வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னை, சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து வேலூர் புறப்பட்டுச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு காட்பாடி இரயில் நிலையத்தில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், வேலூர், அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் 197 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் வேலூர் மாவட்டத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டடங்கள் மற்றும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வரும் நபர்களுக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ், நிலங்களை வரன்முறை செய்து 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
பின்னர், வேலூர் மாவட்டம், பூதூரில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், 174 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 68 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 273 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,00,168 பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
முதலாவது அறிவிப்பு
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கக்கூடிய நெக்னாமலை பகுதியில் வாழும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவும் – பொதுமக்கள் மருத்துவ வசதிகளை பெறவும் – வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யவும் - 30 கோடி ரூபாய் செலவில், ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள சாலை அமைக்கப்படும்!
இரண்டாவது அறிவிப்பு
குமாரமங்கலம் பகுதி மக்களுக்கு சீரான மின் விநியோகத்தை உறுதிசெய்கின்ற வகையில், அந்தப் பகுதியில் ஆறு கோடி ரூபாய் செலவில் – புதிய துணை மின்நிலையம் அமைக்கப்படும்!
மூன்றாவது அறிவிப்பு
நல்லகுண்டா பகுதியில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள தோல் அல்லாத காலணி உற்பத்தி பூங்காவை ஒட்டி, 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில், 250 ஏக்கர் பரப்பளவில், 200 கோடி ரூபாய் செலவில் – புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்!
நான்காவது அறிவிப்பு
திருப்பத்தூர் நகரத்தின் மையப்பகுதியில், பழைய பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில், 18 கோடி ரூபாய் செலவில், அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கப்படும்!
ஐந்தாவது அறிவிப்பு
ஆம்பூர் நகர மக்கள் பயன்பெறும் வகையில், ஒரு கோடி ரூபாய் செலவில், புதிய நூலகக் கட்டடம் கட்டப்படும்!