தமிழ்நாடு

”இந்தியாவின் ட்ரோன் உற்பத்தி மையமாக உள்ளது தமிழ்நாடு” : The Times of India கட்டுரை!

முப்படைகள் மற்றும் பிற மின்னணு பாதுகாப்பு அமைப்புகளுக்கான ட்ரோன்களை தயாரிப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருவதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

”இந்தியாவின் ட்ரோன் உற்பத்தி மையமாக உள்ளது தமிழ்நாடு” :  The Times of India கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. ட்ரோன் தாக்குதல், பல அடுக்கு வான் பாதுகாப்பு மற்றும் மின்னணுப் போர் போன்ற இராணுவ நடவடிக்கைகளில் தொழில்நுட்ப தன்னிறைவுக்கான ஒரு மைல்கலாக ஆபரேஷன் சிந்தூர் இருந்ததாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்நாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் ட்ரோன்களுக்கான தேவையை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், 2030 ஆம் ஆண்டுக்குள் ட்ரோன் சந்தை ஆயிரத்து 100 கோடி டாலர் அளவுக்கு உயரும் என்றும், இது உலகளாவிய ட்ரோன் சந்தையில் 12.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகளுக்கான ட்ரோன்களை தயாரிப்பதிலும், ட்ரோன் ஜாமர்கள் மற்றும் அதிநவீன மின்னணு பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு முக்கிய பங்களிப்பை செலுத்தத் தொடங்கி உள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், தக்ஷா, கருடா ஏரோஸ்பேஸ், ஜூப்பா ஜியோ நேவிகேஷன், இ-பிளேன் நிறுவனம், பிக் பேங் பூம், டேட்டா பேட்டர்ன்ஸ் உள்ளிட்ட ஸ்டார்ட்அப் மற்றும் அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள் உள்ளதாகவும், இந்நிறுவனங்கள், வருங்கால போர் முறைகளுக்கு தேவையான பல வகை ஆளில்லா விமானங்கள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாகவும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின், இந்நிறுவனங்களின் உற்பத்திக்கான தேவை 5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் ட்ரோன் உற்பத்தி மையமாக தமிழ்நாடு உள்ளதாகவும், 2022-ம் ஆண்டு ட்ரோன் உற்பத்தி ஆலைகளுக்கான கொள்கையை அறிவித்த தமிழ்நாடு அரசு, இதற்கான உள்கட்டமைப்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ள இக்கட்டுரை, ட்ரோன் உற்பத்தி மட்டுமின்றி, எதிரிகளை வழிமறித்து அழிக்கும் தொழில்நுட்பங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவு அடைப்படையில், இதற்கான தீர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்களில் ஒன்று தமிழ்நாட்டில் உள்ளதுடன், எம்ஐடி, சென்னை ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களின் துடிப்பான ஆராய்ச்சிகள் பாதுகாப்புத்துறைக்கான ட்ரோன் தொழில்நுட்பத்தில் தமிழ்நாட்டுக்கு முக்கிய இடத்தை அளித்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories