தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.8.2025) செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தாம்பரம் – மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக் கட்டடத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கி ஆற்றிய உரை:-
நேற்று தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கப்போகின்ற மாநிலக் கல்விக் கொள்கையை நான் வெளியிட்டேன்! உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் முதன்மை கல்வி நிறுவனங்களில் சேர்ந்திருக்கும், நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நான் பாராட்டு தெரிவித்தேன்! இன்றைக்கு, இந்த மாவட்ட மக்களின் உடல்நலனுக்கு உறுதுணையாக இருக்கப்போகின்ற செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை தாம்பரத்தில் திறந்து வைத்துவிட்டு, இந்த விழாவிற்கு நான் வந்திருக்கிறேன்!
கல்வியும் - மருத்துவமும்தான் நம்முடைய திராவிட மாடல் அரசின் இரு கண்கள் என்று நான் அடிக்கடி சொல்வேன்! அதற்கு இந்த இருநாள் நிகழ்ச்சிகளும்தான் எடுத்துக்காட்டு! 20 ஆயிரத்து 21 பேருக்குப் பட்டா வழங்குகின்ற இந்த சிறப்பான விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் - விழாவின் நாயகர் மாண்புமிகு தா.மோ.அன்பரசன் அவர்கள்! அவரைப் பொறுத்தவரைக்கும், நான் என்ன சொன்னாலும் அதை தட்டாமல், தவறாமல் உடனடியாக நிறைவேற்றிக் காட்டக்கூடியவர்! இந்தச் செங்கல்பட்டு மாவட்டத்தை வளர்ச்சி மிகுந்த மாவட்டமாக உருவாக்க அவருக்கு துணை நிற்கும் மாவட்ட ஆட்சியர் சினேகா அவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவிக்க விரும்புகிறேன்!
அதேபோல, தாம்பரத்தை சுற்றியிருக்கும் மக்களின் நன்மைக்காக, பயன்பாட்டிற்காக தாம்பரம் அரசு மருத்துவமனையை செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக 110 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தரம் உயர்த்தியிருக்கிறோம்! மேலும், 7 கோடியே 24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பல் மருத்துவப் பிரிவையும் உருவாக்கியிருக்கிறோம்! அதோடு, தாம்பரத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகத்தையும் திறந்து வைத்திருக்கிறேன்.
பம்மல் - திருநகரில் உள்ள மூவேந்தர் தெரு, பவணந்தியார் பூங்கா, CTO காலனி ஆகிய இடங்களில் மொத்தம் 90 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் மூன்று நகர்ப்புற துணை சுகாதார நிலையங்களையும் திறந்து வைத்திருக்கிறேன். இதையெல்லாம் சிறப்பாக கட்டிக்கொடுத்திருக்கும் நம்முடைய மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கும், இந்த மருத்துவமனைகளை சிறப்பாக செயல்படுத்த போகும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதெல்லாம் சென்னையின் புறநகர் பகுதியில் வாழக்கூடிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பொதுவாக, நான் ஒரு அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றால், நான் கேட்கும் முதல் கேள்வியே “இன்றைக்கு எத்தனைப் பேருக்கு பட்டா வழங்கப் போகிறோம்?” ஏனென்றால், ஒரு மனிதருக்கு அடிப்படைத் தேவை என்பது, உண்ண உணவு - உடுக்க உடை - இருக்க இடம்! இதில், உணவும் - உடையும் எளிதாக கிடைத்துவிடலாம்; ஆனால், இருக்கும் நிலம் எளிதாக கிடைத்துவிடாது! ஏனென்றால், நிலம்தான் அதிகாரம்! காலுக்கு கீழ் சிறிது நிலமும் - தலைக்கு மேல் ஒரு கூரையும் இன்னும் பலருக்கு கனவுதான்! அதனால்தான், பட்டா வழங்குவதில் நான் எப்போதும் தனி கவனம் செலுத்துவேன்! அந்த வகையில், இந்த நிகழ்ச்சியை பட்டா வழங்கும் நிகழ்ச்சியாக சேர்க்கப்பட்டிருப்பது உள்ளபடியே பெருமகிழ்ச்சி!
தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறை மூலமாக பட்டா வழங்கிக் கொண்டிருக்கும் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் நம்முடைய அண்ணாச்சி கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களுக்கும், அவருக்குத் துணையாக நின்று பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய ‘ஆற்றல்மிகு செயலாளர் அமுதா’ ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும், ஏன் அவருடைய Team-க்கும் என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!
ஏற்றத் தாழ்வற்ற - சமத்துவ சமுதாயத்தை கட்டமைக்க சொந்த வீடு இல்லாத நிலமற்ற ஏழைக் குடும்பங்களையும், பெண்களையும் முன்னிலைப்படுத்தி இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் நம்முடைய அரசு கொள்கையாக வைத்திருக்கிறது! இப்படி வழங்கப்படுகின்ற “கலைஞர் கனவு இல்லம்” - “அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்” போன்ற திட்டங்களில் பயன்பெற, ஏழை எளிய மக்களுக்கு பேருதவியாக இருக்கிறது!
