துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று (23.6.2025) சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி, சி.ஐ.டி குடியிருப்பு முதல் தெருவில் 3.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 113 தெருக்களில் வாழும் 50,000 பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 6.25 எம்.எல்.டி செயல்திறன் கொண்ட H2S வாயு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய சாலையோர கழிவு நீர் உந்து நிலையத்தை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-116க்குட்பட்ட டாக்டர் பெசன்ட் சாலையில் 9.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 படுக்கை வசதியுடன் கட்டப்படவுள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைக் கட்டடம் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
மேலும், வார்டு-114, பங்காரு தெரு சென்னை நடுநிலைப்பள்ளியில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியின் கீழ், 2.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் 7 வகுப்பறைகள், 1 சமையலறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடத்தை துணை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இராயபுரம் மண்டலம், வார்டு-63, கொய்யாத்தோப்பு, கோமளீஸ்வரன்பேட்டை நாகப்பன் தெருவில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியின் கீழ், 1.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் 6 வகுப்பறைகளுடன் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டடத்தினையும் திறந்து வைத்தார்.
பின்னர், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-114க்குட்பட்ட லாக் நகரில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட முதல் தளத்தில் மேடையுடன் கூடிய பல்நோக்குக் கட்டடத்தினை துணை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.