேரூராட்சி தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி ஆர். சரவணன், பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் முன்னேற்ற நலச் சங்கத்தின் நிர்வாகி ஜி. ராமு, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பணியாளர் சங்கத்தின் நிர்வாகி எஸ். அன்புதாசன், தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகி ஜி. சத்தியகுமார், துப்புரவு மேற்பார்வையாளர், துப்புரவு ஆய்வாளர், துப்புரவு மேஸ்திரி சங்கத்தின் நிர்வாகி முத்து ரவிச்சந்திரன் உள்ளிட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் ஊழியர் தொழிற்சங்கங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் சந்தித்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
திராவிட மாடல் அரசு, தூய்மைப் பணியாளர்களின் நலன் காத்திடவும், அவர்களின் சமூக பொருளாதார நிலையினை உயர்த்திடவும், தூய்மைப் பணியாளர்களின் தொழில்சார் நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் தனித்திட்டம், பணியின் போது உயிரிழக்கும் நிலை ஏற்பட்டால் 10 இலட்சம் ரூபாய் நிதி பாதுகாப்பு, சுயதொழில் தொடங்குவதற்காக அதிகபட்சம் 3.50 இலட்சம் ரூபாய் வரை மானியம் மற்றும் கடன் தொகையை தவறாமல் திருப்பிச் செலுத்துவோருக்கு வட்டி மானியம், தூய்மைப் பணியாளர்களின் பிள்ளைகளின் உயர்கல்விக்காக “புதிய உயர் கல்வி உதவித் தொகை திட்டம்”, தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் உதவியோடு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டங்களின் கீழ், அடுத்த 3 ஆண்டுகளில் 30,000 வீடுகள் வழங்கும் வீட்டு வசதி திட்டம், பணியின் போது இலவச காலை உணவு வழங்கும் திட்டம் ஆகிய புதிய அறிவிப்புகள் நேற்று (14.8.2025) வெளியிட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்களின் வாழ்வு ஏற்றம் பெற்றிட, தாயுள்ளதோடு தங்களுடைய நீண்ட கால கோரிக்கைகளை ஏற்று பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தூய்மைப் பணியாளர் நலச்சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டு மகிழ்வுக் கடிதத்தினை அளித்தனர்.