சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஞானசேகருக்கு தொடர்புள்ளவர், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பி.ஆர்.ஓ நடராஜனின் நெருங்கிய நண்பர் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்ட தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதால் 50 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு நடராஜனின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
மேலும், அண்ணாமலை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அண்ணாமலைக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடர நேரிடும் எனவும் நடராஜன் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.