தமிழ்நாடு

'சார்' என்றது மிரட்டலுக்காக சொல்லப்பட்டது: ஞானசேகரன் வழக்கில் நீதிபதி தீர்ப்பின் முழு விவரம் உள்ளே !

'சார்' என்றது மிரட்டலுக்காக சொல்லப்பட்டது: ஞானசேகரன் வழக்கில் நீதிபதி தீர்ப்பின் முழு விவரம் உள்ளே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து பிப்ரவரி மாதம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

பின்னர் அந்த குற்றப்பத்திரிக்கை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி விசாரித்தார். வழக்கில், ஞானசேகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்த நீதிபதி, கடந்த ஏப்ரல் முதல் வழக்கில் சாட்சிகள் விசாரணையை துவங்கினார்.

28 அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, அனைத்து விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, கடந்த மே 28 ம் தேதி, ஞானசேகரனுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவரை குற்றவாளி என அறிவித்த நீதிபதி எம். ராஜலட்சுமி, ஜூன் 2 ம் தேதி தண்டனை விவரங்கள் தெரிவிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி ஜூன் 2-ம் தேதியான இன்று ஞானசேகரை காவல்துறைபுழல் சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது நீதிபதி எம்.ராஜலட்சுமி பிறப்பித்த 207 பக்க விரிவான தீர்ப்பில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகருக்கு ஆயுள் தண்டணை விதிப்பதாகவும் குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் தண்டனையும், அவருக்கு தண்டனை குறைப்பு எதுவும் வழங்கக்கூடாது எனவும் தீர்ப்பளித்தார்.

'சார்' என்றது மிரட்டலுக்காக சொல்லப்பட்டது: ஞானசேகரன் வழக்கில் நீதிபதி தீர்ப்பின் முழு விவரம் உள்ளே !

நீதிபதி எம். ராஜலட்சுமி பிறப்பித்துள்ள விரிவான உத்தரவில், ஞானசேகர் மீதான பிஎன்எஸ் சட்டப்பிரிவுகள்

* 329 ( விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல்) குற்றத்துக்காக 3 மாதம் சிறை தண்டனை.

* 126(2) (செல்ல விடாமல் தடுத்து நிறுத்துதல்) குற்றத்துக்காக 1 மாதம் சிறை தண்டனை,

* 87 (வலுக்கட்டாயமாக கடத்தி சென்று ஆசைக்கு இணங்க வைத்தல்) குற்றத்துக்காக 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம்.

* 127(2) - ( உடலில் காயத்தை ஏற்படுத்துதல்) குற்றத்துக்காக ஓராண்டு சிறை தண்டனை.

* 75(2) (விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல்) குற்றத்துக்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை.

* 76 ( கடுமையாக தாக்குதல்) குற்றத்துக்காக 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம்.

* 64(1) ( மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தல்) குற்றத்துக்காக ஆயுள் தண்டனை. இதில் குறைந்த பட்சம் அவருக்கு 30 ஆண்டுகளுக்கு எந்த தண்டனை குறைப்பும் செய்யக்கூடாது. ரூ. 25 ஆயிரம் அபராதம்.

* 351(3) ( கொலை மிரட்டல் விடுத்தல்) குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம்.

* 238(பி) (பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்) குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

* மேலும் தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66(இ) (தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டுதல்) குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம்.

* தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் பிரிவு 4-ன் கீழான குற்றச்சாட்டுக்காக தண்டனை இல்லை. ஏனெனில் பாலியல் குற்றச்சாட்டுக்கான பிரிவில் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த பிரிவில் தண்டனை விதிக்கப்படவில்லை. மொத்தம் ரூ. 90 ஆயிரம் அபராதத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும். அபராதத்தை செலுத்து தவறும்பட்சத்தில் ரூ. 18 மாதங்கள் அவர் சிறை தண்டனையை அனுபவி்க்க வேண்டும். இந்த தண்டனைகள் அனைத்தையும் அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும், என தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கென நீண்ட நெடிய வரலாறு உள்ளது. இந்த வளாகத்தில் தான் கிண்டி பொறியியல் கல்லூரி உள்ளது. உலகளவில் தனிப்பட்ட நற்பெயர் உள்ளது. இந்த வளாகத்துக்குள் படிக்கும் மாணவர்களில் 97 சதவீதம் பேர் முன்னணி நிறுவனங்களில் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது ஆவணங்களை பார்க்கும் போது தெரிகிறது. பல்வேறு கனவுகளுடன் உரிய கல்வி தகுதியுடன் வந்த மாணவியை பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஞானசேகர், பல்கலைக்கழகம் மட்டும் அல்ல ஓட்டு மொத்த சமூகத்தையும் அவமதிப்பு செய்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை அனுமதிக்கவும் முடியாது.

'சார்' என்றது மிரட்டலுக்காக சொல்லப்பட்டது: ஞானசேகரன் வழக்கில் நீதிபதி தீர்ப்பின் முழு விவரம் உள்ளே !

கடந்த 2010 முதல் தற்போது வரை இ்ந்த வழக்கு இல்லாமல் 37 குற்ற வழக்குகள் ஞானசேகர் மீது பதியப்பட்டுள்ளது. இதில் 5 வழக்குகளில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சில வழக்குகளில் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பல வழக்குகள் இன்னும் விசாரணை நிலையில் உள்ளது. இதே போன்ற தன்மையுடைய வழக்குகளில் ஏற்கனவே ஞானசேகர் ஈடுபட்டு அது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. எனவே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எந்தவொரு கருணையும் காட்ட முடியாது. எனவே பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

அதேபோல வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகர், சார் என்ற வார்த்தையை பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றும் நோக்கில், தானும் பல்கலைக்கழக ஊழியர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி திசைதிருப்பவும், மிரட்டவும் பயன்படுத்தியுள்ளார் என்பது அறிவியல்பூர்வமாகவும், நேரடி சாட்சிகள் மூலமாகவும் தெரியவந்துள்ளது. எனவே இந்த வழக்கில் அவர் ஒருவர் மட்டும் தான் குற்றவாளி என்ற அரசு தரப்பு வாதத்தை இந்நீதிமன்றம் திருப்தியுடன் ஏற்றுக்கொள்கிறது.

அதேபோல பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை கசியவிட்ட காரணத்துக்காக அப்பெண்ணுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது இந்த நீதிமன்றமும் அபராதத்தொகை ரூ. 90 ஆயிரத்தை அப்பெண்ணுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது. தவிர கூடுதல் இழப்பீடு வழங்குவது தொடர்பாக சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படுகிறது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories