11வது சர்வதேச யோகா தினம் - 2025 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் யோகா பயிற்சியினை செய்து, விழா பேரூரையாற்றினார்கள். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (21.06.2025) சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், 11 வது சர்வதேச யோகா தினம் 2025 முன்னிட்டு யோகா பயிற்சியினை செய்து, விழா பேரூரையாற்றினார்கள்.
பின்னர் அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
=> 11வது சர்வதேச யோகா தினம் 2025
இன்று உலகம் முழுவதும் 11வது சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்தவகையில் சென்னையில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரியில் மருத்துவ மாணவர்களோடு யோகா பயிற்சி செய்து யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இன்றைக்கான கருப்பொருள் என்பது ஒரே பூமி ஒரே ஆரோக்கியம் “Yoga for One Earth, One Health” என்கின்ற பெயரில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. யோகா செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து அனைவரும் நன்கு அறிவார்கள். உடல்களையும், அதன் உள் உறுப்புகளையும் பலம் பெற செய்வது, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க உதவுவது, நோய் வராமல் தடுப்பது, வந்த நோயினை கட்டுப்படுத்துவது, கோபம் மற்றும் பயம் சார்ந்த உடல்நிலையை சாந்தப்படுத்துவது, உடல் தசைகளை தளர்வடைய செய்வது போன்ற பல்வேறு சிகிச்சைகளுக்கு யோகா பயிற்சி என்பது உறுதுணையாக இருந்து வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1997ஆம் ஆண்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரியை தொடங்கி வைத்தார்கள். இந்தியாவிலேயே சித்தா, யோகா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி போன்ற 5 இந்திய மருத்துவ முறைகளும் ஒரே மாநிலத்தில் இருப்பது என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். இதற்கு அடித்தளமிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இந்தியாவில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரிகள் 2 சேர்த்து 19 யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரிகள் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கின்றது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட அதிகப்படியான யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரிகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2022 ஆம் ஆண்டு ரூ.96 கோடி செலவில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் செங்கல்பட்டில் கட்டப்பட்ட சர்வதேச யோகா மற்றும் இயற்கை அறிவியல் நிறுவனத்தை தொடங்கி வைத்தார்கள் என்பது சிறப்புக்குரிய ஒன்று. முதலமைச்சர் அவர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கு பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். குறிப்பாகவும், சிறப்பாகவும் தமிழ்நாட்டில் முதலமைச்சர் அவர்களால் 44வது சர்வதேச சதுரங்கம் ஒலிம்பியாப் போட்டி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சதுரங்க விளையாட்டு வீரர்கள் அப்போட்டிகளில் பங்கேற்க வந்தார்கள். வந்த விளையாட்டு வீரர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மன அழுத்த மேலாண்மை குழு ஒன்று அமைத்து அவர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது. அதனால் யோகா இயற்கை மருத்துவ மாணவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 24 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பரிசுகளை வழங்கி யோகா துறையில் பயின்று வரும் மாணவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் வழங்கினார்கள். அதோடுமட்டுமல்லாமல் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் யோகாவிற்கான கேலோ விளையாட்டு விருதினை 2024 பிப்ரவரி திங்கள் 23 ஆம் தேதி வழங்கி சிறப்பித்தார்கள்.
=> இந்திய முறை மருத்துவர் பணியிடங்கள் பணி ஆணை மிக விரைவில் வழங்கப்படும்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இந்திய மருத்துவத்துறையில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்றைக்கு தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் யோகா பயிற்று மையங்கள், இந்திய மருத்துவ முறைகள் போன்ற பல்வேறு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த துறைக்கு 38 மாவட்டங்களில் 100 அரசு மருத்துவமனைகளில் ரூ.7 கோடி செலவில் இயற்கை மருத்துவ நலவாழ்வு மையங்களை அமைப்பதற்கு கடந்த நிதிநிலை அறிக்கையில் ஒப்புதல் தந்து அந்த கட்டமைப்பும் மிக விரைவில் அமையவிருக்கிறது.
இந்த அரசு பொறுப்பேற்றபிறகு சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி, யோகா போன்ற துறைகளில் உள்ள மருத்துவர் காலிப்பணியிடங்களை கடந்த ஆண்டு நிரப்பினார்கள். தற்போது காலியாக உள்ள சித்த மருத்துவர் பணியிடங்கள் 59, ஆயுர்வேதா மருத்துவர் பணியிடங்கள் 2, யுனானி மருத்துவர் – 1, யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் 53 ஆக 115 இந்திய மருத்துவமுறை மருத்துவர் பணியிடங்கள் வரும் 30.06.2025 அன்று முதலமைச்சர் அவர்கள் பணி ஆணையினை வழங்க இருக்கிறார்கள். இந்த பணி ஆணைகள் வழங்கப்பட்ட பிறகு இந்திய மருத்துவ துறையில் ஒரு மருத்துவர் காலிப்பணியிடம் கூட இல்லை என்கின்ற நிலை உருவாக இருக்கிறது. அதோடு 56 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கும் பணி ஆணைகள் தர இருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் இந்திய மருத்துவ முறைக்கு தேவையான மருத்துவ கட்டமைப்புகளை பயன்படுத்துவதற்குரிய நிதியினை தொடர்ந்து வழங்கி உதவிக் கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் இந்த சர்வதேச யோகா தினத்தில் மாணவர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் பங்கேற்று சிறப்பித்திருக்கிறார்கள்.
=> சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடர்பான கேள்விக்கு
ஆளுநர் அவர்கள் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் இருந்து சட்டமன்றத்தில் இந்த மசோதா திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது. தற்போது அது சட்டப்பூர்வமான தெளிவுரைகள் முடிக்கப்பட்டு திரும்பவும் எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் வைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏற்கெனவே வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒப்புதலுக்கு அனுப்பலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்குரிய கட்டமைப்புகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இதே வளாகத்தில் ரூ.2 கோடி செலவில் அலுவலகம் அனைத்தும் தயார் செய்யப்பட்டு உள்ளது. மாதவரம் பகுதியில் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பல்கலைக்கழகம் அமைப்பதற்குரிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றது. அலுவலகம் போன்ற பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றது. சம்மந்தப்பட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பிறகு, ஆளுநரின் ஒப்புதல் பெற்று சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் வந்தே தீரும் என்கின்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்து சித்த மருத்துவமனைகளிலும் பசுமையான வகையில் மேம்படுத்திட ரூ.18 கோடி செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான பணிகளை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதிதுறை ஆணையர் அவர்கள் திட்டமிட்டு முன்னுரிமை அடிப்படையில் அப்பணிகளை செய்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மிக விரைவில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள சித்த மருத்துவ மையங்கள் சீர்படுத்தப்படுகிறது.
=> செயற்கை கருத்தரித்தல் - இயற்கை மருத்துவத்தின் மூலம் செயல்படுத்தும் திட்டம் உள்ளதா? என்ற கேள்விக்கு
ஏற்கெனவே ஆங்கில மருத்துவ முறைப்படி செயற்கை கருத்தரித்தல் முறை நடைபெற்று வருகிறது. குறிப்பாக எழும்பூர் அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்கப்பட்டு மிகச் சிறப்பான வகையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் கூட கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி வைத்திருக்கிறோம். மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் நானும் கூட இந்த மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் மானக்ஷா அவர்களின் கட்டுரையினை பத்திரிக்கையில் படித்தேன். குழந்தை பேரின்மை இன்றைக்கு அதிகரித்து வரும் நிலையில் ஆங்கில மருத்துவ முறையில் செயற்கை கருத்தரித்தல் செயல்படுத்துவது போலவே இயற்கை மருத்துவ முறையின் மூலம் எப்படி செயல்படுத்தலாம் என்கின்ற கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள். சித்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே குழந்தை பேரின்மை குறித்தான கவலை கொண்டிருக்கிறார்கள். சித்த மருத்துவம் மூலம் அந்த குறைகள் போக்கப்பட்டிருக்கிறது. எனவே பரிட்சார்ந்த ரீதியில் இதே வளாகத்தில் இயற்கை மருத்துவத்தின் மூலம் செயற்கை கருத்தரித்தல் மையம் உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலை பெற்று மிக விரைவில் செய்யப்படும்.
=> எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிற்கு பதில்
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த சமயத்தில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த இன்றை முதலமைச்சர் அவர்கள் தான் போதை பொருட்கள் நடமாட்டம் தமிழ்நாட்டில் அதிகரித்திருக்கிறது, குறிப்பாக தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் அனைத்துமே தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது என்று சொன்னார்கள், உடனடியாக அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் மறுத்தார்கள்.
அடுத்தநாளே 21 சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில் எங்கெயெல்லாம் கிடைக்கின்றது, தாராளமாக கிடைக்கின்ற போதை பொருட்களை சட்டமன்றத்திலே கொண்டு சென்று இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடத்தில் காட்டினோம்.
உண்மையில் போதை பொருட்களின் நடமாட்டத்தினை குறைக்கும் நல்ல எண்ணம் கொண்ட முதலமைச்சராக இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி என்ன செய்திருக்க வேண்டும், இது எங்கு கிடைத்தது சொல்லுங்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்கிறேன் என்று சொல்லி இருக்க வேண்டும், மாறாக சபாநாயகரை கொண்டு 21 சட்டமன்ற உறுப்பினரின் பதவியை பறிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தனர்.
அப்படிப்பட்ட எடப்பாடி பழனிசாமி இது பற்றி சொல்வது என்பது வேடிக்கையான ஒன்று. இந்த அரசுப் பொறுப்பேற்ற பிறகும் கூட ஆந்திரா மாநிலத்தில் கூட 4000 ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிரிடப்படுவதை இங்கிருக்கும் காவல்துறை உயர் அலுவலர் அவர்கள் சொல்லி அதன்பிறகு ரூ.6000 கோடி மதிப்பிலான அந்த கஞ்சா பொருட்களை அழிக்கப்பட்டது. இது தென்னிந்திய காவல்துறை உயரலுவலர்கள் மாநாட்டில் சொல்லி அது அகற்றப்பட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கஞ்சா பயன்பாடு 0% என்கின்ற அளவில் ஒரு இடத்திலும் இல்லை. எங்கேயாவது இருந்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றபிறகுதான் குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தொடர்ந்து கின்னஸ் சாதனை படைத்து வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் 70 இலட்சம் மாணவர்கள் அதற்கான விழிப்புணர்வில் பங்கேற்று சிறப்பித்து வருகிறார்கள். இப்படி விழிப்புணர்வு மூலம் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து போதை பொருட்களின் நடமாட்டத்தை அழிப்பது, சமூக விரோதிகளின் சொத்துக்களை முடக்கி அவர்கள் மேல் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருவது இந்த அரசு தான். கடந்த காலங்களில் பெருகி இருந்த போதை வஸ்துக்களின் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்து மிகப் பெரிய அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்தி இன்றைக்கு 0% நிலை கஞ்சா பயன்பாடு இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி நன்கு உணர வேண்டும் என்றார்.