புகையிலை இல்லாத இளைஞர்கள் திட்டம் 2.0ஐ சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தமிழ்நாட்டிற்கு தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய மதிப்பாய்வுக் கூட்டத்தின் போது ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் விருது வழங்கப்பட்டது.இந்த விருதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காட்டி வாழ்த்து பெற்றார்.
இது குறித்து வெளியிடபபட்டுள்ள அறிக்கையில், "தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம், தமிழ்நாட்டில் 2007-ஆம் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் தடுப்புசட்டம் அமல்படுத்தப்பட்டு பொது இடங்களில் புகைபிடிக்க தடை செய்தல், சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்களை 18 வயதிற்கு குறைந்தவர்களுக்கு மற்றும் கல்வி நிறுவனங்களை சுற்றி 100 முற்றம் சுற்றளவிற்கு விற்பனை செய்வதை செய்தல், புகையிலைப் பொருட்களை விளம்பரம் செய்வதை தடை செய்தல், சுகாதார நல எச்சரிக்கையோடு கூடிய புகைப்படம் புகையிலை பொருட்கள் மீது அச்சிடப்பட்டிருக்க வேண்டும் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், 2.10.2008 முதல் 31.1.2025 வரையில் சட்டமீறல் செய்த 3.89 லட்சம் இலட்சம் நபர்களிடமிருந்து 6.83 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 45,374 பள்ளிகள் மற்றும் 2,153 கல்லூரிகள் புகையிலை இல்லா கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துறையின் கூடுதல் முயற்சியின் காரணமாக இதுவரை
1,240 கிராமங்கள் புகையிலை இல்லா கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்தை படிப்படியாக மேம்படுத்தும் வகையில் COTPA, 2003 சட்டத்திருத்தம் கொண்டு வந்து புகைகுழல் கூடங்களை மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
தேசியப் புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு 24.09.2024 முதல் 23.11.2024 வரை 60 நாட்கள் புகையிலையின் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுக்கான புகையிலை இல்லா பிரச்சாரம் நடத்தப்பட்டது.
இவ்வாறு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தேசிய அளவில் புகையிலை தடுப்புச் சட்டத்தையும், புகையிலை இல்லாத இளைஞர்கள் திட்டம் 2.0ஐ சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தமிழ்நாட்டிற்கு தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய மதிப்பாய்வுக் கூட்டத்தின் போது ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் விருது வழங்கப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.