மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்தநாளையொட்டி, அரியலூரில் தனிச்சிறப்புமிக்க அருங்காட்சியகமும், சோழகங்கம் நீர்வள ஆதார மேம்பாட்டுத் திட்டமும் தந்துள்ளது திராவிட மாடல் அரசு என அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய நாள் (ஜூலை 22) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்தநாளையொட்டி, “மாமன்னன் இராஜேந்திர சோழன் உருவாக்கிய ஏரியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்” என அறிவித்தார்.
குறிப்பாக, “சோழகங்கம் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் மூலம் ரூபாய் 7.25 கோடி மதிப்பீட்டில் தகவல் தொடர்பு மையம், நடைபாதை சிறுவர் விளையாட்டு மையம், இருக்கையுடன் கூடிய பூங்கா, சுற்றுச்சுவர், வழிகாட்டிப் பலகை, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு அறை, மின்வசதிகள், கழிப்பிட வசதி, பசுமைப் பரப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும்” என்றும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இது குறித்து, அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “'வடவேங்கடம் முதல் தென்குமரி வரை' எனவிருந்த தமிழர் எல்லையை, கங்கையும் கடாரமும் கொண்டு விரித்திட்ட செயங்கொண்டானை தலைவணங்கிடும் நன்னாள் இது.
“நித்தில நெடுங்கடல், உத்திரலாடமும், வெறிமலர் தீர்த்தத்து, எறிபுனல் கங்கையும், அலைகடல் நடுவில், கலம்பலச் செலுத்தி கங்கையும் கடாரமும் கொண்டு" பெருவேந்தனாக விளங்கிய மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் வெகு சிறப்பாக இன்று கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றது.
தனிச்சிறப்புமிக்க அருங்காட்சியகமும், சோழகங்கம் நீர்வள ஆதார மேம்பாட்டுத் திட்டமும் தந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு - வையம் போற்றிடும் அந்த மாமன்னனுக்கு இந்நாளில் மற்றுமொரு புகழ்மாலை சூட்டியுள்ளது.
தமிழ் வானில் பெருவேந்தன் இராஜேந்திர சோழனின் புகழ் என்றும் ஒளிரும்!” என பதிவிட்டுள்ளார்.