தமிழ்நாடு

ஒன்றிய அரசின் வஞ்சக ஆட்சிக்கு சாட்சியங்கள் இதோ : பட்டியலிட்டு வெளுத்து வாங்கிய முரசொலி!

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான தனது திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு ஆயிரத்து 500 ரூபாயை ஒவ்வொரு மாதமும் வழங்கி வருகிறது.

ஒன்றிய அரசின் வஞ்சக ஆட்சிக்கு சாட்சியங்கள் இதோ : பட்டியலிட்டு வெளுத்து வாங்கிய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (17-06-2025)

தமிழ்நாட்டு நிதியில் ஒன்றிய அரசின் திட்டங்கள் !

ஒன்றிய அரசின் மீது முதலமைச்சர் வைத்த விமர்சனம் சரியானதுதான் என்பதை ‘இந்து’ ஆங்கில நாளேடு உறுதி செய்துள்ளது.

ஒன்றிய அரசு தரும் நிதியை தமிழ்நாடு அரசு தனது திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்து கொண்டிருக்கிறது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லி இருந்தார்கள். இது எந்தளவுக்கு பொய்யான குற்றச்சாட்டு என்பதை விளக்கமாகச் சொல்லி இருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.

ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டுக்கான எந்தப் புதிய சிறப்புத் திட்டத்தையும் தரவில்லை - அவர்கள் மிகச் சில திட்டங்களுக்கு ஒதுக்கும் பணமும் முழுமையாக இல்லை - அதில் கூடுதல் பணம் போட்டு மாநில அரசுதான் அந்த திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு இருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் திட்டமாக இருந்தாலும் – வீடுகட்டும் திட்டமாக இருந்தாலும் – ஒன்றிய அரசு ஒதுக்கும் பணத்தை வைத்து செயல்படுத்த முடியாது என்பதால் மாநில அரசுதான் கூடுதல் பணம் கொடுக்கிறது. சில திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் பணத்தை விட மாநில அரசு ஒதுக்கீடு செய்யும் தொகை அதிகம். படையப்பா படத்தில் ரஜினி – செந்தில் காமெடி பார்த்திருப்பீங்க... ‘மாப்பிள்ளை அவர்தான் ஆனா சட்டை என்னுது’ – என்பார் ரஜினி. அது போலத்தான் ஒன்றிய அரசு பெயரிலான திட்டத்துக்கும் நிதி கொடுத்து வருகிறோம். ஆனால் அப்படியே பிளேட்டை திருப்பிப் போடுகிறார் உள்துறை அமைச்சர்” என்று உண்மையை வெளிச்சம் போட்டுச் சொல்லி இருந்தார் முதலமைச்சர் அவர்கள்.

பிரதமர் வீடு வழங்கும் திட்டம், பிரதமர் மீன்வளத் திட்டம், உயிர்நீர் எனப் பிரதமரின் பெயரையும், ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம், அவர்களைக் காட்டிலும் அதிகமாக தமிழ்நாடு அரசுதான் நிதி ஒதுக்கீடு செய்கிறது என்பதை ‘இந்து’ ஆங்கில நாளேடு அம்பலப்படுத்தி இருக்கிறது. ஒன்றிய அரசின் 6 திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசின் பங்கு கூடுதலாக உள்ளது என்று அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் திட்டத்தில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் சமமாக செலவுகளை பகிர்ந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதனை செயல்படுத்தும் போது, மாநில அரசின் பங்களிப்பு 55 சதவீதமாக உள்ளது.

முதியோர் மற்றும் கைம்பெண் ஓய்வூதியத் திட்டங்களுக்கு 79 வயது வரை உள்ளவர்களுக்கு ஒன்றிய அரசின் பங்கு 300 ரூபாயாகவும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 500 ரூபாயாகவும் உள்ளது. ஆனால், இத்திட்டப் பயனாளிகளுக்கு ஆயிரத்து 200 ரூபாயை மாநில அரசு வழங்கி வருகிறது.

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான தனது திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு ஆயிரத்து 500 ரூபாயை ஒவ்வொரு மாதமும் வழங்கி வருகிறது.

