அண்மைக் காலமாக சைபர் குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. பலரும் அநாவசியமாக தங்கள் மொபைலுக்கு வரும் லிங்குகளை கிளிக் செய்யும்போது, அவர்களது மொபைல் ஹேக் செய்யப்பட்டு, வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போய் விடுகிறது. இதுகுறித்து போலீசார் எவ்வளவு விழிப்புணர்வு எச்சரிக்கை செய்தாலும், மக்கள் தாங்கள் ஏமாறுவதை விடுவதாக தெரியவில்லை. அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது நடந்துள்ளது.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் செந்தில் (28) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இந்த சூழலில் சம்பவத்தன்று இந்த இளைஞரின் மொபைல் எண்ணுக்கு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. மேலும் அதில் இ செல்லான் என்று ஒரு லிங்கும் வந்துள்ளது.
இதனால் பதறிப்போன அந்த இளைஞர், தனக்கு எதற்காக, எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்பதற்காக அதனை கிளிக் செய்துள்ளார். அவ்வாறு செந்தில் அந்த லிங்கை கிளிக் செய்தவுடனையே அவரது மொபைல் hang ஆகி நின்றுள்ளது. இதனால் அவர் தனது மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு மீண்டும் ஆன் செய்துள்ளார்.
மொபைலை ஆன் செய்த அடுத்த சில நிமிடங்களிலேயே அவரது எண்ணுக்கு ஒரு OTP வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.12,600 பணம், வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக மெசேஜ் வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ந்த செந்தில், பதற்றமடைந்தார். மேலும் வங்கிக்கு தொடர்பு கொண்டு விசாரித்ததாக தெரிகிறது.
இதையடுத்து தனது மொபைல் ஹேக் ஆனதை உணர்ந்த இளைஞர் செந்தில், உடனடியாக இதுகுறித்து பெரும்பாக்கம் காவல் நிலையத்திலும், சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து செந்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.