சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், 2025-26 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு, சிறப்பு பிரிவு ஒதுக்கீடு ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”மருத்துவக் கலந்தாய்வில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5சதவீத சிறப்பு உள் ஒதுக்கீடு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு நடத்தி 7.5% சிறப்பு உள் ஒதுக்கீடு பிரிவு, ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு 494 எம்பிபிஎஸ் இடங்களுக்கும், 119 பல் மருத்துவ இடங்களுக்கும் ஆக மொத்தம் 613 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அனைவருக்கும் தற்போது ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த 613 மாணவர்களின் குடும்பத்தினரும் ஏறத்தாழ 4000க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்து ஆணைகளை பெற்றுச் சென்றிருக்கிறார்கள். கலந்தாய்வில் கலந்து கொள்ள வந்த அனைவருக்கும் துறையின் சார்பில் உணவு போன்ற பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இந்த கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளும் தரப்பட்டிருக்கிறது. விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது. முன்னாள் இராணுவப் பிரிவைச் சார்ந்த 11 பேருக்கும் ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது. ஆக மொத்தம் 699 மாணவ, மாணவிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 7.5% இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக கொண்டு வந்து கடந்த 4.5 ஆண்டுகளாக சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதோடுமட்டுமல்லாமல் இந்த மாணவர்களுக்கு கல்விக்கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக்கட்டணம் உட்பட அனைத்துக் கட்டணங்களும் தமிழ்நாடு அரசே பொறுப்பேற்று முழுவதும் இலவசமாக இவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதோடுமட்டுமல்லாமல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம்,சட்டம் போன்ற தொழில்முறை படிப்புகளுக்கு 7.5% இடஒதுக்கீட்டை தொடர்ந்து செயல்படுத்தி இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
நீட் தேர்விற்கு விலக்கு தரவேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீண்ட காலமாக சட்ட ரீதியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். சட்ட பூர்வமான போராட்டம் மட்டுமல்ல தொடர்ந்து அனைத்து வகையான போராட்டங்களை நடத்தி நீட் தேர்விலிருந்து விலக்கு குறித்த நடவடிக்கைகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். தேர்வு எழுதும் அனைவரும் மிகவும் சிரமப்பட்டு தான் தேர்வு எழுதி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்களுக்கான அந்த பயிற்றுவித்தல் மையங்களையும் அரசே இலவசமாக நடத்தி வருகிறது. தனியார் மையங்களில் சென்று படித்தால் இலட்சகணக்கில் செலவாகும் என்பதையும் தாண்டி இலவச பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாவும் பயிற்சி பெறுகிறார்கள். நீட் தேர்விற்கு விலக்கு என்பது தான் நமது முதலமைச்சர் அவர்களின் முதல் குறிக்கோள் ஆகும்.
நீட் தேர்வை கொண்டு வந்தது ஒன்றிய அரசு, அதனால் ஒன்றிய அரசு பிரதிநிதிகள் தமிழ்நாடு வரும் போது அவர்களிடம் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் கேட்க வேண்டும், நீட் தேர்விற்கு எப்போது விலக்கு பெற்றுத்தரப்படும் என்று. நீட் தேர்வு இங்கு வருவதற்கு காரணமாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பார்த்து கேட்க வேண்டும். ஆனாலும் தமிழ்நாடு அரசு நீட் தேர்வு விலக்கிற்கு சட்டப் பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
நீட் தேர்வு விலக்கு நீதிபதி இராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றியது, அதையும் கவர்னர் அவர்கள் ஒப்புதல் தராமல் இருந்தது போன்ற அதன்பிறகு பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஆளுநர் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பியது, குடியரசுத் தலைவர் அவர்கள் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி, உள்துறை அமைச்சகம் வாயிலாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஆயுஷ் நிர்வாகம், தொடர்ச்சியாக பல்வேறு விளக்கங்கள் கேட்டு 7 முறை தெளிவுரைகள் கேட்டு, சட்ட வல்லுநர்கள் மூலம் ஒவ்வொரு முறையும் அதற்கான விளக்கங்கள் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இத்தகைய நீட் விலக்கு நெடும்பயணம் தொடர்கிறது.
நீட் தேர்வு என்பது 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது மட்டும்தான் கொண்டு வரப்பட்டது. அவருக்கு முன்பு அம்மையார் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கொண்டு வரப்படவில்லை. அதற்கு முன்பு கலைஞர் முதலமைச்சராக இருந்தார் அப்போதும் கொண்டு வரப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிய அரசிடம் இணக்கமாக இருந்தபோது இந்த சட்டத்தை கொண்டு வர ஒப்புதல் வழங்கினார். மேலும் சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்த பிறகு 7.5% என்பது கொண்டு வரப்பட்டது. இந்த இடஒதுக்கீடு அனைத்து கட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன் கொண்டு வரப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் தராமல் இருந்து, பிறகு இன்றைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தி பெரிய மக்கள் போராட்டம் நடத்தப்பட்டது. பிறகு தான் 7.5% இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது" என தெரிவித்துள்ளார்.