தமிழ்நாடு

”கீழடி வரலாறு குறித்து வன்மத்துடன் பேசும் ஒன்றிய அமைச்சர் ” : இரா.முத்தரசன் கண்டனம்!

கீழடி வரலாறு உறுதி செய்து தீர்ப்பெழுதும் போது, வரலாற்றை திரித்து கூறிய கருத்துக்கள் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்படும்.

”கீழடி வரலாறு குறித்து வன்மத்துடன் பேசும் ஒன்றிய அமைச்சர் ” : இரா.முத்தரசன் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழர் தொன்மை வரலாற்றையும், மதச்சார்பற்ற மரபையும் ஏற்க மறுத்து வன்மத்துடன் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் பேசியதற்கு CPI மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தமிழ்நாடு முழுவதும் நடந்து வரும் அகழாய்வும், ஆராய்ச்சியும் தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சார மரபுகளின் தொன்மை சிறப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக 2015 முதல் இதுவரை ஐந்து கட்டங்களாக அகழாய்வு செய்யப்பட்ட கீழடி ஆய்வில் கிடைத்துள்ள ஆறாயிரத்துக்கும் அதிகமான தொல்லியல் சான்றுகள் தமிழர்கள் மற்றும் தென்னிந்திய மக்களிடம் நிலவி வந்த மதச்சார்பற்ற கலாச்சாரத்தை மறுக்க முடியாத அளவில் அறிவியல் ஆதாரங்களை முன் வைத்துள்ளது. கீழடி தொல்பொருள் ஆராய்ச்சிக்கு தலைமை ஏற்ற இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா பல அறிக்கைகளை தந்து உறுதி செய்துள்ளார். இதுவரை கிடைத்த தரவுகள் படி, கி.மு.800 க்கு முந்தைய காலத்தில் குடியிருப்புப் பகுதி இருந்ததை அறிவியல் சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது.

நீண்ட நெடுங்காலம் முன்பு இருந்த விலங்குகளின் எச்சமாக எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டு, அறிவியல் பூர்வமாக அதன் காலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவைகளை எல்லாம் ஏற்று, இன்னும் புதுப்புது தொல்பொருள் ஆய்வு மையங்களை அமைத்து தொன்மை வரலாற்றை, எதிர்கால தலைமுறைக்கு கையளித்து செல்வது நாகரிக சமூகத்தின் கடமை. தொல்லியல் ஆய்வறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா, தனது குழுவின் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றையும் எல்லா சோதனைகளையும் தாண்டி நிலை நிறுத்தியுள்ளார்.

சனாதனவாதிகளும், வரலாற்றை புரட்டி, தன் வசமாக்கிய சித்தரிப்புகளை செய்த புனைவு புரட்டர்களும் தமிழர் தொன்மை வரலாற்றை மூடி மறைத்து வந்த “சதி” செயல்கள் வெளிப்பட்டு வருவதால் ஆதிக்க வர்க்கம் பதற்றமடைந்து வருகிறது.

ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் செகாவத், கீழடி ஆய்வில் கண்டறிந்த தரவுகளுக்கு அறிவியல் ஆதாரம் இல்லை என கூறுவது தமிழர் தொன்மை வரலாற்றை மறுக்கும் வன்மத்துடன் அணுகும் செயலாகும். சர்வதேச ஆய்வறிஞர்கள் பலர் உறுதி செய்துள்ள திராவிட, தமிழர் நாகரிகம் தொன்மை நாகரிகம் என்பது நாள்தோறும் உறுதிப்பட்டு வருகிறது. இதனை வரலாறு உறுதி செய்து தீர்ப்பெழுதும் போது, வரலாற்றை திரித்து கூறிய கருத்துக்கள் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories