தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் வருகிற ஜூலை 25ஆம் நாளுடன் ஓய்வு பெற இருக்கும் நிலையில், அந்த இடங்களுக்கான தேர்தல் வருகிற ஜூன் 19ஆம் நாள் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 234ஆக இருக்கும் நிலையில், தி.மு.க 134 உறுப்பினர்களையும், கூட்டணி கட்சிகள் 25 உறுப்பினர்களையும் பெற்றுள்ளன.
ஆகையால், காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான 6 இடங்களில், 4 இடங்கள் தி.மு.க கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற ஜூன் 2ஆம் நாள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தி.மு.க வேட்பாளர்களாக பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். திமுக கூட்டணியில் இருக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
அதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கமல்ஹாசன் நன்றி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், " மாநிலங்களவையில் எனது குரல் தமிழ்நாட்டிற்கானதாக இருக்கும். நான் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு குரல் கொடுத்து வருகிறேன்.
எந்த மொழி குறித்தும் நான் தவறாக பேசவில்லை. அப்படி பேசி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டு இருப்பேன்; சிலர் அரசியல் காரணத்திற்காக என்மீது வன்மத்தை கொட்டுகிறார்கள். அவர்களிடம் மன்னிப்பும் கேட்க மாட்டேன், பதிலும் சொல்ல மாட்டேன்.
அனைத்து மாநில மக்கள் மீதும் என் அன்பு தொடர்ந்துக்கொண்டே இருக்கும். இது ஜனநாயக நாடு. சட்டத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். மக்கள் நீதி மய்யமும், நானும் திமுகவுடன் இருக்க வேண்டியது நாட்டிற்கு தேவை, அதனால்தான் திமுகவுடன் பயணிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.