கீழடி தொல்பொருள் அகழ்வாராய்ச்சி அறிக்கையை ஒன்றிய அரசு ஏற்று இன்னும் தமிழ்நாட்டின் தொன்மையை அறிவிக்காதது ஏன் என மக்களவையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள கீழடி தொல்லியல் தளத்தின் அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிடுவதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்திற்கான காரணங்கள் என்ன?
ஜனவரி 2023 இல் தயாரிக்கப்பட்டு இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்திற்கு (ASI) சமர்ப்பிக்கப்பட்ட கீழடி வரைவு அகழ்வாராய்ச்சி அறிக்கையை அரசாங்கம் பெற்றதா? அதை ஏற்றுக்கொண்டதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?
இந்த வரைவு அறிக்கை மீது ஒன்றிய அரசாங்கத்தால் அல்லது ASI ஆல் அதிகாரப்பூர்வமாக ஆட்சேபனைகள் ஏதும் எழுப்பப்பட்டதா?
கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி தாக்கல் செய்யப்பட்ட அசல் அறிக்கையை மதிப்பாய்வு செய்ய அல்லது மாற்றியமைப்பதற்காக தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரி அல்லது அதிகாரிகள் பற்றிய விவரங்கள் என்ன?
கீழடி குறித்த இறுதி அறிக்கையை பொதுவில் வெளியிடுவதற்கும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கும் அரசு ஏதும் காலக்கெடு வைத்துள்ளதா?
கிமு 580 க்கு முந்தைய மிகவும் மேம்பட்ட நாகரிகத்தை சுட்டிக்காட்டும் பல அகழ்வாராய்ச்சி தளங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் இருக்கும் நிலையில், கீழடியை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?” என கேள்விகளை எழுப்பியிருந்தார்.