தமிழ்நாடு அரசின் "புதிய விரிவான மினிபேருந்து திட்டம்-2024" மூலம் புதிய மினிபேருந்து இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் 3 வழித்தடங்களில் 9 மினி பேருந்துகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்கள், குக்கிரமங்கள் மற்றும் "100" அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளிலுள்ள மக்களுக்கு தரமான, போதிய எண்ணிக்கையிலான, குறைந்த செலவில் பயன்படுத்தக்கூடிய வகையில் மற்றும் முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட சாலைப் போக்குவரத்து வசதியை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி பல்வேறு பகுதிகளுக்கு அருகிலுள்ள பேருந்து நிலையத்தை அல்லது அருகிலுள்ள நகரை, சென்றடையும் வகையிலும், தமிழ்நாடு அரசின் "புதிய விரிவான மினிபேருந்து திட்டம்-2024" மூலம் புதிய மினிபேருந்து இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் புதிய வழித்தடங்களுக்கு அனுமதிசீட்டு வழங்கிடவும், ஏற்கனவே மினிபேருந்து சேவை வழங்கிக்கொண்டிருக்கும் மினிபேருந்துகள் இத்திட்டத்தின் கீழ் இடம்பெயர்வு (Migration) செய்து இயக்குவதற்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் "21" புதிய வழித்தடங்களில் "38" மினிபேருந்துகள் இயங்குவதற்கு செயல்முறை ஆணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக "3" வழித்தடங்களில் "9" மினிபேருந்துகள் இயக்குவதற்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு தமிழ்நாடு துணை முதல்வர் அவர்களால் இன்று (16.06.2025) கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது"என்று கூறப்பட்டுள்ளது.