சென்னை, கிண்டி,தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக அரங்கத்தில், அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியின் 60-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, பட்டப் படிப்பை முடித்த 144 மருத்துவ மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
தொடர்ந்து விழா மேடையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது :-
இந்த விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கிய கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றி. கடந்த 10 நாட்களில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடக்கும் இளங்கலை பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றேன். மேலும் தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக முடிந்தவரை ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவர்களுக்கு பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கும் பணியை செய்து வருகிறேன்.
இந்தியாவில் எத்தனை சிறந்த மருத்துவமனைகள் இருந்தாலும் எங்கும் இல்லாத அளவுக்கு சிறந்த மருத்துவ உபகரணங்கள் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில்தான் உள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சைக்கு சிறந்து விளங்குகிறது. கடந்த ஆண்டு மட்டும் 4 ஆயிரம் புற நோயாளிகளுக்கு தீக்காய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியைப் பொறுத்தவரை 12 இடங்களுடன் கூடிய புதிய முதுகலை பட்டபடிப்புகள் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் 86 இடங்களுடன் கூடிய 7 மருத்துவ படிப்புகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.362 கோடியே 87 லட்சம் மதிப்பில் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி வந்ததில் இருந்து மருத்துவ பணியிடங்களை நிரப்புவதில் நேர்மையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த துறை வெளிப்படைத்தன்மையுடன் கலந்தாய்வுகள் நடத்தி 42,718 பேருக்கு பணி மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.பி சார்பில் காலியாக உள்ள அரசு மருத்துவ பணியிடங்களை நிரப்பு முற்படும் போது அதில் நீங்கள் இடம் பெற வேண்டும்.
பல் மருத்துவத்தில் கடைசியாக 48 இடங்களுக்கு 11,720 பேர் தேர்வு எழுதினர். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 8,700 பேர் மேலும் இதில் இருந்து 48 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விரைவில் இவர்களுக்கு பணி ஆணை கொடுக்கப்பட உள்ளது.
மக்கள் தொகைக்கு ஏற்ப அதிக மருத்துவர்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. இந்தியாவிலேயே மாநில அரசு துறைக்கு ஐ.நா. விருது வழங்கி உள்ளது இதுவே முதல் முறை .
தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசியதாவது :-
=> அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அரசு காப்பீடு மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர்...
“அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் காப்பீட்டின் மூலம் அதிகமான மருத்துவ சேவையானது வழங்கப்பட்டுள்ளது. காப்பீடு மறுக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
=> மருத்துவ செவிலியர் குறைபாடு உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்
“மருத்துவர் செவிலியர் குறைபாடு இல்லை. கிராமப்புற செவிலியர்களை மட்டும்தான் இன்னும் வேலைக்கு எடுக்க வேண்டி உள்ளது. அந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை மூலம் நிதி ஆதாரம் பெற்று தமிழகத்தின் 6 இடங்களில் மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. கோவை, மதுரை, கீழ்ப்பாக்கம், ஆவடி, திருப்பூர், அம்மாபேட்டை இதில் பெரும்பாலான கட்டமைப்புகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
இந்த இடங்களில் காவலர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் என 250 காலி பணியிடங்கள் உள்ளன. அதற்கான கோப்புகள் நிதி துறையைச் சென்றுள்ளது. விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் எந்த மருத்துவருக்கும் பணி நீட்டிப்பு வழங்குவதில்லை. கடந்த ஆட்சியில் பல மருத்துவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கினார்கள் ஆனால் இந்த ஆட்சியில் அந்த நடைமுறை இல்லை.” என்றார்.