நுங்கம்பாக்கம் பகுதியில் கொக்கைன் வைத்திருந்த ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த நபர் உட்பட 2 நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடம் இருந்து 11 கிராம் கொக்கைன், பணம் ரூ.40,000, 2 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு :
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .ஆ.அருண், இ.கா.ப. அவர்கள் உத்தரவின்பேரில், 12 காவல் மாவட்டங்களில் காவல் துணை ஆணையாளர்கள் ANI தனிப்படையினர் மற்றும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ANIU) தனிப்படையினரும் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக கண்காணித்து, குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து, சென்னை பெருநகரில் போதைப்பொருள் பயன்பாட்டை முழுவதுமாக அகற்றிட தனிப்படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையாளர் தலைமையிலான ANI தனிப்படையினர் மற்றும் F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, நேற்றுமுன்தினம் (17.06.2025) இரவு, நுங்கம்பாக்கம், வானிலை ஆராய்ச்சி மையம் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்தபோது, அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு நபரை விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். மேலும் விசாரணையில் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, விற்பனைக்காக கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், கொக்கைன் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த பிரதீப்குமார் (எ) பிரடோ (38), சங்ககிரி, சேலம் மாவட்டம் என்பவரை கைது செய்தனர். மேலும் மேற்படி அவர் கொடுத்த தகவலின்பேரில், கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான ஜான் (38), Republic of Ghana, West Africa என்பவரை தனிப்படை போலீசார் ஓசூர் சென்று 18.06.2025 அன்று கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 11 கிராம் எடை கொண்ட கொக்கைன், பணம் ரூ.40,000/- மற்றும் 2 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய தலைமறைவாங்கியுள்ள மீதமுள்ளவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும், விசாரணைக்குப் பின்னர் நேற்று (18.06.2025) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.