பிரதமர் நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்தில் ஒரு வீட்டுக்கு மாநில அரசு செலவிடும் மொத்த தொகை 2 லட்சத்து 83 ஆயிரத்து 900 ரூபாய் ஆக உள்ளது. இதில், ஒன்றிய அரசின் பங்கு 60 சதவீதம் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒன்றிய அரசு 50 சதவீதத்திற்கும் குறைவாகவே நிதி அளிக்கிறது.

100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் ஸ்வச் பாரத் மிஷன் எனும் கழிப்பறை கட்டுவதற்கான திட்டங்களுக்கு கடந்த நிதியாண்டில் ஒன்றிய அரசின் பங்களிப்பு 39 சதவீதமாகவும், மாநில அரசின் பங்களிப்பு 61 சதவீதமாகவும் இருக்கிறது.

பிரதமர் பெயரில் உள்ள மீனவர்கள் மற்றும் மீன்பிடித் தொழிலாளர்களுக்கான திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கு 60 சதவீதம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டத்தில், ஒன்றிய அரசின் பங்கு 27 சதவீதமாகவும் மாநில அரசின் பங்கு 73 சதவீதமாகவும் உள்ளது.

ஒன்றிய அரசின் வஞ்சக ஆட்சிக்கு சாட்சியங்கள் இதோ : பட்டியலிட்டு வெளுத்து வாங்கிய முரசொலி!

இதுதான் ‘இந்து’ நாளேடே உறுதிப்படுத்திய உண்மைகள் ஆகும். ஜல்ஜீவன் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசின் நிதி 55 விழுக்காடு தரப்படுகிறது. பிரதமர் நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசின் நிதி 50 விழுக்காட்டுக்கு மேல் தரப்படுகிறது. 100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் ஸ்வச் பாரத் மிஷன் எனும் கழிப்பறை கட்டும் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசின் நிதி 61 விழுக்காடு தரப்படுகிறது.

பிரதமர் பெயரில் உள்ள மீனவர்கள் மற்றும் மீன்பிடித் தொழிலாளர்களுக்கான திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு 73 விழுக்காடு நிதி தருகிறது. திட்டம் அவர்களுடையது, நிதி தமிழ்நாடு அரசினுடையது. இதை வைத்துத்தான், ‘மாப்பிள்ளை அவருதான், சட்டை என்னுடையது’ என்கிறார் முதலமைச்சர் என முரசொலி குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியைத் தருகிறார்களா என்றால் அதுவும் இல்லை. ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ், ஒன்றிய அரசிடமிருந்து வரப்பெற வேண்டிய 2 ஆயிரத்து 152 கோடி ரூபாய் நிலுவையிலேயே உள்ளது. இது மாநில அரசின் நிதிச்சுமையாக மாறிவிட்டது. தேசிய உயர்கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங் களின் மீதும், புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு திணிப்பதால், ஏற்பட்ட விளைவு இது.

ஃபெஞ்சல் புயலானது ஏற்படுத்தியுள்ள பேரழிவுகளைக் குறிப்பிட்டு, தற்காலிக மற்றும் நிரந்தர நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு 6 ஆயிரத்து 675 கோடி ரூபாய் தேவைப்படும் என கேட்கப்பட்டது. நிதி வரவில்லை.

மிக்ஜாம் புயல் தாக்கியது. அதற்குக் கேட்ட நிவாரணமும் வரவில்லை. தமிழ்நாட்டில் ஏற்பட்ட மூன்று இயற்கைப் பேரிடருக்கு மாநில அரசு கோரிய 37 ஆயிரத்து 906 கோடி ரூபாயில் ஒரு சதவீதம் கூட இதுவரை தரப்படவில்லை.

நமக்கு வரவேண்டியதும் வரவில்லை. அவர்கள் தர வேண்டியதும் தரவில்லை. இதுதான் ஒன்றிய அரசின் வஞ்சக ஆட்சிக்கு சாட்சியங்கள் ஆகும்.

banner

Related Stories

Related Stories