சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்றத் தலைவர் அப்பாவு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள் முன்னிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா பதவியேற்றுக் கொண்டார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் 1964ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் நாள் பிறந்த மணிந்திர மோகன், 2009ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவர்.
அதன் பிறகு, பதவி உயர்வு பெற்று, 2021 - 2023 வரை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவும், 2024 பிப்ரவரி முதல் 2025 ஜூலை வரை, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களால், ஜூலை 14ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 21) சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
இந்நிலையில், புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதியரசர் மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில் பங்கேற்றோம். தலைமை நீதிபதி அவர்களின் பணி சிறக்க வாழ்த்தினோம்” என பதிவிட்டுள்ளார்.