இப்படி, நம்முடைய திராவிட மாடல் அரசு செய்த பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் எடுத்த முன்னெடுப்புகளால், நம்முடைய அரசு பொறுப்பேற்ற மே 2021-இல் இருந்து, டிசம்பர் 2024 வரைக்கும், 10 இலட்சத்து 26 ஆயிரத்து 734 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கினோம்! ஆனால், இது போதாது; இன்னும் நிறைய பேருக்கு, வீட்டுமனைப் பட்டா கிடைக்க வேண்டும் என்று பட்டா வாங்குவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காக, நம்முடைய வருவாய்த் துறை அமைச்சர் தலைமையில் ஒரு உயர்நிலைக் குழு அமைத்து, ஐந்து மாதத்திற்குள் ஐந்து இலட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று ஒரு இலக்கு நிர்ணயித்தோம்! இதனால், ஐந்தே மாதத்தில் எத்தனை பேருக்கு பட்டா கிடைத்திருக்கிறது தெரியுமா? 7 இலட்சத்து 27 ஆயிரத்து 606 பேருக்கு பட்டா கிடைத்திருக்கிறது!
இதுவும் போதாது என்று சென்னை மற்றும் சுற்றுப்புறங்களிலும், பிற நகர்ப்புற பகுதிகளிலும் ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் வாழும் மக்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டோம். அதில், 79 ஆயிரத்து 448 தகுதியான பயனாளிகள் கண்டறியப்பட்டு, 63 ஆயிரத்து 419 பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல் அளித்து, 20 ஆயிரத்து 221 பேருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம். மீதமுள்ள பட்டாக்களை ஒரு மாதத்தில் வழங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்!
இப்படி, மே 2021-லிருந்து, தற்போது வரைக்கும் வழங்கப்பட்டிருக்கும் மொத்த பட்டாக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 17 இலட்சத்து 74 ஆயிரத்து 561 பேருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம்! அதாவது பல இலட்சம் குடும்பங்களின் கனவை நிறைவேற்றியிருக்கிறோம்! இதில், இந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும், 41 ஆயிரத்து 858 பேருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம். இந்த மகிழ்ச்சியோடுதான், இதன் தொடர்ச்சியாக இன்றைக்கு இந்த மாபெரும் விழாவில், ஆயிரத்து 672 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்களை 20 ஆயிரத்து 21 பயனாளிகளுக்கு நான் வழங்கியிருக்கிறேன்!
தென்குமரியிலிருந்து சென்னை வரைக்கும் சமச்சீரான வளர்ச்சி இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்த்துப் பார்த்து திட்டங்களை நாம் செயல்படுத்துகிறோம்! தொழில் நிறுவனங்களை கொண்டு வருகிறோம்! வேலைவாய்ப்புகளை உறுதி செய்கிறோம்! இதனால்தான், 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியோடு நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் இன்றைக்கு தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது!
14 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தலைவர் கலைஞர் ஆட்சிக்குப் பிறகு, இப்போதுதான், இந்த இரட்டை இலக்கை நாம் அடைந்திருக்கிறோம். இது சாத்தியமாகியிருக்கிறது! நாட்டிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு வளர்ச்சி இல்லை! ஏன், நாட்டின் வளர்ச்சியையும் compare செய்து பார்த்தால், நாம் தான் மிஞ்சியிருக்கிறோம்! இதுதான் தி.மு.க. ஆட்சி! இதுதான் திராவிட மாடல் ஆட்சி! இதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி!
2011-லிருந்து 2021 வரைக்கும் பத்தாண்டுகாலம் பின்னோக்கிச் சென்ற தமிழ்நாட்டை, இந்த நான்கு ஆண்டுகளில், மீட்டெடுத்து, வளர்ச்சி பாதையின் உச்சத்திற்கு கொண்டு நாம் சேர்த்திருக்கிறோம்! இதை பொறுத்துக்கொள்ள முடியாத மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.பழனிசாமி அவர்கள், அவர்களின் நண்பரான ஒன்றிய அரசு கொடுத்த புள்ளிவிவரத்தையே சரியில்லை என்று பேசுகிறார்! அவருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம்… வளர்ச்சியின் அளவீடு என்பது, பொருளாதார அளவுகோல்தான்! இந்த அடிப்படை கூட தெரியாமல், அறிவுஜீவி போல இன்றைக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு என்ன வயிற்றெரிச்சல் என்றால், இந்திய அளவில் பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை - மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர்கள் சாதிக்க முடியாததை - இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சாதித்துக் கொண்டிருக்கிறானே! இதுதான் அவர்கள் வயிற்றெரிச்சலுக்குக் காரணம்!
பழனிசாமி அவர்களே… நீங்கள் கூட்டணி வைத்திருக்கும் ஒன்றிய அரசால்கூட மறைக்க முடியாத - மறுக்க முடியாத அளவிற்கு சாதனைகள் செய்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் நாம் கொண்டு செல்கிறோம். இதுமட்டுமல்ல, திராவிட மாடல் 2.0-வில் இன்னும் வேகமாக, இன்னும் அதிகமான வளர்ச்சியை ஏற்படுத்துவோம்! இந்திய நாடே தமிழ்நாட்டை திரும்பி பார்த்து, “இதுதான் வளர்ச்சி! இதுதான் வழி!” என்று சொல்லும் அளவிற்கு நிச்சயமாக செயல்படுவோம்! அதை நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்து பார்க்கத்தான் போகிறீர்கள்!
என்னைப் பொறுத்தவரைக்கும், மக்களுக்காக உழைப்பவன்! இந்த ஸ்டாலினை மக்கள் நம்பி ஒப்படைத்திருக்கிறார்கள்! தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடு எங்கள் பயணம் தொடரும்… தொடரும்… தொடரும்… என்று சொல்லி விடைபெறுகிறேன்.