கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவுநாளையொட்டி இன்று (7.8.2025) சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்” மற்றும் “கலைஞர் நிதிநல்கை” திட்டத்தைத் தொடங்கி வைத்து, அதன் இலச்சினையை வெளியிட்டு, முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் 8 புதிய நூல்களை வெளியிட்டார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளான இன்றையதினம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது திருவுருவச் சிலைகளுக்கு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தைத் தொடங்கி வைத்து, அதன் இலச்சினையை வெளியிட, மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
மேலும், கலைஞர் மாணவர் பத்திரிக்கையாளர் திட்டத்தின் இணைய தளமும் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இளம் தலைமுறையினர் சிறந்த பத்திரிகையாளராக பயிற்சி பெறவும், திராவிட இயக்கத்திற்கும், சமூகத்திற்கும் தொண்டாற்றிட வழிகாட்டியாகவும் விளங்கும்.
அதைத்தொடர்ந்து, திராவிட இயக்க இளம் ஆய்வாளர்களைக் கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுத்து ஊக்குவிக்கும் விதமாக, முதலமைச்சர், “கலைஞர் நிதிநல்கை” திட்டத்தை தொடங்கி வைத்து, அதன் இலச்சினையை வெளியிட, திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு பெற்றுக்கொண்டார்.
இத்திட்டத்தின் மூலம் இளம் ஆய்வாளர்கள் 15 பேருக்கு ஆண்டுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும். பின்னர், முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட “தியாகமறவர்” சி.சிட்டிபாபு அவர்கள் தொகுத்த “தி.மு.க வரலாறு”, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய “தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!”, “இளைய திராவிடம் எழுகிறது!” - இளம் பேச்சாளர்களுக்கான பயிற்சி முகாம் கட்டுரைகள், முனைவர் இரா. சபாபதி மோகன் அவர்கள் எழுதிய “மாநில சுயாட்சி முழக்கம்”;
கோவி. லெனின் அவர்கள் எழுதிய “திராவிட இயக்க வரலாறு கேள்வி-பதில்”, தமிழன் பிரசன்னா அவர்கள் எழுதிய “இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம் ஏன்?”, சூர்யா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய “இந்தியாவுக்கு வழிகாட்டும் திராவிடமாடல்!”, சு.விஜயபாஸ்கர் அவர்கள் எழுதிய “இந்தியாவில் சமூக நீதியும் இட ஒதுக்கீடும்” ஆகிய எட்டு புதிய நூல்களை முதலமைச்சர் அவர்கள் வெளியிட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், நீர்வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சருமான திரு.துரைமுருகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.