தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.08.2025) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 177 கோடியே 16 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள், மீன் விதை பண்ணை மற்றும் பயிற்சி மையத்துடன் கூடிய அலுவலகக் கட்டடம் என 9 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்திற்காக தெரிவு செய்யப்பட்ட 89 நபர்களுக்கும், கால்நடை பராமரிப்புத் துறைக்காக தெரிவு செய்யப்பட்ட 22 நபர்களுக்கும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கருணை அடிப்படையில் 17 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மீன்வளத்தை பாதுகாத்தல், நிலைக்கத்தக்க மீன்பிடிப்பு, மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல், மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மீன்பிடி தடைகாலங்களில் மீனவர்களுக்கு நிதியுதவி, மீன்பிடி படகுகளுக்கு வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் வழங்குதல், பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்குதல், புதிய சூரை மீன்பிடி தூண்டில் மற்றும் செவுள் வலை விசைப்படகுகளை வாங்கிட மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை மீனவ மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள் , மீன் விதைப்பண்ணை மற்றும் பயிற்சி மையத்துடன் கூடிய அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தல்
கன்னியாகுமரி மாவட்டம், கோடிமுனை கிராமத்தில் 35 கோடி ரூபாய் செலவிலும் மற்றும் பள்ளம்துறை கிராமத்தில் 26 கோடி ரூபாய் செலவிலும் தூண்டில் வளைவுடன் மேம்படுத்தப்பட்டுள்ள மீன் இறங்குதளங்கள், தூத்துக்குடி மாவட்டம், அமலிநகர் கிராமத்தில் 58 கோடி ரூபாய் செலவில் தூண்டில் வளைவுடன் மேம்படுத்தப்பட்டுள்ள மீன் இறங்குதளம், திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில் 26 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் நிரந்தரமாக நிலைப்படுத்தப்பட்டுள்ள முகத்துவாரம், சாத்தான்குப்பம் கிராமத்தில் 8 கோடி ரூபாய் செலவிலும் மற்றும் அரங்கன் குப்பம், கூனான்குப்பம் கிராமங்களில் 6 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் இறங்குதளங்கள், கடலூர் மாவட்டம், சொத்திக்குப்பம் மற்றும் ராசாப்பேட்டை கிராமங்களில் 8 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் இறங்குதளங்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம், வடக்கனந்தல், கோமுகி அணையில் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு மீன் விதைப்பண்ணை, சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு மீன் விதைப்பண்ணையில் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடம்; என மொத்தம் 177 கோடியே 16 இலட்சம் ரூபாய் செலவிலான 9 முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் பணி நியமன ஆணைகளை வழங்குதல்
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், ஆவின் நிறுவனத்தில் சிறப்பான முறையில் வெளிப்படைத் தன்மையுடன் பணி நியமனம் செய்வதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக இந்த அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்திற்காக மொத்தம் 179 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணியாற்றி வருகின்றனர்.
அதன் தெடர்ச்சியாக, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக மேலாளர் (நிதி) பணியிடத்திற்கு ஒரு நபர், துணை மேலாளர் (பால்பதம்) பணியிடத்திற்கு 21 நபர்கள், துணை மேலாளர் (தர உறுதி) பணியிடத்திற்கு 11 நபர்கள், துணை மேலாளர் (கணினி) பணியிடத்திற்கு ஒரு நபர், செயற்பணியாளர் (ஆய்வகம்) பணியிடத்திற்கு 9 நபர்கள், தொழிற்நுட்பர் (கொதிகலன்/ மின்னாளர் / பற்ற வைப்பவர்/ ஆய்வகம்/இயக்குபவர்) பணியிடங்களுக்கு 46 நபர்கள், என மொத்தம் 89 பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பணி நியமனம் செய்யப்பட்ட 89 நபர்கள் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரிவர்.
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பணி நியமன ஆணைகள் வழங்குதல்
கால்நடை பராமரிப்புத் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் முன்கொணர்வு பணியிடங்களான 22 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்குதல்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதார்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு 10 நபர்கள், உதவியாளர் (Attendant) பணியிடத்திற்கு 5 நபர்கள், அடிப்படை பணியாளர் பணியிடத்திற்கு 2 நபர்கள், என மொத்தம் 17 நபர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.