முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், 949 கோடியே 53 இலட்சம் ரூபாய் செலவில் 61 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 182 கோடியே 06 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 295 கோடியே 29 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 19,785 பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
முதலாவது அறிவிப்பு
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் அடுத்த கட்டமான, நீராறு-நல்லாறு மற்றும் ஆனைமலையாறு திட்டமானது, திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.
அதை செயல்படுத்த, கேரள மாநில அரசிடம் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நம்முடைய விவசாயிகளின் இந்த கனவுத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
இரண்டாவது அறிவிப்பு
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட பாசனப்பகுதியில், பல வாய்க்கால்கள் நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் இருப்பதாக பாசன சங்கத் தலைவர்களும் - விவசாயிகளும் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் கோரிக்கையை ஏற்று, வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்காக இந்த ஆண்டே 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
மூன்றாவது அறிவுப்பு
திருப்பூர் மாநகரத்தில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கின்ற வகையில், நவீன வசதிகளுடன் கூடிய மாவட்ட மைய நூலக கட்டடம் 9 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். திருப்பூர் மாநகராட்சி அமர்ஜோதி கார்டன் பகுதியில், பல்நோக்கு விளையாட்டு அரங்கம் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
நான்காவது அறிவிப்பு
காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீர் வழங்கலை மேம்படுத்த, பரஞ்சேர்வழி சிவன்மலை, கீரனூர் ஊராட்சிகளில் 11 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு
தாராபுரம் வட்டத்தில் இருக்கின்ற வேளாண் பெருமக்கள் பயன்பெறும் வகையில், நஞ்சியம்பாளையம் அருகே உப்பாற்றின் குறுக்கே, 7 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும்.
ஆறாவது அறிவிப்பு
ஊத்துக்குளி வட்டத்தில் ஆறரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வெண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.
ஏழாவது அறிவிப்பு
உடுமலைப்பேட்டை பகுதியில் இருந்து சட்டத் துறை அமைச்சராக பதவி ஏற்று, உடுமலைப்பேட்டை அரசு கல்லூரி அமைக்க 25 ஏக்கர் நிலம் வழங்கியவருமான எஸ்.ஜே. சாதிக் பாட்சா அவர்களுடைய பெயரில், தாஜ் தியேட்டர் அருகில் இருக்கக்கூடிய சாலைக்கு அவருடைய பெயர் சூட்டப்படும்!
இதுமட்டுமல்ல, இன்று காலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி, விவசாயிகள் என்னிடத்தில் மனு அளித்தார்கள். அது குறித்து, ஆராய்ந்து, பரிந்துரை வழங்க விரைவில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.