சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை சவுகார்பேட்டை திருப்பள்ளி தெரு பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் ஜூன் 3 ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளும் செம்மொழி நாளையும் முன்னிட்டு பாதம் தாங்கிகளை நாம் தாங்குவோம்! பக்தி பண்பாட்டில் வழிகாட்டுவோம்! என்கின்ற தலைப்பில் திருக்கோவில்களில் பாதம் தாங்கிகளாக பணி செய்யக்கூடிய நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை மாநகராட்சியின் 5-வது மண்டல குழு தலைவர் ஸ்ரீராமலூ ஏற்பாட்டில் சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளரூம் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் ஸ்ரீ பாதம் தாங்குபவர்களாக பணி செய்யக்கூடிய 250 பேருக்கு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் மேடையில் பேசியதாவது :-
எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் அரசு. முத்தமிழறிஞர் கலைஞர் இந்துக்களுக்கு விரோதமானவர் அல்ல. முத்தமிழறிஞர் கலைஞர் தவறு எங்கு நடந்தாலும் சுட்டிக் காட்டக் கூடியவர்.
ஒரு திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அப்படி இருக்கும்பட்சத்தில் வெறும் 4 ஆண்டுகள் திராவிட மாடல் ஆட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. வருகின்ற 7 ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் இந்துக்களுக்கு விரோதி என்கிறார்கள். ஆனால் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில்தான் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
திமுகவை பற்றி விமர்சிப்பவர்கள் எல்லாம், தங்கள் கட்சிகளை வளர்க்க மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால் திராவிடம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இங்கு அதிக அளவில் உள்ளார்கள். நமது முதலமைச்சரின் ஆட்சிக்காலத்தில் பிற மாநிலங்கள் அனைத்தும் பின்னே சென்று விட்டது. தமிழ்நாடு மட்டுமே எல்லா துறைகளிலும் முன்னேறி வருகிறது. அதற்கு நமது முதலமைச்சர்தான் காரணம்.
இந்திய நாட்டினை பொறுத்தவரை மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள், பல்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள், பன்மொழி பேசக் கூடியவர்கள் என பலரும் ஒருங்கிணைந்து வாழ்கின்றனர். இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்கின்ற நோக்கை கொண்டு இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பலரும் ஒருங்கிணைந்து வாழ்கின்றனர்.
நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியின் கீழ்தான் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீராக உள்ளது. ஏனெனில் நமது தளபதி முதலமைச்சராக நாற்காலியில் அமர்ந்து அவரது தலைமையில் நடைபெறுகின்ற ஆட்சியின் காரணமாகதான் தமிழ்நாடு மேலும் சிறப்பாக உள்ளது.