தமிழ்நாடு

“180 அரசு கல்லூரிகளில் நிரந்தர பணியில் 4,711 பேராசிரியர்கள்!” : அமைச்சர் கோவி. செழியன் தகவல்!

“கல்லூரி பேராசிரியர்கள் நியமனம் மற்றும் முதல்வர்கள் பதவி உயர்வில் அரசு முறையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது” என அமைச்சர் கோவி. செழியன் விளக்கம்!

“180 அரசு கல்லூரிகளில் நிரந்தர பணியில் 4,711 பேராசிரியர்கள்!” : அமைச்சர் கோவி. செழியன் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு கல்லூரி பேராசிரியர்கள் நியமனம் மற்றும் முதல்வர்கள் பதவி உயர்வில் அரசு முறையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பதை சுட்டிக்காட்டி அமைச்சர் கோவி. செழியன் விளக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு,

அரசு கல்லூரிகளில் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் குறித்து சமீபத்தில் நாளேடுகளில் வரப்பெற்றுள்ள செய்திகள், இது குறித்து முழுமையான சரியான விவரம் பின்வருமாறு:

தமிழ்நாட்டில் மொத்தம் 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்வியாண்டில் மட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி கல்லூரிகளே இல்லாத பகுதிகளில் புதியதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அனுமதிக்கப்பட்ட கல்லூரி பேராசிரியர்கள் பணியிடங்கள் குறித்தும் நிரப்பபட்ட முதல்வர்கள் குறித்தும் முற்றிலும் தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. உதாரணமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,500 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர் என செய்தி வரப்பெற்றுள்ளது. ஆனால், உண்மையில் 4,711 பேராசிரியர்கள் நிரந்தரமாக பணியாற்றி வருகின்றனர்.

9,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது என தெரிவித்துள்ளதும் தவறானதாகும். காலிப்பணியிடங்களில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் ஏற்பட்டதன் பின்னணி பின்வருமாறு:

2015-ஆம் ஆண்டிற்கு பிறகு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்படாததால் இந்த காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை சரிசெய்ய இவ்வரசு பொறுப்பேற்றவுடன் 4,000 ஆசிரியர் பணியிடங்களை அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட ஆணை வெளியிடப்பட்டது.

பல்வேறு நிலையில் இதன்மீது 54 வழக்குகள் தொடரப்பட்டதால் நாளதுவரை மேற்படி பணியிடங்கள் நிரப்பிட காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. வழக்குகளை விரைவில் முடித்து மேற்படி காலிப்பணியிடங்களை நிரப்பிட உரிய சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல்வேறு வழக்குகளால் நிரந்தர உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்ய காலதாமதம் ஆகும் நிலையிலும், மாணவர்களின் கல்வி நலன் கருதி கௌரவ விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களில் நிரப்பப்பட்டு, கல்வி பணியாற்றி வருகின்றனர்.

மேலும், தற்போது சுமார் 800 பணியிடங்களில் கௌரவ விரிவுரையாளர்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களுக்கு உயர்கல்விச் சேவை எந்த வகையிலும் தமிழ்நாட்டில் பாதிக்கப்படவில்லை.

“180 அரசு கல்லூரிகளில் நிரந்தர பணியில் 4,711 பேராசிரியர்கள்!” : அமைச்சர் கோவி. செழியன் தகவல்!

கல்லூரி முதல்வர்கள் நிலை குறித்து:

உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் 58 நிலை-I அரசு கல்லூரிகளில் 46 நிரந்தர முதல்வர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் காலியாக உள்ள 12 முதல்வர் பணியிடங்களில், ஏற்கனவே ஒப்பளிக்கப்பட்ட பட்டியல் (approved Panel) மற்றும் அடுத்து தெரிவு செய்யப்பட உள்ள பட்டியலிலிருந்து முதல்வர்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1998-ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்களின் பணிமூப்புப் பட்டியல் 2023-இல் வெளியிடப்பட்டது. அப்பணிமூப்புப் பட்டியலை

ஏற்றுக்கொள்ளாமல் ஆசிரியர்கள் வழக்கு (WP எண் 20170/2023) தொடுத்து தடையாணை பெற்றுள்ளனர். இதன் காரணமாக கல்லூரி முதல்வர்கள் பதவி உயர்வு வழங்குவதில் அரசுக்கு தாமதமாகி உள்ளது.

இவ்வழக்கில் எதிர்உறுதி ஆவணம் உடனடியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான இறுதி ஆணை இதுவரை நீதிமன்றத்தால் வெளியிடவில்லை. வழக்கினை விரைந்து முடித்திட சட்ட ரீதியான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வழக்கு முடிவுக்கு வந்தவுடன் காலியாக உள்ள கல்லூரிகளில் முதல்வர்கள் பணியமர்த்தப்படுவார்கள். எனினும் கல்லூரியின் நிர்வாக நலன் மற்றும் மாணவர்கள் நலன் கருதி, முதல்வர் பணியிடம் காலியாக உள்ள கல்லூரிகளில் கல்லூரியின் மூத்த பேராசிரியர்கள் முதல்வர்களாக முழு கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் பரவலாக உயர்கல்வி பயிலும் வாய்ப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், புதிய முயற்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல் ஆகியவற்றில் தீவிரமான கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 4 ஆண்டுகளில் 41 இலட்சம் மாணாக்கர்கள் “நான் முதல்வன்” திட்டத்தின் வாயிலாக பயன்பெற்றுள்ளனர். மேலும், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயிலப் “புதுமைப் பெண்” திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயிலப் “தமிழ்ப் புதல்வன்” திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ. 1,000/-உதவித்தொகை வழங்குதல்;

முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குச் சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்விச் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

ஒன்றிய அரசின் உயர்கல்வியில் நிதி ஓரவஞ்சனைக்கு பின்னரும் பலவித தடைகளையும் தாண்டி தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories